நான் கடவுள் – இன்னும் சில தினங்களில்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, “நான் கடவுள்” திரைப்படம் இன்னும் சில தினங்களில் [ஃபிப்ரவரி 6 – வெள்ளியன்று] வெளியாகிறது.
மற்றவர்களின் விமர்சனம் எதுவும் வெளிவருவதற்கு முன் பார்த்துவிட ஆசை. பார்ப்போம்.

இப்போதைக்கு இதைப் படியுங்கள். பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

மறுமொழி இல்லை இதுவரை

தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கிறுக்கல்ஸ்.காம் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

மறுமொழி இல்லை இதுவரை

அலிபாபா – திருப்பங்கள் நிறைந்த பாதை

Alibaba சமீப காலத்திய தமிழ் சினிமா சில வித்யாசமான படங்களைத் தருகிறது.
புதிய இயக்குனர்கள் மிகவும் சிரத்தையுடன் கதை சொல்ல வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு புதிய இயக்குனர் ‘நீலன் கே சேகர்’ என்பவரின் படம் தான் “அலிபாபா”.
திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, படத்தின் விறுவிறுப்பு, பிரகாஷ்ராஜின் நடிப்பு, புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நாயகன் கிருஷ்ணாவின் நடிப்பு [ஏற்கெனவே அஞ்சலி படத்தில் வரும் குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர்] என படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாய் உள்ளது.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவரிடன் இன்னும் எதிர்பார்க்கிறோம்.

இன்னும் நன்றாக ஓடியிருக்கவேண்டிய படம். ஒருவேளை “அலிபாபா” என்று சம்பந்தமே இல்லாமல் பெயர் வைத்ததால் தான் ஓட வில்லையோ?

3 மறுமொழிகள் இதுவரை

காதல் என் வாழ்வில் – ரவி, ஹரி, சூப்பர் சிங்கர் 2008

சில வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 2008 [Super Singer 2008] நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்தப் பாடலை போட்டியில் பங்கேற்றுக் கொண்டிருந்த, ரவி மற்றும் ஹரி [சகோதரர்கள்] பாடத் தொடங்க, ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன்.

What an excellent Composition!!!

இந்தப் பாடல், அவர்களே இயற்றி இசையமைத்த பாடல் என்பது தெரியாமல், உடனே இணைய வலையில் போய் “காதல் என் வாழ்வில்” என்று தேடிக் கொண்டிருந்தேன். ஒன்றும் அகப்படவில்லை. [ஒருவேளை எதிர்காலத்தில் யாரேனும் தேடும்போது இந்தப் பதிவு தென்படலாம்].

பிறகு YouTube-இல் “Super Singer 2008” என்று தேடிப் பார்த்து, சில பல எபிசோடுகளைக் கடந்து இந்தப் பாட்டைக் கண்டுபிடித்தேன்.
கேட்டு மகிழுங்கள். [பாடல் மட்டும் கேட்க விரும்பினால், ஒரு நிமிடம் வரை ஓட்டி விடுங்கள்(Forward)].

மறுமொழி இல்லை இதுவரை

"பூ" – படத்தின் பாடல்கள்

பூ திரைப்படம்எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய பாடல்கள், வெளிவர இருக்கும் “பூ” என்கிற திரைப்படத்தில் இருக்கிறது.
இயக்குனர் “சசி” ஏற்கெனவே நல்ல படங்களைக் [உ.ம். சொல்லாமலே, டிஷ்யூம்] கொடுத்த இயக்குனர். பொதுவாக இவர் படத்தில் பாடல்களும் சிறப்பாகவே அமைந்து இருக்கும்.
இந்தப் படத்தில் குறிப்பாக சின்மயி பாடிய “ஆவாரம் பூ”, குழந்தைப் பாடகர்களால் பாடப்பட்ட “ச்சூ ச்சூ மாரி” இரண்டு பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது. கேட்டுப் பாருங்கள்.

5 மறுமொழிகள் இதுவரை

கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ [kanden seethaiyai]

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் பதிவின் பாடல்.
Listeners Choice by Bombay Jayashreeபாடல் : கண்டேன் சீதையை
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
இசைத் தொகுப்பு: Listener’s Choice – Sold online at Amazon.com
ராகம்: பாகேஸ்ரீ [Bageshri]
தாளம்: ஆதி [திஸ்ர நடை]

அனுமன் இலங்கை சென்று, சீதையைக் கண்டு திரும்பி வந்து ராமனிடம் சொல்வதைச் சொல்லும் பாடல். அனுமனின் வரவுக்கும், அவர் சொல்லப் போகும் செய்திக்குமாய், ராமனும் மற்றவர்களும் ஆவலாய்க் காத்திருக்கின்றனர். அவர்கள் ஆவலை உணர்ந்து, அனுமன் “கண்டேன்” என்ற வார்த்தையை முதலில் சொல்லித் தொடங்குகிறார். இந்தப் பாடலும் இதற்கு முந்தைய பாடலும், அருணாச்சலக் கவிராயர் எழுதிய “ராமநாடகம்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

பல்லவி:
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா….நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா..

அனுபல்லவி:
அண்டரும் காணாத லங்காபுரியில்…(2)
அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவைக்
(கண்டேன்)

சரணம்:
பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப்
பகலோரு யுகமாக் கழித்தாளே பிரயாசி (2)
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர
சீச்சி நில்லடா என்று ஏசி… (2)
தனித்து தன் உயிர் தன்னை தாங்கிட மகராசி (2)
சாரும்போதே
நானும் சமயம் ஈதே வாசி
இனி தாமதம் செயல் ஆகாதென்றிடர் மீசி
ராமா ராமா ராமா என்றெதிர் பேசிக்…
(கண்டேன்)

கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ
[audio:kanden-seethaiyai.mp3]
இந்த ராகத்தைக் கேட்க YouTube-இல் தேடியபோது கிடைத்தது…அதையும் ரசியுங்கள்.
Read more »

7 மறுமொழிகள் இதுவரை

எப்படி மனம் துணிந்ததோ- பாம்பே ஜெயஸ்ரீ

அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன்.
இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho]
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
ராகம்: ஹுசைனி
இசைத்தொகுப்பு: அமிர்தம்

ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப தசரதன் முடிவு செய்துவிட, “நான் சென்று வருகிறேன்” என சீதையிடம் விடைபெற விழைகிறான் ராமன். அதற்கு சீதையின் பதிலாக வருகிறது இந்தப் பாடல்.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் உணர்வுகளைக் குழைத்து வரும் பாடலைக் கேட்க இங்கே கிளிக்குங்கள்.
அமிர்தம் on ராகா.காம்.

பல்லவி:
எப்படி மனம் துணிந்ததோ? சுவாமி!
எப்படி மனம் துணிந்ததோ, சுவாமி?
வனம் போய் வருகிறேன் என்றால்
இதை ஏற்குமோ பூமி?
(எப்படி)
அனுபல்லவி:
எப்பிறப்பிலும் பிரியேன், விடேன் என்று கைதொட்டீரே..(2)
ஏழையான சீதையை நட்டாற்றில் விட்டீரே…(2)
சரணம்:
கரும்பு வில் முறித்தாற் போலே தள்ளாலாச்சுதோ?
ஒரு நாளும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ? (2)
வருந்தி வருந்தி தேவரீர் மெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல (2)
இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ?
என்னை விட்டுப்
பிரிகிறேன் என்று சொல்ல….
(எப்படி மனம் துணிந்ததோ)

4 மறுமொழிகள் இதுவரை

இளையராஜா, ஜென் தத்துவம் மற்றும் ஒரு காலிப் பாத்திரம்

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதில் ஒரு கதை இப்படிப் போகிறது.

ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி இருக்கிறார்.
பேராசிரியர் பதட்டமாக “கோப்பை நிறைந்து இருக்கிறது. இதற்கு மேல் எவ்வளவு ஊற்றினாலும் அது தங்காது. வழிந்து வெளியேறிவிடும்.” என்கிறார்.
துறவி நிதானமாக “நீயும் இந்தக் கோப்பை போல தான் இருக்கிறாய்; முதலில் உன் கோப்பையைக் காலியாக்கு, அதற்குப் பின் நாம் ஜென் பற்றிப் பேசுவோம்” என்கிறார்.

இதைப் படித்துக் கொஞ்ச நேரத்தில், யதேச்சையாய், ராஜா சார், கல்கி இதழுக்கு, 1997-இல் கொடுத்த ஒரு பேட்டியின் PDF வடிவத்தைப் படிக்க நேர்ந்தது.
அதில் ராஜா சார் இந்தக் கதையின் சாரத்தையே குறிப்பிடுகிறார்.

இளையராஜாசினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப் போன விஷயம்.இதற்குத் தான் மக்கள் தலையாட்டுவார்கள்.
என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால் தானே நான் அதில் ஏதாவது போட முடியும்?
நீங்கள் கொண்டுவருகிற போதே, அதில் எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டுவருகிறீர்கள். அதற்கு மேலும் அதில் நான் எதைப் போட முடியும்?

முழுப் பேட்டியையும் படிக்கக் கீழே கிளிக்குங்கள்.
கல்கியில் வெளிவந்த இளையராஜாவின் பேட்டி – PDF வடிவில்.

7 மறுமொழிகள் இதுவரை

சுஜாதா – வி மிஸ் யூ!

பாடப் புத்தகங்கள் தவிர்த்து, மற்ற புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த போது ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ஆரம்ப காலத்தில் படித்தது முக்கால் வாசி கதைகளும் நாவல்களும்.

சுவாமிமலை அரசு நூலகத்தில் அப்போது நான் உறுப்பினராவதற்காய், தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கி வந்தது ஞாபகம் இருக்கிறது.
அரசு நூலகத்தில் அதிகம் கிடைத்தது சிவசங்கரி, லக்ஷ்மி, ஜெயகாந்தன் மற்றும் தி.ஜானகிராமன்.
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுபா போன்றவர்களின் கிரைம் நாவல்கள் அங்கே கிடைக்காது. அதெல்லாம் தின வாடகைக்கு [ஒரு நாளைக்கு 25 காசு] செட்டியார் கடையில் வாங்கிப் படித்தது.

இப்படி ஏதோ ஒரு நாளில், எங்கேயோ என் கண்ணில் சிக்கியது ஒரு சுஜாதாவின் நாவல்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

இது சொல்லுக்கு மட்டுமல்ல, நல்ல எழுத்துக்கும் அஃதே இலக்கணம்.
முதல் நாவலிலேயே படித்தவரை பிணைத்துவிடக் கூடிய எழுத்து.
மிக முக்கியமாகக் கவர்ந்தது, கதையைப் படிப்பவருடன் நேரடியாகப் பேசுவது போன்ற த்வனியில் எழுதும் சுஜாதாவின் நடை.
எடுத்த எடுப்பிலேயே “நீங்கள் குப்புசாமியோ, ராமசாமியோ, இப்ராஹிமோ, பீட்டரோ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்” என்பது போல தொடங்குவார்.

அவரது எழுத்து நடை, படிப்பவர் ஒவ்வொருவருடனும் சொல்லப் படாத ஓர் அன்னியோன்னியத்தை தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கதைகளை இப்போது படித்தாலும் அது வெளிப்படுகிறது.

அதெல்லாம் சரி, இந்தப் பதிவு எழுத என்ன காரணம்?

சுஜாதாவைப் போல எழுதக் கூடியவர்கள் வரலாம். சுஜாதா போல, கற்றதும் பெற்றதும் தருவதற்கு இப்போதைக்கு யாரும் இல்லை.
நல்ல கவிதைகளை, ஹைக்கூக்களை, வெண்பாக்களை அவர் போல தெரிந்தெடுத்துப் பகிர்ந்து கொள்ள யாருமில்லை. ‘கற்றதும் பெற்றதுமி’ல் அவர் சுட்டிக்காட்டிய சில நல்ல கவிதைகளைக் கீழே பதிக்கிறேன். நீங்கள் படியுங்கள்.

கண்ணீரைப் படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
நீலமணி

புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை.
நா.முத்துக்குமார்

சுஜாதா – வி மிஸ் யூ.

2 மறுமொழிகள் இதுவரை

சுப்ரமணியபுரம் – ஒரு பார்வை [Subramaniapuram – A View]

Subramaniapuram Movie
நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, படம் வந்த சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. அதுதான் படத்திற்கான மொத்த விளம்பரமும் என்று நினைக்கிறேன்.
தற்போதெல்லாம் தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
“சித்திரம் பேசுதடி” -யில் மிஷ்கின், “பொல்லாதவன்” – வெற்றிமாறன், என மிரட்டிய இயக்குனர்களின் வரிசையில் தானும் இடம் பிடிக்கிறார் “சுப்ரமணியபுரம்” – சசிகுமார்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிய முகங்கள், படத்தின் எதார்த்தமான பின்னணிக்கு மிகவும் உதவுகிறார்கள். இயக்குனர் சசிகுமார், “பரமன்” என்கிற ஒரு கேரக்டராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளார்.
காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்தக் காலத்திய சினிமா போஸ்டர், அந்தக் காலத்து ஃபோன் என 1980-களை நம் கண் முன் நிறுத்தும் நேர்த்தியான கலை அமைப்பு [Art Direction] பாராட்டுக்குரியது.

வசனங்களில், மதுரைத் தமிழுடன் எதார்த்தமும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

இந்தப் படத்தின் “கண்கள் இரண்டால்” பாடல் மிக அருமை, அதுபற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். பின்னணியில் ரேடியோவில் ஒலிக்கும் “சிறு பொன் மணி அசையும்” பாடல், சரோஜ் நாராயணசுவாமி வாசிக்கும் செய்திகள் எனப் படத்தின் பின்னணி இசையிலும் கவனத்துடன் செயல் பட்டு இருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

படத்தில் நடிப்பு என்று பிரித்து அறியும்படி எதுவும் தெரியாததால், நடித்தவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம், எதார்த்தமான மனிதர்களைப் பற்றிய நல்லதொரு திரைப்படம் (சற்றே அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும்).
கிறுக்கல்ஸ்.காம் மதிப்பெண் : 65%

சில சுட்டிகள்.

மறுமொழி இல்லை இதுவரை