ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கி, அடுத்து அட்லாண்டா விமானம் பிடிக்க ஒன்றரை மணி நேரம் தான் இருந்தது.
இதற்கிடையில் ஒரு பஸ், ரெண்டு எஸ்கலேட்டர்கள், ஒரு ட்ரெயின் இவற்றைக் கடக்க ஓடிக் கொண்டிருந்தேன்.
அப்போது பக்கத்தில் வந்த ஒரு நபர் “நான் சிகாகோ போறேன், நீங்க அட்லாண்டா தானே போறீங்க, இவங்களை அந்த கேட் வரை கொண்டு போய் விட்டுடுங்களேன் ப்ளீஸ்’ என்று தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த ஒரு தம்பதியரைக் காட்டினார்.
“அடடா எனக்கு சுத்தமா தெலுங்கு தெரியாது பாஸ்” என சொல்ல எத்தனிக்கும் முன்
“ஜஸ்ட் கேட் வரைக்கும் கொண்டு போய் விடுங்க போதும்” என்று சொல்லி நழுவி விட்டார்.
சரி என்று அவர்களையும் கூட்டிக் கொண்டு சற்றே விரைவாக நடக்க ஆரம்பித்தேன்.
A sample Picture found at www.caricaturist.sg/, provided here as it fits the story well.
தெலுங்கு அம்மாவிற்கு கொஞ்சமே கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது. இல்லாவிட்டால் சில சமயம் தமிழையே கொஞ்சம் உடைத்து உடைத்து பேசினால் புரிந்து கொள்கிறார். ஏற்கெனவே ஒருமுறை அவர் அமெரிக்கா விஜயம் செய்து இருக்கிறாராம்.
அப்பா கேரக்டர்க்குத் தெலுங்கு மட்டுமே பரிச்சயம். காவி நிறத்தில் குர்த்தாவும் வேஷ்டியும் அணிந்து இருந்தார்.
“வேகமா நடக்கணும்” என்பதை எனக்குத் தெரிந்த தெலுங்கில் “ஜர்கண்டி ஜர்கண்டி” என்றேன் .
உடனே அந்த அம்மா ஏதோ சொல்ல, அவர் வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு “என் ராசாவின் மனசிலே” ராஜ்கிரண் போல தொடையைக் காட்டி நடக்க ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் வந்த ஒரு ஜெர்மானிய ஏர்போர்ட் தொழிலாளி “என்ன உங்க அப்பா இப்படி வேஷ்டியைத் தூக்கிக்கிட்டு நடக்கிறார்” என்பது போல என்னைப் பார்த்தார். (ஒருவேளை எனக்குத்தான் அப்படி தோனுச்சோ ?)
இருந்தாலும் திரும்ப வேஷ்டியை இறக்கி விடுங்க என்று தெலுங்கில் சொல்லத் தெரியாததால் சைகையில் நான் நடித்துக் காட்டி….
“ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா…இப்பவே கண்ணைக் கட்டுதே”…
அடுத்து செக்குரிட்டி செக் பாயிண்டில் இலவசமாக “ஃபுல் பாடி எக்ஸ் ரே” எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக கண்ணாடிக் கூண்டொன்றில், இரண்டு கையையும் தூக்கிக் கொண்டு நிற்க, அந்த மெசின் ஒரு முழு எக்ஸ் ரேயை எடுத்துக் கொள்ளும். இதை நான் அவர்களுக்கு விளக்குமுன், அந்த ஏர்போர்ட் பணியாளர், தெலுங்கு அப்பாவை முதலில் அழைத்து விட்டார்.
இவருக்கு “எப்படி நிற்க வேண்டும், எப்படி கையைத் தூக்கிக் கொள்ள வேண்டும்” என்பதெல்லாம் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் சொல்லி முடித்துப் பிறகு அவரே நடித்து காண்பிக்க….
“அப்ப்ப்பாபாடா !”
எல்லாம் முடிந்து, கேட் அருகே வந்து சேர்ந்த போது, அம்மா தான் ஆரம்பித்தார். “டாய்லட்… டாய்லட், ரெஸ்ட்ரூம்” என்றார்.
“அம்மா, ஒன்லி ஃபைவ் மினிட்ஸ், குயிக், சீக்கிரம்” என்றேன். “குயிக் ஒன்லி” என்றவர் அவரிடம் திரும்பி ஏதோ தெலுங்கில் சொல்ல, அவர் எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல தலையசைத்து அவசரமா ஒரு ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து மூன்றே நிமிடத்தில் வெளியே வந்து விட்டார். அடுத்த சில நொடிகளில் உள்ளே சென்ற துப்புரவுத் தொழிலாளி ஏதோ முனகிக் கொண்டே வெளியே வந்து “Restroom not in Service” என்று போர்டை மாட்டிவிட்டு உள்ளே சென்றார்.
இதெல்லாம் அப்பாவோட தப்பு இல்லை. இது தான் வாழ்க்கைல அவர் பார்த்த முதல் வெஸ்டர்ன் டாய்லட். அவர் என்ன பண்ணுவார் பாவம். கொஞ்சம் அதிகமா டிஸ்ஸு பேப்பரை ஒரே நேரத்தில் ஃப்ளஷ் செய்து விட்டார் போல. அதுக்குப் போய்ட்டு…
அடுத்து “ஃப்ராங்க்ஃபர்ட் டு அட்லாண்டா” ஃப்ளைட்டில் ஏறி அவர்கள் இருக்கைகளில் அமர வைத்து, அதற்கு இன்னும் மூன்று வரிசைக்குப் பின்னால் என்னுடைய இடம் தேடி அமர்ந்தேன். “அப்பாடா, இன்னும் 10 மணி நேரம் இருக்கிறது. கொஞ்சம் நல்லா தூங்கலாம்” என்று அவர்கள் கொடுத்த போர்வையைக் கழுத்து வரை போர்த்திக் கொண்டு, சீட்டைப் பின்னால் முடிந்த வரை சாய்த்துக் கொண்டு, கண்ணை மூடி, நிம்மதியாய்…
“எக்ஸ்கியூஸ் மி, திஸ் லேடி வான்ட்ஸ் டு டாக் டு யூ” என்று பக்கத்து சீட்காரர் என்னை எழுப்ப, யார் என்று பார்த்தால் நம்ம தெலுங்கம்மா.
சுங்க வரித்துறையின் படிவத்துடன் (Customs Form). மணி என்ன என்று பார்த்தேன். கிளம்பி ரெண்டு மணி நேரம் தான் ஆகியிருக்கு. இறங்குறதுக்கு இன்னும் ஆறு ஏழு மணி நேரம் இருக்கு.
“நீங்க போய் உட்கார்ந்துக்கோங்க, நானே இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க சீட்டுக்கு வர்றேன்” அப்படின்றதை எனக்குத் தெரிந்த தெலுங்கில் “கூச்சண்டி, கூச்சண்டி, நேனே வஸ்தாவு” என்றேன். இதுவரை நான் பேசியதிலேயே இது தான் அவருக்கு நன்றாகப் புரிந்தது போல, கொஞ்சம் அதிகமாகவே சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.
இப்படி எழுந்ததில், தூக்கம் கலைந்து போனதால், முன்னால் இருந்த ஒளித்திரையில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடினேன். ‘பேசாம ஏதாச்சும் தெலுங்கு படத்தை சப்-டைட்டிலோடு பார்த்து, இறங்குறதுக்குள்ளே தெலுங்கு கத்துக்கலாமா’ என்ற எண்ணத்தைப் புறந்தள்ளி ‘Happy New Year’ என ஆங்கிலத்திலேயே பெயரிடப்பட்ட ஹிந்தி படத்தை ஓடவிட்டேன். ஷாருக்கான் நடிப்பில் ஒரு ‘Oceans 11’.
படம் முடியும் நேரத்தில் நம் தெலுங்கம்மா பாஸ்போர்ட், கஸ்டம்ஸ் ஃபார்முடன் வந்துவிட்டார் .
கஸ்டம்ஸ் ஃபார்ம் ஒரு குடும்பத்திற்கு ஒன்றே போதும். சரி என்று அவர் கணவரின் பாஸ்போர்ட்டில் இருந்து விவரங்களை எடுத்து படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன் .
“அமெரிக்கா வில் எந்த அட்ரஸ்” என்றேன்.
“மேங்கோ மேரி ” என்றார் .
“மேங்கோ மேரி யா? புல் அட்ரஸ் வேணும் ” என்றேன்.
அம்மணி தன் கைப்பையில் இருந்து ஒரு குட்டி போன் புக்கைக் கையில் எடுத்து ஒரு பக்கத்தைத் திருப்பி நீட்டினார் . (ஓ இந்த மாதிரி புக்கெல்லாம் இன்னும் புழக்கத்திலே தான் இருக்கா?)
அதில் நல்ல வேளையாக அட்ரஸை யாரோ ஆங்கிலத்திலேயே எழுதி இருந்தார்கள்.
“ஓ அது மாண்ட்கோ மரி , அலபாமா வா ” Montgomery Alabama. சரியா போச்சு போ !
எல்லாம் முடித்து, நிரப்பிய படிவத்தில் அவர் கணவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ள சொன்னேன்.
“அவரா? அவரு கைநாட்டு தாங்க” என்பதைக் கட்டை விரலை ஸ்டாம்ப் பேடில் உருட்டுவது போல காற்றிலேயே உருட்டிக் காட்டினார். (அட அட என்ன ஓர் அபிநயம்!)
“ஓ .. சரி பரவால்ல, நீங்களே உங்க கையெழுத்தைப் போடுங்க” என்றேன்.
“ஆனா மேலே அவர் பேர் போட்டு இருக்கே? பரவால்லையா?” என்று அவர் தெலுங்கிலேயே கேட்டாலும் எனக்குப் புரிந்தது.
“ஆங்…இதெல்லாம் மட்டும் விவரமா கேளுங்க, முதல்லயே சொல்லி இருக்கலாம்ல ஐயா கைநாட்டு ன்னு” என்பதை மனதுக்குள் சொல்லிக் கொண்டு
“ஓக்கே தான். சரி எதுக்கு வம்பு .. வேற ஃபார்ம் ஃபில் பண்ணிடுறேன்” என்று வெளியில் சொல்லிவிட்டு, இன்னொரு ஃபார்மில் அவரது விவரங்களை உள்ளிட்டேன்.
அதன் கீழே நிறுத்தி நிதானமாக அவர் கையெழுத்தைப் போட்டார். சுந்தரத் தெலுங்கில் ஒவ்வோர் எழுத்திலும் ஒரு ஜாங்கிரி.
அட்லாண்டாவில் இறங்கியதும், அவரவர் தன் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு , கடகடவென நகர்ந்து கொண்டிருந்தனர். நம் தெலுங்கம்மாவும் அப்பாவும் மட்டும் இறங்கி ஓர் ஓரமாய் நின்று என்னைத் தேடிக் கொண்டிருந்தனர். சரியென்று அவர்களை அழைத்து வெளியே வரும் வேளையில், வீல் சேர் (Wheel Chair) சேவை செய்ய விமான நிலையப் பணியாளர்கள் தயாராக நின்றனர். நான் அவர்களிடம் பேசி, இவர்கள் இருவரையும் வீல் சேரில் உட்கார வைத்துவிட்டு, எஸ்கலேட்டரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நான் இமிக்ரேஷன் கியூவில் (Immigration Queue) நின்று கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் இமிக்ரேஷன் முடிந்து, வீல்சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த அம்மா மட்டும் திரும்பி இந்த கியூவில் நான் எங்கே இருக்கிறேன் என்று கண்ணாலேயே தேடினார். (இல்லை நான் தான் அப்படி நினைச்சுக்கிட்டேனோ என்னவோ ! 🙂 )