பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்…


திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள்.

இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம் ( குறிப்பாக சிவபுராணம்) பாடப்படுகிறது.

தாரை தப்பட்டை ராஜா சாரின் ஆயிரமாவது படம்.
அதன் பின்னணி இசையில் இரு வேறு இடங்களில், ராஜா சார் திருவாசகத்தில் இருந்து இரண்டு பாடல்களுக்கு இசை சேர்த்து உலவ விடுகிறார்.

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602

Project Madurai என்கிற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

ஒன்றிரண்டு முறை கேட்டாலே பாடலின் பொருள் ஓரளவுக்குப் புரிந்துவிடும்.

நான் படித்துப் புரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.
“செங்கமல மலர் போன்ற அழகான சிவபெருமானே, நான் உன் அடியவர்களைப் பார்க்கிறேன்.
உன் காலடியில் சேர்த்துக் கொள் என உன் மீது பைத்தியமாய் ஆகி, பிதற்றி உழல்கிறார்கள்.
நான் அந்த அளவுக்கு இன்னும் பண்படவில்லை;பற்றில்லாதவனாய் ஆகவில்லை; பணிவு என்னிடம் இல்லை.
ஆனாலும் நானும் உன் அடியார்கள் கூட்டமாய் நிற்கின்ற இந்த இடத்திலே, அவர்களுள் ஒருவன் போல ஒட்டிக் கொண்டு நின்று கொள்கிறேன். நீ அவர்களுக்கெல்லாம் அருளும் வேளையில் அப்படியே எனக்கும் முக்தியைக் கொடுத்துவிடேன். முத்து போன்றவன் நீ, நல்ல மணி போன்றவன் அல்லவா, தயவு செய்து எனக்கும் சேர்த்து அருள் செய்துவிடேன்…”

இசைஞானியின் இசைக்கு, என் புகழாரம் தேவையில்லை. சத்யபிரகாஷ் மற்றும் சுர்முகிக்கு நம் பாராட்டுகளைப் பகிர வேண்டும். இசைக்கும், பாடலின் பொருளுக்கும் சிறிதும் குறையில்லாது பாடி இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நண்பர் (அவர் பெயரே சிவக்குமார், சிவ பக்தர் தாம்) இந்தப் பாடலை என் குரலில் பதிவு செய்ய உதவினார். கீழே இருப்பது அதே பாடல் என் குரலில்.

கேளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். நன்றி.

 

Tags: , , ,

Got anything to say? Go ahead and leave a comment!