ரஞ்சனி காயத்ரிசமீபத்திய என் கர்நாடக இசைத் தேடலில் ரஞ்சனி & காயத்ரி சகோதரிகள் பாடிய சில விருத்தங்கள் என் காதில் பட்டது.
கேட்ட பிறகு இந்தப் பாடலை எழுதியது யார் என்று தேடி, இது கம்ப ராமாயணத்தில் இருந்து வருவது என் கண்ணில் பட்டது (நன்றி: R. பிரபு).
நான் கண்டதையும் கேட்டதையும் எழுதத் தானே இந்த கிறுக்கல்கள் தளமே!

நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே

காணொளி இங்கே.

சுருக் அர்த்தம் என்னவென்றால்,
பல அரக்கர்களின் சேனையை அழித்து சாம்பலாக்கி, வெற்றி வாகை சூடிய ராமனின் தோளின் வலிமையைப் பாடுபவர்க்கு, நினைத்த பொருள் கிடைக்கும், ஞானம், புகழ் உண்டாகும். அவரது வீடு நன்றாக இருக்கும். லக்ஷ்மியின் அருள் பார்வை கிடைக்கும்.
கமலை – லக்ஷ்மியை
வாகை – என்பது ஒரு மலர், வெற்றி பெற்றவர்களின் தோள்களில் மாலையாவது.
நீறு – சாம்பல்.

ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், ராகத்தையும் பாவத்தையும் தமிழ் உச்சரிப்பையும் சிதைக்காமல் பாடுவது நம் காதுகள் செய்த புண்ணியம்.
இந்த விருத்தத்தில் சிறிது நேரம் சஞ்சாரித்துவிட்டு, அடுத்த விருத்தத்தைத் தொடங்குகிறார்கள்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…

பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. மிக எளிமையான வரிகள். இதுவும் கம்ப ராமாயணத்தில் இருந்து வருகிறது.
“ராமா” என்ற இரண்டெழுத்தை மட்டும் இவர்கள் பாடுவதைக் கேளுங்கள்.
[haiku url=”http://kirukkals.com/wp-content/uploads/2010/09/ViruthamFollowedByRamaNamame.mp3″ title=”ரஞ்சனி காயத்ரி விருத்தம் – ராம நாமமே”]