அப்பா யு ஆர் கிரேட்

அப்பா யு ஆர் கிரேட்…
உங்களுடைய அப்பா உங்களுக்கு கொடுத்தது பெயருக்கு முன்னால் ஒரு இனிஷியல்…
எங்களுக்கு நீங்கள் கொடுத்தது, பெயருக்கு பின்னாலும் இரண்டு எழுத்து…B.E பட்டம்
அப்பா யு ஆர் கிரேட்…

உங்களைப் பள்ளியில் சேர்க்கவோ, படிக்க வைக்கவோ ஒருவரும் உதவியதில்லை…
ஒவ்வொரு நிலையிலும் எங்கள் படிப்புக்கு நீங்கள் காட்டிய அக்கறை தானே எங்களைப் படிக்க வைத்தது…
அப்பா யு ஆர் கிரேட்…

உங்களுக்கு என்று உதாரண புருஷர்கள் யாரும் ஊரில் இல்லை…
ஆபிஸ் முடிந்ததும் தண்ணியடித்து விட்டு அலம்பல் செய்யும் கும்பல் தான் உங்கள் உடன் பணிபுரிந்தவர்கள்.
ஆனால் ஒருநாளும் தீய பழக்கங்களை நீங்கள் அண்ட விட்டதில்லை…
அப்பா யு ஆர் கிரேட்…

அப்போது நான் பிளஸ் 1 சேர்ந்து இருந்த நேரம்…
முதன் முதலாக ஆங்கில வழிக் கல்வி…
என்னை டியூஷனில் சேர்க்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி நான் அறிவேன்.
பிளஸ் 1 , பிளஸ் 2 விற்கு கல்லூரிப் பேராசிரியரிடம் டியூஷன்…
அந்த வருடம் டியூஷனே எடுப்பதில்லை என்று சொல்லி இருந்த அவர்,
பின்னாளில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ட்யூஷன் எடுக்க சம்மதித்தார்…
அதில் என்னையும் சேர்த்துக் கொண்டது, எனக்காக அல்ல…
அன்று அவரைப் பார்த்துப் பேசிய உங்கள் முகத்துக்காக…அதில் தெரிந்த அக்கறைக்காக…
அப்பா யு ஆர் கிரேட்…

திண்டுக்கல்லில் கல்லூரி விடுதியில் நாங்கள் தங்கி இருக்க,
சபரி மலை சென்று திரும்பும் வழியில் எங்களை வந்து பார்த்து விட்டு,
பிரசாதம் கொடுத்து விட்டுக் கிளம்பினீர்கள்.
பேருந்து நிறுத்தம் வந்து வழியனுப்ப வந்து இருக்கிறேன்..
செலவுக்குப் பணம் கொடுத்து விட்டு, கிளம்பும்போது என் கை குலுக்கி விட்டு
என்னைத் தோளோடு அணைத்து விடை பெற்றீர்கள்…
அதைப் பார்த்து இருந்த, அங்கே மெஸ் வைத்திருக்கும் அம்மா சொன்னார்…
“கொடுத்து வைச்சிருக்கனும் பா இப்படி ஒரு அப்பா கிடைக்க…”
அப்பா யு ஆர் கிரேட்…

தம்பியின் கல்யாணம் நடக்கிறது…
நம் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள்…
நான் மட்டும் வர முடியாமல் இங்கே அமெரிக்காவில் இருக்க வேண்டிய சூழ்நிலை…
திருமண நேரத்தில் தொலைபேசியில் அழைக்கிறேன்…
“ஹல்லோ அப்பா நான் சதீஷ் பேசுறேன்…”
என் குரலைக் கேட்ட உடன், நானும் அங்கு இருக்க முடியவில்லையே என்கிற துக்கத்தில்
உங்களால் பேசவே முடியவில்லை. நா தழுதழுக்க இரண்டு வார்த்தை பேசிவிட்டு
ஃபோனைத் தங்கையிடம் கொடுத்து விடுகிறீர்கள்…
இப்போது நினைத்தாலும் என் தொண்டை அடைக்கிறது…
அப்பா யு ஆர் கிரேட்…

எதை நான் சொல்வேன், எதை நான் விடுவேன்…
இந்த பூமியில் நீங்கள் தங்க இடம் கொடுக்கவில்லை ஆண்டவன்…
போனால் போகிறான்…
எங்கள் நெஞ்சத்தில் உள்ளதப்பா அத்தனை இடம்…
அதை எவராலும் அசைக்க முடியாது…
அப்பா யு ஆர் கிரேட்…
[சின்ன வயதில் நானும் அண்ணனும், அப்பாவுடன்]
[சின்ன வயதில் நானும் அண்ணனும், அப்பாவுடன்]

3 மறுமொழிகள் இதுவரை

2005 – சில நினைவுகள் – பகுதி 1

இதோ வந்துவிட்டது 2006.

அதே போல இந்த வருடத்தை நினைவு கூர்வதற்கும் இது சரியான நேரம் தானே ?

இந்த வருடத்தில் என் மனம் கவர்ந்த 5 பாடல்களைப் பற்றி இப்போது பேசுவோம். பிடித்த மற்றவை பற்றி அடுத்த பதிவில்.

5. ஐயங்காரு வீட்டு அழகே
படம்: அன்னியன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

கேளுங்களேன்

4.மயிலிறகே மயிலறகே

படம்: அன்பே ஆருயிரே
பாடியவர்கள்: மதுஷ்ரி, நரேஷ் ஐயர்
இசை: A.R.ரெஹ்மான்

கேளுங்களேன்

3.காற்றில் வரும் கீதமே

படம் : ஒரு நாள் ஒரு கனவு.
பாடியவர்கள் : ஹரிஹரன், இளையராஜா, பவதாரிணி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்.
இசை: எங்கள் தலைவரன்றி வேறு யார் ?

கேளுங்களேன்

2.உயிரே என் உயிரே

படம் : தொட்டி ஜெயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக், அனுராதா ஸ்ரிராம், பாம்பே ஜெயஷ்ரி
கேளுங்களேன்

1.ஒரு மாலை இள வெயில் நேரம்…
படம் : கஜினி
பாடியவர்கள் : கார்த்திக்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
கேளுங்களேன்

உங்களது டாப் 5 பாடல்களைப் பற்றி மறுமொழியுங்களேன்.

மேலும் தொடர்வோம்.

4 மறுமொழிகள் இதுவரை

சமீபத்தில் படித்ததில் பிடித்தது

தமிழ் படத்தில் டாக்டர் வசனங்கள்
தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா !
பிரிதல் -ஒரு கவிதை
லொட்டு லொஸ்க்கு – (நம்பர் தியரி)

3 மறுமொழிகள் இதுவரை

ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள்

ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள் இப்பொழுது புத்தக வடிவில்.

எளிதாக பிரதி எடுக்கும் வகையில்.

முதலில் தயாரித்தவர் : மதன் என்கிற ஒரு ரசிகர்.

இணையத்தில் பகிர்வது மட்டும் நான்.

திருவாசகம் புத்தக வடிவில்.

நன்றி.

5 மறுமொழிகள் இதுவரை

வானத்தின் மேல் நின்று

(குமாரின் பயணம் தொடர்கிறது..)

குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை…

ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு…
இது அவனுக்கே அவனுக்கான நேரம்…

அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்..
சில பாடல்களைக் கேட்ட உடன் பழைய நினைவுகள், மண்டைக்குள் சுரக்கும்.
சில பாடல்கள் மகிழ வைக்கும்,
சில அவனை நெகிழ வைக்கும்,
சில அவன் மூளையைத் துளைக்கும், (இது என்ன ராகமோ என்று)
மற்றும் சிலவோ அவன் இதயத்தை.

சமீபத்தில் ஒரு நாளில் அடிக்கடி Rewind ஆன பாடல் இது !

வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லை

அட அட, என்ன ஒரு கூர்மையான எழுத்து !

ஒரு விஷயத்தைக் கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்பொழுது, அதன் உண்மை வடிவங்கள் புலப்படும்..
எத்தனை எத்தனை பேதங்கள்…எல்லாம் யார் செய்தது ? மனிதன் தானே ?

நான்கு வரிகளில் மிக அழகாய் எழுதி இருக்கிறார்… (வைரமுத்து தானே ?)

இன்னும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிக்க, சிந்திக்க வைக்க கூடியது.
கேட்டுப் பாருங்கள்.

படம் : அமராவதி
பாடியவர் : அசோக்
இசை : பால பாரதி (ஆமா..இவர் என்ன ஆனார்….ஏதோ சொந்த ஊருக்கு போய் செட்டில் ஆகிட்டார்னு கேள்விப்பட்டேன். தெரியவில்லை. இதே படத்தின் ‘தாஜ் மஹால் தேவையில்லை’ பாடலுக்காக ராஜா சாரின் பாரட்டைப் பெற்றவர் இவர்…ஹும்ம்ம்)

Listen to the song here.
[audio:udal_enna.mp3]

உடலென்ன உயிரென்ன
உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே

ஓடும் நதியெல்லாம் கடலோடு
உடல் எல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே

இந்த வாழ்க்கை வாடிக்கை
வெறும் வாண வேடிக்கை
இன்பம் தேடி வாடும் ஜீவனெல்லாம்
தவிக்குது துடிக்குது !

சரணம் – 1

காதலைப் பாடாமல் காவியம் இங்கில்லை…
ஆனாலும் காதல் தான் பாவம்…
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்குக் கோபம்….

இது சாமி கோபமோ-இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதை எல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதை எல்லாம் கண்ணீரின் வரலாறு

உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம்—ஓ…
உலகத்தில் அது தானே சட்டம்..

சரணம் – 2
வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லை

இது பூவின் தோட்டமா – இல்லை முள்ளின் கூட்டமா…

முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல..
மரணத்தைப் போல் இங்கு வேறேதும் மெய்யல்ல..

நான் போகும் வழி கண்டு சொல்ல – ஓ…
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல..

2 மறுமொழிகள் இதுவரை

இதோ ஒரு வைர முத்து

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்

நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை இங்கே தெரிவதில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது
வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது

வைரமுத்துவின் இந்த பாடல் ‘ரயில் சினேகம்’ தொடருக்காக வந்தது.

நினைவில் தங்கியதை எழுத்தில் பதிக்கிறேன்.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

ஒரே ஒரு மறுமொழி இதுவரை

எங்க ஊரு பாட்டுக்காரன்

காலை நேரத்தில் அலுவலகம் நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான் குமார்.

அமெரிக்காவின் நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில்.

திடீரென்று குறுக்கே வரப் போவதில்லை எந்த ஆட்டோக்காரனும். பின்னால் இருந்து ஹாரன் அடிக்க போவதில்லை யாரும்.

நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, காரின் சிடி ப்ளேயரைத் தட்டி விடுகிறான்…

“பூ வைச்சி பொட்டும் வைச்சி மேளம் கொட்டி கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட எங்கே அந்த சந்தோஷம்…”

அது ஆஷா போன்ஸ்லெ வா, லதா மங்கேஷ்கரா ?உம்ம்ம்…ஆஷா போன்ஸ்லே தான்…

எதோ ஒரு மெல்லிய சோகம் கொண்டு வருவதற்காக, தேர்ந்தெடுக்கப் பட்ட குரலோ ?

“ராசாவே உன்னைத் தொட்டு நானும் வாழ மாட்டேனா
என் வீட்டுக்காரர் பாட்டும் காதில் கேட்க மாட்டேனா ”

இழைந்தோடுகிறது இன்னிசை…

ஒரு ஏக்கம் தொனிக்கும் பாடல்… பாடலின் இசை மட்டுமல்ல…வரிகளும் சேர்ந்து தான் இந்த தாக்கத்தை தர முடியும்…தனக்குள் நினைத்துக் கொள்கிறான்…

பாடலைக் கேட்ட எந்த ராசனும் கொஞ்சமாவது இரங்கியே ஆக வேண்டும்…

மீண்டும் பல்லவிக்கு வருகிறது பாடல்…

“செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே
செர்ந்திருந்தால் சம்மதமே…”

இன்னும் கொஞ்சம் நீட்டியிருந்தால், கர்னாடக இசைப் பாடலின் தோற்றம் வந்திருக்கும்..

ராஜா வுக்கு தெரியாதா என்ன ?

ஆஷா போன்ஸ்லேயின் குரலில், ஒரு சில வார்த்தைகள் சொதப்பலாய் வருகிறது…தமிழ் பாடகியாய் இருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்குமோ…(ஆமா, இங்கே யாரு தமிழ்ப் பாடகி ? ஜானகி-தெலுங்கு, சுஜாதா,சித்ரா,சுவர்ணலதா-மலையாளம்…அனுராதா ஸ்ரிராம் -தமிழோ? )

Listen
[audio:senbagame.mp3]


வழியில் நிறுத்தி, ஒரு காஃபி வாங்கிக் கொள்கிறான்…

எந்த ஊரா இருந்தா என்ன, காலையிலெ ஒரு காஃபி குடிக்கிற பழக்கம் மட்டும் மாறாதே…

மீண்டு(ம்) வந்து தன் வண்டியைக் கிளப்புகிறான்…
சிடி தொடர்கிறது…அதே படத்தில் அடுத்த பாடலுடன்…

“மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே, (தனன தனனா)
பாட்டு வண்டியைத் தான் கூட்டிகிட்டு போவான்..(அட தனன தனன)

ஏழூரு கேட்குமய்யா இவனோட பாட்டு சத்தம்”

“எங்க ஊரு பாட்டுக்காரன் — அய்யா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…”

“அடேங்கப்பா…. நம்ம ஊருலே இது போல பாட்டுக்காரன் யாரு இருக்கா ?” குமார் யோசித்தான்…

உம்…நம்ம ஊருக்கு(ம்) இளையராஜா தான் பாட்டுக்காரன்…வேற யாரு ?

(மேலும் தொடரும் பயணம்…)

ஒரே ஒரு மறுமொழி இதுவரை

கல்லெறிதல்

தினம் ஒரு கவிதை என்றொரு யாஹு குழு உண்டு…தற்போது முழு மூச்சாக இயங்கவில்லை எனினும் அதில் நான் ரசித்த கவிதைகள் நிறைய உண்டு…

அதில் சில கவிதைகளை மீண்டும் பதிப்பிக்கிறேன் உங்களுக்காக.

கல்லெறிதல்

சாலையைச் செப்பனிடுவதற்காக
கொட்டப்பட்ட மணலில் தான்
கோவில் கட்டி விளையாடுவோம்

கலசத்திற்கு பதிலாக
ஒரு கொத்து காட்டாமினுக்கை
நட்டுவைப்போம்

நடுவிலொரு குழி பிரித்து
உருண்டையாய் களி மண்ணைப் பிடித்து
கர்ப்பக் கிரகம் அமைப்போம்.

காகிதப் பூவால் அலங்கரித்து
கன்னத்தில் போட்டுக் கொள்வோம்
சப்புக் கொட்டி.

எதன் பொருட்டாவது
கலைய நேரிடும்.,
மீண்டும் வந்து பார்க்க,
கலசத்தில் பட்டிருக்கும் நீரபிஷேகத்தில்
சற்றே கலைந்திருக்கும் அதன் உரு.
சோகத் தூவானமாய்க் கண்கள் அரும்பும்.

கோயிலைச் சிதைத்த நாயின் மீது
கல் விட்டெறிவர்
ஹமீதும் பீட்டரும்.

– எழுதியவர் : யுக பாரதி
– கவிதை வெளியானது : தினம் ஒரு கவிதை
– வெளியான தேதி : 26-02-2004

6 மறுமொழிகள் இதுவரை

எனக்கு நானே ஞாபகப் படுத்திக் கொள்ள

அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள் …

இந்த துளியை (பெரும் தமிழ் இணையத்தில் இது ஒரு துளி தானே) இத்துடன் துவக்குகிறேன்…

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ

– மகா கவி சுப்ரமணிய பாரதி

6 மறுமொழிகள் இதுவரை

Pages:«12345678