இன்று பிறந்த நாள் – இசையராஜா

Ilayaraaja's Profile Imageஇன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள்
இசைஞானி திரு.இளையராஜா விற்கு
எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில.
1. கானா பிரபு – சில பாடல்களோடு
2. உன் இசை மீது ஒரு காதல்.

மறுமொழி இல்லை இதுவரை

தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்

ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல்.
ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல்.

பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை சேர்க்கும்போது ராஜா சார் சேர்த்துவிட்ட பாடலா எனக் குழம்பும் அளவுக்கு, காட்சியுடன் ஒன்றிய ஒரு பாடல்.

முதலில், சமாதி நிலையை அடைவதற்கு முன்னர், ஸ்ரீராகவேந்திரரே பாடுவது போலத் தொடங்குகிறது பாடல். அவர் கண்களில், நீல வண்ணக் கண்ணன் குழலோடு தோன்றி, அவரை “வா” என அழைக்கும் காட்சி தெரிகிறது. மாசில்லாத தூயனுடன் கலக்கும் ஆவல், அவர் குரலில் வெளிப்பட, மென்மையாகப் பாடலைத் தொடங்க “கே.ஜே.யேசுதாஸ்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

கண்ணனின் குழலோசைக்குப் பிறகு பாடல் தொடங்குகிறது.

அழைக்கிறான் மாதவன்…ஆநிரை மேய்த்தவன்…
மணிமுடியும் மயிலறகும்
எதிர்வரவும் துதிபுரிந்தேன்…
மாதவா…
கேசவா…
ஸ்ரீதரா…
ஓம்…

இப்போது தான் பாடலில் தாள இசை சேர்கிறது.
அதுவும் சீரான, சற்றே அதிக இடைவெளியில், இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட ஒரு வாழ்வைக் குறிப்பால் சொல்லும் ஒரு தாளம்.

தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…
வாடினேன் வாசு தேவா…வந்தது நேரமே…
ஞான வாசல் நாடினேன்.
வேத கானம் பாடினேன்
கால காலம் நான் உனைத்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…

காதில் நான் கேட்டது…வேணு கானாமிருதம்…

வேணு கானம் – என்றாலே குழலிசை தானே, அதுதான் ராஜா சார் அங்கே ஒரு சின்னத் துளியாக மெல்லிய குழலோசையை வைத்து இருக்கிறாரோ?

கண்ணில் நான் கண்டது…கண்ணன் பிருந்தாவனம்
மாயனே!
நேயனே!
மாசில்லாத தூயனே..
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே

இதற்குப் பிறகு ஸ்ரீராகவேந்திரர் இறைவனுடன் ஒன்ற, அவரது சீடர்கள் பாடுவதாகப் பாடல் தொடர்கிறது.
இறைவனுக்கும் பக்தனுக்கும் இருந்த மெல்லிய உறவைச் சொல்லிக் கொண்டு வந்த பாடல், இப்போது சீடர்களுக்கும் குருவிற்கும் இடையேயான பந்தத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறது.
முதலில் அவர் அருகில் இருக்கும் சீடர்கள் பாடுகிறார்கள். இதற்கு கணிரென்ற குரலுடைய “டி.எல்.மஹாராஜன்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…

இதற்கிடையில், மற்றொரு சீடர் [படத்தில் டெல்லி கணேஷ்], முக்தி நிலை அடைவதற்குள் தன் குருவைத் தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பாதையில் சில தடங்கல்கள் நேர்கிறது. அதையெல்லாம் தாண்டி எப்படியாவது குருவைத் தரிசிக்க வேண்டுமே என்கிற பதட்டத்துடன் இருக்கிற இந்த சீடரின் உணர்வைச் சொல்ல ஆரம்பிக்கிறது பாடல்.

ராஜா சார் எத்தனையோ திரைப்படக் காட்சிகளுக்குப் பின்னணி இசை சேர்த்துக் காட்சியில் கதா பாத்திரங்களின் உணர்வை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அது அவருக்கு சர்வ சாதாரணம்.
ஆனால் ஒரே பாடலில் இப்படிப் பல உணர்வுகளைக் காட்டுவது சற்று கடினம் தானே.
யேசுதாஸில் தொடங்கி, டி.எல்.மஹாராஜன் பாடும் போதே பாடல் சற்றே உயர்ந்த ஸ்தாயிக்குச் சென்று இருக்கிறது.
இப்போது அது இன்னும் உச்ச ஸ்தாயிக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த சீடர் குரலாய் ஒலிக்க வேறொருப் பாடகரும் வேண்டும்.
இதற்கு ராஜா சார் தேர்ந்தெடுப்பது “மலேசியா வாசுதேவன்”.

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப்பூ வண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதை தடையானதே…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே…
தாயாகி தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…

காட்சிகள் மாறி, திரும்பவும் ஸ்ரீராகவேந்திரர் இருக்கும் இடத்துக்கு வருகிறோம். சீடர்கள் உச்ச ஸ்தாயியில் தங்கள் குருவின் பெயரை மந்திரம் போல உச்சரிக்கிறார்கள்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா…

உணர்வுகளை இசையில் கொண்டுவருவதில் ராஜா ராஜா தான். என்ன சொல்கிறீர்கள்?
பாடலைக் கேட்க கீழே க்ளிக்குங்கள்..
[audio:SriRaghavendra-Thedineindevadeva.mp3]

படத்துடன் பார்க்க கீழே க்ளிக்குங்கள்…
YouTube – தளத்தில் ஏற்றிய செந்திலுக்கு நன்றி.
Read more »

13 மறுமொழிகள் இதுவரை

அறை எண் 305-ல் கடவுள்

அறை எண் 305-ல் கடவுள்
இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் வழங்கும் இரண்டாவது படைப்பு.
முதல் படைப்பான “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”யின் வெற்றி, இந்தப் படத்தின் மீது சற்றே எதிர்பார்ப்பைத் தூண்டி இருந்தது.
படத்தின் தலைப்பு, கஞ்சா கருப்பு, சந்தானம் எல்லாம் சேர்ந்து இது ஒரு முழு நீள காமெடிப் படம் என்று தோன்ற வைத்தது. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

இயக்குனருக்குப் பல விதமான விஷயங்களில், கருத்து கூறும் ஆர்வம் இருக்கிறது என்பது ஒன்று மட்டுமே தெரிகிறது. படம் முழுக்க அவரின் போதனைகளுக்குத் தான் நேரம் சரியாக இருக்கிறது.
கஞ்சா கருப்போ, சந்தானமோ அவர்களது இயல்பாய் நடித்திருந்தால் கூட, நகைச்சுவை மிளிர்ந்து இருக்கும். இயக்குனர் அதையும் விடவில்லை.

வித்யாசாகரின் இசையும் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை, “காதல் செய்” பாடல் சற்றே பரவாயில்லை.

கிறுக்கல்ஸ்.காம் மதிப்பெண் : 39 %
மொத்தத்தில் அறை எண் 305-ல் கடவுளின் போதனை.

4 மறுமொழிகள் இதுவரை

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் உளங்கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.

என் மகள் பிறந்த போது, என் மனைவி அருகில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். உலகத்தின் எல்லா தாயும் [என்னுடைய மற்றும் உங்களுடைய] வணக்கத்திற்குரியவர்கள்.

அன்னையர் தினத்திற்கான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

மறுமொழி இல்லை இதுவரை

நேபாளி – திரை விமர்சனம் [Nepali – Movie Review]

நேபாளி படம்
சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில், சற்றே கனமான திரைப்படம்.
இத்தனைக்கும், இயக்குனர் V.Z.துரை, கசப்பான மருந்தை இனிப்பு கலந்து கொடுப்பது போல, ஒரு சீரியஸ் விஷயத்தை, காதல் கலாட்டா, துப்பறியும் போலீஸ் என dilute செய்து தான் கொடுத்து இருக்கிறார்

படத்தின் பலம்:

தொய்வில்லாத திரைக்கதை
படத்தின் தொடக்கத்திலேயே மூன்று ‘பரத்’ களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள்.
அதிகக் குழப்பமில்லாமல், காட்சிகள் விரிகின்றன. சில காட்சிகள் [Original நேபாளி சிறைப் படுத்தப் படுவதற்கான காரணம், “அன்னையா” யார் என்பது போன்ற], ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் போகப் போகப் பிடிபடுகிறது. பரத், மீரா ஜாஸ்மின் இடையே நடக்கும் ஆரம்ப கால கலாட்டாக்களில் குறும்பு, ரசிக்க முடிகிறது.
பரத்
கமல், விக்ரம் வரிசையில் இடம் பிடிக்க, பரத் முயற்சி செய்கிறார். மூன்று வேடங்களிலும் தன் உடலை வருத்தி உழைத்திருக்கிறார்.
பின்னணி இசை
கதையை, சிச்சுவேஷனை [இதற்குத் தமிழில் என்னப்பா?] உணர்ந்து இசை அமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

பலவீனங்கள்

பாடல்கள்
இயக்குனர் கொஞ்சம் பாடல்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். இவரது முந்தைய படங்களான முகவரி, தொட்டி ஜெயா போன்ற படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட். இந்தப் படத்தில் catchy ஆக எந்த பாடலும் இல்லை.

மற்றவை

படம் வயது வந்தவர்களுக்கானது. சில காட்சிகள் நெஞ்சை உலுக்குவது போல் உள்ளது. பலவீனமான இதயத்தினர், பக்கத்து தியேட்டரில் “சந்தோஷ் சுப்ரமணியம்” பார்க்கலாம்.

மதிப்பெண்

கிறுக்கல்ஸ்.காம் வழங்கும் மதிப்பெண் : 55% [45 எடுத்தால் Pass]


திரை விமர்சனம் எழுதுவதில் இது என் முதல் முயற்சி. உங்கள் கருத்துக்களைக் கீழே கமெண்ட்டுங்கள்.

5 மறுமொழிகள் இதுவரை

சுஜாதாவின் பார்வையில்…சிறுகதை என்பது

சுஜாதா எழுதிய “சிறுகதை பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்கிற கட்டுரையைப் படித்தேன். அதில் இருந்து ஒரு துளித் தேன் இங்கே. இனி அவ்வபோது இது போன்ற விஷயங்களைப் பதிய முனைகிறேன்.

சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதி தான் அதற்கு.
சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. A short fictional narrative in prose. வேறு எந்த வரையறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது.


கதையை எப்படி சொல்ல வேண்டும்?
கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர, படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவும் இருக்காதே?
இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம் தான் எனக்குத் தெரிந்து. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையல்ல. பஸ் டிக்கட்.
ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருஷம் கழித்தோ, ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.

முழுவதுமாய்ப் படிக்க, இந்த PDF -ஐப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

6 மறுமொழிகள் இதுவரை

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு இந்த பதிவு.

எல்லோரும் இப்படித்தானா by கீதா.
மேகத்தை மூடும் மேகங்கள் by சேவியர்.
பொய் சொல்லக் கூடாது ஹிலாரி by சிறில் அலெக்ஸ்.
எவ்ளோ சம்பளம்? by சரவ்.

கிளிக்குங்கள் நேரமிருக்கும் போது.

மறுமொழி இல்லை இதுவரை

ராஜா-வின் முதல் பாடல்

ராஜா-ன்னு இந்த தளத்தில் எப்போ சொன்னாலும், அது இசைஞானியைத் தான் குறிக்கும்.

ராஜா சார் முதல் முதல்ல கம்போஸ் பண்ணின பாடல் எது? உங்களுக்குத் தெரியுமா?
அன்னக்கிளி படத்தில இருந்து “மச்சானைப் பார்த்தீகளா?” ன்னு சொல்றீங்க, அதானே?
:)

அதான் இல்லை.

என்ன பாட்டுன்னு கவிஞர் கண்ணதாசன் நினைவா நடந்த நிகழ்ச்சியில அவரே சொல்லி இருக்கார்.
அப்போ இந்தியாவின் பிரதமரா இருந்த “ஜவஹர்லால் நேரு” இறந்து விட்ட சமயம்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கண்ணதாசன் பாடல் எழுதி இருக்கிறார்.

சீறிய நெற்றி எங்கே
சிவந்த நல்லிதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை தான் போனதெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்த நன்னடைதான் எங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே..

இந்த பாட்டுக்குத் தான் ராஜா சார், முதல் முதலா இசை அமைச்சிருக்கார்.
பாடலைக் கேட்கணும்-னு உங்களுக்கும் ஆர்வமாய் இருக்குமே? கீழே கிளிக்குங்கள்.

[audio:ir-first-song.mp3]

ஒரே ஒரு மறுமொழி இதுவரை

கை வீணையை ஏந்தும் கலைவாணியே…

நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது.

சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும்.

நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993 அல்லது 1994ஆம் வருடம்.

அப்பொழுதுதான் முதன்முறை இந்தப் பாடலைக் கேட்டோம். கேட்டவுடனே மனதை மயக்கும் ஒரு தெய்வீகத் தன்மை அதில் இருந்தது. இது சினிமாப் பாடல் என நினைக்கவே இல்லை. பாம்பே ஜெயஸ்ரீயின் ஏதோ ஓர் ஆல்பம் என்று தான் நினைத்து இருந்தோம். அங்கே உள்ள சர்வரைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டோம் இது “வியட்னாம் காலனி” படப் பாடல் என்பதை.

அப்போதும் எங்களுக்குத் தெரியாது, இது தலைவரின் (இளையராஜா) மற்றுமொரு படைப்பு என்று.

என்ன ஒரு குழைவு. என்ன ஒரு பிர்க்கா… மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி செல்லும் ஒரு நதியின் லாவகம்.
அதில் ஒரு வரி. அதை எழுத்தில் சொன்னால்,
“உன் கோயில் எங்கும் நாதஸ்வரங்கள் கேட்கும்” என்று எழுதலாம், ஆனால் அது முழுமையாகச் சொல்வதாகாது.
பாடலைக் கேட்டால் உங்களுக்கே புரியும்.
[audio:http://kirukkals.com/wp-content/uploads/2007/05/kaiveenaiyai-yendhum-viyatnamcolony.mp3]

மறுமொழி இல்லை இதுவரை

சுஜாதா- ஒரு சகாப்தம்

சுஜாதா – என்கிற ரங்கராஜன் என்கிற, தமிழின் முக்கியமான எழுத்தாளர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் தூவிய எழுத்துக்கள் இன்றும் காற்றில் கலந்து இருக்கிறது.

வாசகனோடு இயல்பாய்ப் பேசும் எழுத்து நடை அவருடையது. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகங்கள், இன்றும் பல மறு பதிப்புகளைக் காண்கிறது.

இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி வணங்கும், அவரை மதிக்கும் கோடிக் கணக்கான வாசகர்களில் ஒருவனான அடியேன்.

2 மறுமொழிகள் இதுவரை