10

குறும்பு செய்ய விரும்பு

சிறுகதைப் போட்டிக்காக…

சென்னை எக்மோரில் அந்த ட்ரெயின் வந்து நிற்கும்போது, காலை மணி 6.30.
நகரம் அப்போதே பரபரப்பாகத் தொடங்கி இருந்தது…

ஒரு கையில் சூட்கேசும், தோளில் ஹேண்ட் பேக் ஒன்றும் சுமந்தபடி மெதுவாக பெட்டியில் இருந்து இறங்கினான் கண்ணன். அவன் கண்களைப் பார்த்தால், தூங்கி பல நாட்கள் ஆனது போல் இருந்தது. ஏதோ ஒரு கவலை அவன் கண்ணை சுற்றி இருந்தது.

எக்மோர் ரயில் நிலையக் கட்டிடத்தை நிமிர்ந்து ஏற இறங்கப் பார்த்தான்…
அம்மாடியோவ்….எத்தனை பழைய பில்டிங்…எத்தனை வருடம் ஆகியிருக்குமோ ? பிரிட்டிழ் காலத்தில் கட்டியது தானே ? எத்தனை பேரைப் பார்த்து இருக்கும் இந்த பில்டிங்…? தினம் தினம் பிழைப்பு தேடி இங்கு வந்து இறங்குபவர்கள் தான் எத்தனை பேர் ?
மிரட்சியுடன் ஏதேதோ சிந்தனையில் சுற்றுமுற்றும் பார்த்தபடி மெல்ல நடக்க ஆரம்பித்தான்…

எக்மோர் வாசலில் இருந்த ஒரு வேனில் தன் சகாக்களிடம் பேசிக் கொண்டிருந்த ராதா, இவனைப் பார்த்ததும் அவர்களிடம் கண்ணாலேயே சாடை காட்டிவிட்டு இவனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

எங்கோ பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த கண்ணனுக்குத் திடீர் என்று எல்லோரும் தன்னையே பார்ப்பது போல தோன்றியது…”சே..சே..பிரமையா இருக்கும்” என்று நடக்கும்போது, அந்த இளம் பெண், அவனை நோக்கி வருவதை கவனித்தான்…
அவளைப் பார்த்தும் பார்க்காதது போல நடந்தான்…
அவள் அவனுக்கு முன்னால் வந்து வழிமறித்தாள்….
ரா : “வாங்க சார், வணக்கம்…உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருந்தேன்…”
க : “நீங்க யாருன்னே எனக்குத் தெரியாதுங்க…வேற யாரோனு நினைச்சுக்கிட்டு எங்கிட்ட பேசுறீங்க…”
ரா : “இல்ல சார்…நான் உங்களைப் பார்க்க தான் காலைல இருந்து வெயிட் பண்றேன்.”
க : “சும்மா விளையாடாதீங்க மேடம்…நான் இப்ப தான் முத முதல்ல மெட்ராஸ் வரேன்…”

சொல்லிவிட்டு விடுவிடுவென வலது புறம் திரும்பி நடக்க ஆரம்பித்தான்….

ராதா அங்கேயே நின்று கொண்டு குரல் கொடுத்தாள்…
ரா : “சார்…நான் உங்களுக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோட வந்து இருக்கேன்…MRF ல சேல்ஸ் ரெப் வேலைக்கு.”

கண்ணன் ஒரு நிமிடம் நின்றான்…கண்களில் ஒரு மலர்ச்சி தெரிந்தது…
கண நேரத்தில் அந்த முகத்தில் ஆயிரம் உணர்ச்சி வெள்ளம்…

திரும்பி அவளை நோக்கி நடந்தான். ராதா மெல்லிய புன்னகையுடன் அவனிடம் கொடுப்பதற்காக அவள் பேக்கில் இருந்து அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை எடுத்தாள்.
க : “எனக்கென்னவோ நீங்க விளையாடுறீங்க னு தான் தோனுது…”
ரா : “இதோ பாருங்க, நான் என்ன செஞ்சா நீங்க நம்புவீங்க ?”

ஒரு நிமிடம் யோசித்தான்.
க : “எங்கே, இத்தனை பேருக்கு முன்னாலே எனக்கு ஒரு முத்தம் கொடுங்க பார்ப்போம்…”
(சும்மா விளையாடுற பொண்ணா இருந்தா, முத்தமெல்லாம் கொடுக்குமா என்ன ? )
ராதா அதற்கும் சளைக்கவில்லை…
கொஞ்சம் ஒரு முறை சுற்றிலும் பார்த்தவள், துணிந்து அவன் கன்னத்தில் லேசாக முத்தமிட்டு அவசரமாய் தள்ளி நின்று கொண்டாள்.
கண்ணனுக்கு இந்த உலகமே ஒரு நொடி ஸ்தம்பித்து மீண்டும் உயிர் பெற்றது போல் இருந்தது.
அவனால் நம்பவே முடியவில்லை…
க(கன்னத்தைத் தடவியபடியே) : “என்னங்க இது…ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேங்க….”

ஆசையுடன் அவளை ஓரக் கண்ணால் பார்த்தபடியே அவள் கொடுத்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைப் பிரித்தான்…

க : “என்னங்க இது என் பேரே போடல…”

கலகலவென சிரிப்பொலி எங்கும் கேட்டது…ராதா பின்புறத்தில் வேனில் இருந்த தன் சகாக்களுக்கு சாடை காட்ட, அவர்களும் சிரித்தபடி வேனில் இருந்து இறங்கி இவனை நோக்கி வந்தனர்…எல்லோர் முகத்திலும்சிரிப்பு கரை புரண்டது…
ராதா சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினாள்…

ரா : “ஸாரிங்க . உங்க கிட்ட உண்மையை சொல்லிடுறேன்…நான் Q TV ல இருந்து “குறும்பு செய்ய விரும்பு” ப்ரொகிராமுக்காக ஒரு சின்ன ஐடியா பண்ணினோம்… திடிர்னு எக்மோர் ல இறங்குற ஒரு வேலை தேடுற பையன் கிட்டே இப்படி பேசினா என்ன ஆகும் னு…”
அம்மாடியோ…அப்படியே நம்பிட்டீங்களே சார்…ரொம்ப பாவம் சார் நீங்க…இந்த ஊர்ல எப்படித்தான் பொழைக்கப் போறீங்களோ …”

சிரிப்பை அடக்க பெருமுயற்சி செய்து கொண்டு இருந்தாள்..
அவளின் சகாக்கள் இப்பொழுது சிரித்துக் கொண்டே கண்ணனின் கையைப் பிடித்துக் குலுக்கினர்….
கண்ணனுக்கு முகமெல்லாம் வாடிப் போய் இருந்தது…மெல்ல அவள் முத்தம் கொடுத்த கன்னத்தைத் தடவியபடியே நடந்தான்…

அன்று மாலை…சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், கண்ணனும் அவன் நண்பர்களும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கொஞ்சம் ஒட்டுக் கேட்போம்…

நண்பன் 1 : “கண்ணா, கலக்கிட்டேடா…உங்க அப்பா அம்மா உனக்கு சரியா தான் பேரு வச்சிருக்காங்க…குறும்புன்னா கண்ணன் ல….”
நண்பண் 2 : “என்னா ஆக்டிங் டா மச்சி…சிவாஜி கணேசனே தோத்துடுவார் போ…”
நண்பன் 1 : “தம்பி…”பெட்” வைச்சிருக்க நீ நியாபகம் இருக்குல்ல…நம்ம மச்சி போனான்…ராதா கிட்டேயே முத்தம் வாங்குறேன் னு சொன்னான்….செஞ்சிட்டான்….பேசின படி இந்த மாசம் ஒன்னாம் தேதி ஆயிரம் ரூபா சொளையா வெட்டணும் கண்ணனுக்கு, நியாபகம் வைச்சிக்கோ…நான் தான் இந்த “போட்டி”க்கு ஜட்ஜ் ”
நண்பன் 2 : “ஆமா..மச்சி உனக்கு எப்படிரா தெரியும் இன்னைக்கு அந்த ப்ரொகிராம், அந்த ஐடியா எல்லாம் ?”

கண்ணன் : “சிம்பிள் மேட்டர் மச்சி…நம்ம ‘high 5’ ப்ரோகிராம் ஆர்த்தில்ல, அது கிட்டே கேட்டேன்…ராதாவோட அடுத்த ப்ரொகிராம் என்ன னு…அது புட்டு புட்டு வைச்சிடுச்சு…ஹா…ஹா…முதல்ல இந்த ஆயிரம் ரூபா வந்த உடனே ட்ரீட் தான்…அதுக்கு நம்ம ஆர்த்தியைக் கட்டாயம் மறக்காம கூப்பிடணும்..என்ன.. சரியா!”

sadish

10 Comments

  1. சூப்பர். கலக்கிட்டீங்க!

    நான் இத எதிர் பார்க்கவே இல்லை…

  2. குடைக்குள் மழை கணக்கா, கண்ணன் எங்க சைக்கோவாயிடுவானோன்னு நெனைச்சேன். நல்ல வேலை! 🙂

    நல்ல கதை!!

    ‘குறும்பு செய்ய விரும்பு’, ‘High 5’ – TV நிகழ்ச்சிகளுக்கான நல்ல தலைப்புகள்!! 🙂

  3. நன்றி ஜி / சரவ்,

    அது எப்படி கண்ணனை நாங்க விட்டுக்கொடுப்போம்… குறும்புக்கு பேர் போனவன் கண்ணன் தானே !

    குறும்பு செய்ய விரும்பு – க்கு அவ்வையார் தான் அடி போட்டார் (அறஞ் செய விரும்பு)
    High 5 – ங்கறது, Super 10 – ல இருந்து வந்தது…

    🙂

    சதீஷ்.

  4. நல்ல கதை சதீஷ்…குறும்பு எல்லா வரிகளிலும் தெரிகிறது பரிசு கிடைக்கட்டும் இதற்கு!
    ஷைலஜா

  5. கிளைமாக்ஸ் பிறகு ஆன்டி கிளைமாக்ஸ் என்று வந்தாலும், கதையில் விறுவிறுப்புக்கு குறைவில்லை. குட்டி குட்டி வரிகளாக இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடும். வசனங்களில் இன்னும் ஷார்ப்னஸ் வேண்டும். வார்த்தைகளை குறைத்து மீண்டும் எழுத்ப்பட்டால் முத்திரை கதைக்கான வெளிச்சம் கிடைக்கும் என்பது என் அபிப்பிராயம். All the best. keep writing.

    மெலட்டூர் இரா நடராஜன்
    http://mrnatarajan.blogspot.com/ [-email address removed by admin-]

  6. நன்றி ஷைலஜா.

    பரிசு கிடைத்தால் ட்ரீட் தான். High 5 ஆர்த்தியோடு சேர்த்து உங்களுக்கும். 😀

    நன்றி மெலட்டூர் நடராஜன்.
    போட்டிக்கு அனுப்பிய பிறகு, கதையில் திருத்தம் செய்யும் உரிமை இப்போதைக்கு இல்லை. முடிவுகள் வெளிவந்த பிறகு தான் திருத்தலாம்.
    இல்லை அடுத்த கதை ஒன்று எழுதினால், உங்கள் கருத்துக்களை மனதில் கொள்கிறேன்.

    -சதீஷ்

  7. சதீஷ் அவர்களே

    கத சூப்பரா இருக்குதுங்கோ…

    ஃபைனல் டச்சு பிரமாதம்.. பின்னிட்டீங்க..

  8. Hi,

    This short story will get the prize for sure. It got all kind of quality of a good short story I read so far.

    All the Best.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *