4

உதவியும் நன்றியும்

thirukuralஇந்த இரண்டு திருக்குறள்களைப் பற்றி எங்கேயோ யாரோ சொல்லிக் கேட்ட சில விஷயங்களைப் பகிர வேண்டுமென ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது முயற்சிக்கிறேன்.
இரண்டுமே அறத்துப்பாலில், இல்லறவியல் துறையில், புதல்வரைப் பெறுதல் என்கிற அதிகாரத்திலிருந்து.
குறள் 67:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

கலைஞர் உரை:

தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

குறள் 70:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

கலைஞர் உரை:

ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

கலைஞர் மட்டுமல்லாது எல்லா உரையாசிரியர்களும், தந்தை மகனுக்கு செய்வதை உதவி என்றும், மகன் தந்தைக்கு செய்வதை நன்றி என்றும் எழுதி இருக்கின்றனர்.

ஆனால் திருவள்ளுவர் பயன்படுத்திய வார்த்தைகளை மீண்டும் கவனியுங்கள்.

அவர் கூறும்போது தந்தை மகனுக்குச் செய்வதை நன்றி என்கிறார். மகன் தந்தைக்கு செய்வதை உதவி என்கிறார்.

தந்தை மகற்காற்றும் நன்றி:

எதற்காக ஒரு தந்தை மகனுக்கு நன்றி செய்ய வேண்டும்?

1. அவருக்கு மகனாக வந்து பிறந்ததற்கு – அப்படிப் பிறக்கவில்லையென்றால், தந்தையை மலடு என்று ஊரார் பழித்திருப்பர்.

2. தந்தையின் பரம்பரை குணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு.

3. ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்தவனுக்கு, சமுதாயத்தில் கிடைக்கிற கூடுதல் மரியாதைக்கு.

ஒரு தந்தை, தன் மகனை அவையத்தில் முந்தியிருப்பச் செய்வது, அவர் ஆற்றும் நன்றிக்கடன்.

யாராவது நன்றிக்கடன் செய்துவிட்டு அதற்கு கைம்மாறு எதிர்பார்ப்பார்களா?

“நான் உன்னைப் படிக்க வைத்தேனே, நல்ல வேலை வாங்கிக் கொடுத்தேனே, நீ எனக்கு என்ன செய்தாய்?” என்று ஒரு தந்தை எதிர்பார்க்கவே கூடாது.

அதுதான் வள்ளுவனின் செய்தி.

மகன் தந்தைக்காற்றும் உதவி:

அப்படி என்றால் “இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்து இருக்க வேண்டும்?” என சமூகம் சொல்லும்படி நடந்து கொள்வது ஒரு மகனின் கடமை இல்லையா? கைம்மாறு இல்லையா?

உம் ஹூம்.

அது ஓர் உதவி. மகன் தந்தைக்கு அந்த உதவியை செய்யலாம், செய்யாமலும் போகலாம்.

இப்படி சொல்வதால், பிள்ளைகள் உருப்படாமல் போய்விடாதா?

ஆகாது.

பிள்ளை வளர்ப்பதை எந்த மனநிலையில் இருந்து கொண்டு நாம் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதே வள்ளுவனின் எண்ணம்.

நாம் நம்முடைய நன்றிக் கடனை செலுத்துவதற்காக நம் பிள்ளைகளை அவையத்து முந்தியிருப்பச் செய்வோம். வேறு எந்தக் கைம்மாறும் எதிர் பாராமல்.


இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் தானாகவே “இவன் தந்தை எந்நோற்றான் கொல்” எனச் செய்துவிடுவார்கள்.

—–

இங்கே தந்தை எனக் குறிப்பிட்டு இருந்தாலும், அது தாய் தந்தை இருவரையுமே குறிக்கும்.

மகன் எனக் குறிப்பிட்டு இருந்தாலும், மகன் மகள் இருவரையும் குறிக்கும்.

—–

எங்கேயோ, யாரோ சொன்னதை என்னால் முடிந்த அளவில் நினைவிலுருந்து பதிந்திருக்கிறேன்.

உங்கள் கருத்துகளைக் கமெண்டுங்கள். நன்றி.

sadish

4 Comments

  1. பாராட்டுக்கள், சதீஷ். இதே கருத்தினை என் தந்தை 40 வருடங்கள் முன் சொல்லிக்கேட்டிருக்கிறேன். அவர் இன்னொரு காரணமும் சொன்னார் – தனக்கு இறுதிக்கடன் செய்வதற்கு ஒரு மகன் பிறந்ததற்காக தந்தை மகனுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாலும் வள்ளுவர் நன்றி என்று கூறினார் என்பதாக.
    இந்தக் குறளின் நுண்பொருளைத் தங்கள் வாயிலாக்க் கேட்டதில் மகிழ்ச்சி.
    பரிமேலழகர், காளிங்கர் போன்ற பழம் உரை ஆசிரியர்கள் உதவி என்று மாற்றி பொருள் கூறவில்லை. பொதுவாக கலைஞர், சாலமன் பாப்பையா போன்றவர்களின் உரைகள் மேலோட்டமான, எளிமையான உரைகளாகும். குறளின் ஆழமான நுண்பொருள் அறிய வேண்டின், சற்றுக் கடினமாயினும் பரிமேலழகர் போன்ற தொல்லாசிரியர் உரையே சிறந்தது என அறிஞர் போற்றுவர். இவ்வுரை குறள்திறன் போன்ற வலைத்தளத்தில் காணலாம்.

  2. It was me whom you are referring to.
    I told this in a conference of tamil writers at Kalaivanar arangam, in a speech.
    I got many praises and brickbats for this interpretation.
    Thanks for being impressed by someone whom I had not seen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *