அஞ்சலி

பூவுலகை விட்டு மறைந்தாலும் நினைவுகளில் வாழும் எங்கள் அம்மா பற்றி …

பூவுலகை விட்டு மறைந்தாலும் நினைவுகளில் வாழும் எங்கள் அம்மா பற்றி எழுத நினைக்கிறேன்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சென்னையில் இருந்து அண்ணனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அம்மா நம்மை விட்டுப் பிரிந்தார் என்கிற செய்தியோடு.
உடனே அவசரமாக அடுத்த விமானத்திலேயே அட்லாண்டாவில் இருந்து கிளம்பி சென்னை வந்து, சுவாமிமலைக்குச் சென்றோம். அடுத்த விமானத்திலேயே வந்தாலும், இரண்டாவது நாள் ஆகிவிடுகிறது இந்தியாவில்.
வந்து, பார்த்து, அழுது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்குகளை நிறைவேற்றினோம்.

Amma and me on June 2022

இந்த புகைப்படம் சென்ற வருடம் (ஜூன் 2022), ஏழாண்டுகளுக்குப் பிறகு அம்மாவைப் பார்த்த முதல் நாளில் எடுத்தது.

அம்மா என்றாலே அன்பு பாசம் நேசம் கருணை எல்லாமே தான்.
உலகத்தின் எல்லா அம்மாக்களையும் போல.
எனக்கு அம்மா ஒரு தோழனும்.
அதிலும் எங்கள் அப்பாவை 2006-இல் இழந்த பிறகு, தோளுக்கு மிஞ்சிய தோழனாய் நடத்தி இருக்கிறார்.
எதையும் பகிர்ந்துகொள்வேன்.
அயல் நாட்டில் வாழ்வதில் உள்ள சவால்களையும், அவதிகளையும், அலுவலகத்தில் நடக்கும் அரசியல் என அனைத்தும் அம்மாவிடம் பேசும் அந்த அரைமணி நேரத்தில் பேசப்பேச நம்மை அறியாமல் நமக்கே இவற்றை சமாளிக்கும் வழிகளும் உத்வேகமும் தோன்றிவிடும்.

என் மகள்களைக் கடிந்துகொண்ட நேரங்களில் அம்மாவிடம் தான் அதற்கு பாவ மன்னிப்பு கேட்பதே. “கோவத்துல சத்தம் போட்டேன் மா”.

கோவிட் காலத்தில், நானே ஒரு பாடகன் என அறிவித்துக்கொண்டு Singer Sadish என முகநூலில் பக்கம் திறந்து, பாட்டுக்களைப் பாட , இந்த தொழில்நுட்ப சவால்களை மீறி , அவர் கைப்பேசியில் ஒரு சில மறுமொழிகளை (“சூப்பர் தம்பி”) தட்டச்சு செய்து அனுப்புவார். இப்பொழுதும் அவற்றைப் பார்க்கும் பொழுது தோன்றும் மகிழ்ச்சியும் உற்சாகமும் என்னவென்று சொல்லுவேன்.

முருக பக்தையான அம்மா எங்கள் இளம் வயதில் பாடிய “கற்பனை என்றாலும்” பாடல். முதன் முதலில் tape recorder வீட்டுக்கு வந்த நாட்களில் அம்மாவைப் பாட வைத்து ஒலிப்பதிவும் செய்து இருக்கிறோம். அம்மாவிற்குப் பிடித்த பாடல்கள் “ஒரு பொய்யாவது சொல் கண்ணே”, “பொய் சொல்ல கூடாது காதலி” என்பதெல்லாம் இனி அவற்றை எங்கேயும் கேட்டாலும் பாடினாலும் நினைவலைகளில் ஒரு புன்னகையை ஏந்துமே.

எனக்கும் என் அண்ணன், தம்பி தங்கைக்கும் பாலமாய் இருந்ததும் அம்மா தான். அம்மாவுடன் பேசும் தொலைபேசி உரையாடலில், இவர்கள் அனைவரையும் கொண்டுவந்துவிடுவார். “ஏன்டா , தம்பி அங்கே தான் இருக்கிறான், ஒரு போன் போட்டு பேசினியா? இல்லை ஒரு எட்டு, போய் பார்த்துட்டு வாயேன்”, “அடுத்த வாரம் இவங்க பர்த்டே வருது அப்போ கால் பண்ணி வாழ்த்து சொல்லிடு.” “அத்தைக்கு உடம்பு முடியலை, நீ ஒரு தடவை போன்ல விசாரிச்சுக்கோ”. “எனக்கு போன தடவை ஹாஸ்பிடல் பில் எக்கச்சக்கமா போச்சு, உங்க அண்ணன் கூட பேசி, நீ எப்படி ஹெல்ப் பண்ணணும்னு பாரு.”

இனி நினைவுகளில் வாழும் என் அம்மாவிற்கு, முதன் முறையாக “அன்னையர் தின வாழ்த்துக்களை” எழுத்தில் அனுப்புகிறேன்.

Happy Mother’s Day 2023

அஞ்சலி · சுயபுராணம்

கடிதம் எழுதி இருக்கிறீர்களா?

நீங்க எப்பவாச்சும் யாருக்காச்சும் கடிதம் எழுதி இருக்கிறீர்களா?
விடுமுறை விண்ணப்பக் கடிதங்கள் [As I am suffering from fever] போன்றவை இதில் சேர்த்தி இல்லை.
பர்சனல் லெட்டர்ஸ். தமிழ்ல எப்படி சொல்லலாம்? தனிப்பட்ட கடிதங்கள்?
Inland Letter

இந்தக் காலத்துலயும் இது வழக்கத்துல இருக்கா?

நான் காலேஜ் படிச்ச காலத்துல (1993 – 97) ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்குப் போவோம். ஊர் சுவாமிமலை. படிச்சதெல்லாம் திண்டுக்கல்ல.
இந்த ரெண்டு வார இடைவெளில, அப்பா கிட்டே இருந்து ஒரு கடிதமாச்சும் வந்திடும். நானும் ஒரு கடிதமாவது எழுதுவேன். செல்ஃபோன்லாம் அப்போ இல்லை. வீட்டு ஃபோனே கூட ஆரம்பத்திலே இல்லை. ஃபோன் பண்றதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை. காலேஜ்ல இருந்து திண்டுக்கல் நகருக்குள்ள வந்து, STD Booth வந்துதான் பண்ணனும். அதுக்கெல்லாம் செலவும் அதிகமாகும். ஒவ்வொரு செகண்டும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டு பார்த்துக்கிட்டே பேசுவோம். இதெல்லாம் விட கடிதம் தான் வசதி…

“அன்புள்ள அப்பாவிற்கு, நலம். நலம் தொடர மணியார்டர் அனுப்புக” என்பது போன்ற வழக்கமான கடிதங்கள் அல்ல.
“அன்புள்ள அப்பா அம்மாவிற்கு” எனத் தொடங்கி, வீட்டில் உள்ள ஓவ்வொருவரையும் குறித்த நல விசாரிப்புகளைக் கொண்ட பாசக் கவிதைகள். எனக்குத் தெரிந்து நான் தமிழில் தானாகவே எழுதத் தொடங்கியது இந்த மாதிரி கடிதத்தில் தான்.
என் அப்பாவின் கடிதங்கள் “அன்புச் செல்வன் சதீஷிற்கு” என்று தொடங்கும்.
நேரில் சொல்லிக் கொள்ளாத தன் அன்பையும் எழுத்தில் காட்டுவதாக இருக்கும்.
இதில் எப்போதுமே “நல்லா படிக்கிறியாப்பா” என்று ஒருமுறை கூட வராது.
“மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, குடிப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும்” போன்ற சட்டபூர்வமான எச்சரிக்கைகளுக்கும் இடமில்லை. அந்த விஷயத்தில் நாங்களே பொறுப்பாய் இருப்போம் என்கிற நம்பிக்கை.
ஒரு முறை ரோல் நம்பர் குளறுபடியில் எனக்கு அடுத்துள்ள மாணவனின் மதிப்பெண் பட்டியலை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க, அதில் எனக்கு இரண்டு அரியர்ஸ் என்று இருக்க, அப்பாவின் அடுத்த கடிதத்தில் ஒரே ஆறுதல் மழை. அதற்கு பதிலாய் நான் எழுதிய கடிதத்தில் “அதை எப்படி நீங்கள் நம்பினீர்கள்” எனக் கேட்டு வைக்க, அடுத்து ஒரு கடிதம் அப்பாவிடம் இருந்து வந்தது. “நான் சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. என் பிள்ளைகளாகிய நீங்கள் தான் என் சொத்து” என அப்பா உருகி எழுதி இருந்த வரிகள், கொண்டு வந்த நெகிழ்ச்சியை வேறு எது கொண்டு வந்திடும்?

இப்போதெல்லாம், எஸ்.டி.டி பூத் இல்லை. கடிதங்கள் எழுதுவதற்கு தேவையும் இல்லை. அப்பாவும் இல்லை.
appa

அஞ்சலி

குரலாய் வாழும் ஸ்வர்ணலதா

swarnalatha

ஸ்வர்ணலதாவின் திடீர் மறைவு, தமிழ் சினிமா இசைக்கும், என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு…
சொல்வனத்தில் மிக அழகாக அவரின் பல பாடல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

அவரின் “என்னுள்ளே என்னுள்ளே”, “மாலையில் யாரோ”, “போறாளே பொன்னுத்தாயி”, “எவனோ ஒருவன்” என எத்தனையோ பாடல்கள் எப்படியும் உங்கள் காதுகளை எட்டிவிடும்.
ஆனால் அவ்வளவாகக் கேட்கப்படாத அவரின் சில பாடல்களை இங்கே தருகிறேன்.

பாடல்: பாரடி குயிலே
இசை: இசைஞானி
படம்: நாங்கள்

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/Naangal-PaaradiKuyile.mp3″ title=”பாரடி குயிலே”]

பாடல்: அந்திக் கருக்கையிலே
இசை: வித்யாசாகர்
படம்: அள்ளித் தந்த வானம்

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/anthi-karukkaiyile.mp3″ title=”அந்திக் கருக்கையிலே”]

இதே படத்தில் இருந்து “தட்டான் கிடைக்கலையோ” என்று இன்னும் உருக்கமான பாடலும் ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார். அதைத் தேடல் உள்ளவர்கள் கேட்கட்டும்.

பாடல்: புதிய பறவை பறந்ததே
இசை: இசைஞானி
படம்: தென்றல் வரும் தெரு

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/puthiya-paravai-paranthathe.mp3″ title=”புதிய பறவை பறந்ததே”]

ஸ்வர்ணலதா,
குரலாய் என்றென்றும் வாழ்வாய் நீ!

அஞ்சலி

மூன்றாம் ஆண்டாய் நினைவில் வாழும் அப்பா

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்
பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்
நேற்று நடந்தது போல் இருக்கிறது
இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது அந்த தினம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும் கூட
உள்ளத்தின் உள்ளே பீறிடும் உணர்வுகளை
எழுத்தில் சொல்ல ஏதுவாயில்லை.

எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படியொரு தந்தை.
இருந்த 59 வயதிற்குள் வார்த்தைகளால் சொல்லாமல்
வாழ்ந்து காட்டி நீங்கள் சொல்லிக் கொடுத்தது
இன்னமும் நெஞ்சில் ஈரமாய்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

திருக்குறளில் [நன்றி திருக்குறள் Browser] சொன்னது போல், எங்கள் அனைவரையும் அவையத்தில் முந்தியிருக்க நீங்கள் பாடுபட்டீர்கள்.
இனி நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

நிச்சயம் செய்வோம். நினைவில் எங்களுடன் நீங்கள் வாழும்போது ஏன் முடியாது?
——–
அப்பாவிற்குப் பிடித்த பாடல் ஒன்று, அவர்களின் நினைவாக.
“எனக்கொரு அன்னை” பாடல் – இளையராஜா அவர்களின் கீதாஞ்சலி என்கிற இசைத்தொகுப்பில் இருந்து…
[audio:enakkoru-annai.mp3]

அஞ்சலி · சுஜாதா

சுஜாதா- ஒரு சகாப்தம்

சுஜாதா – என்கிற ரங்கராஜன் என்கிற, தமிழின் முக்கியமான எழுத்தாளர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் தூவிய எழுத்துக்கள் இன்றும் காற்றில் கலந்து இருக்கிறது.

வாசகனோடு இயல்பாய்ப் பேசும் எழுத்து நடை அவருடையது. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகங்கள், இன்றும் பல மறு பதிப்புகளைக் காண்கிறது.

இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி வணங்கும், அவரை மதிக்கும் கோடிக் கணக்கான வாசகர்களில் ஒருவனான அடியேன்.

அஞ்சலி

Protected: தந்தையர் தினம்

தந்தையர் தினம் – Father’s Day உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

இந்த வருடம் ஜூன் 17 ஆம் தேதி வருகிறது.

நம் வீட்டிற்கு ஒரு தந்தையர் தினத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அது நம் அப்பா பிறந்த ஜூன் 15 ஆம் தேதியை வைத்துக் கொள்ளலாமே ?

1. எதற்காகக் கொண்டாட வேண்டும்?

நாம் நம் அப்பாவின் மீது கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் நம் சந்ததிகள் உணர்ந்து கொள்ள.

2. எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இது மகிழ்ச்சியாய்க் கொண்டாட வேண்டியது. நம் அப்பா நம் கூட இருப்பார்கள். ஒரு காந்தி ஜெயந்தி, ஒரு ராம நவமி, ஒரு வினாயகர் சதுர்த்தி போல, நம் வீட்டிற்கு இனி ஒவ்வொரு வருடமும் ஜூன் 15 தான் தந்தையர் தினம்.

நம் ஒவ்வொருவரும் சந்தோஷமான மனநிலையில் இந்த நாளை எதிர்கொள்ள வேண்டும்.
புத்தாடைகள், இனிப்புகள் எல்லாம் இருக்கலாம்.
இது நம் அப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.

3. முக்கியமான நோக்கம் என்ன ?

அடுத்த தலைமுறைக்கு நாம் நம் அப்பாவைப் பற்றிச் சொல்வது.
இந்த நாளில், நாம் ஒவ்வொருவரும் இந்த நாளைக் கொண்டாடும்போது, பிள்ளைகள் நிச்சயமாய்க் கேட்கும் “எதற்கு இந்த விழா?” என்று.
அப்போது சொல்ல வேண்டும் “எங்கள் அப்பா தானே எங்களை எல்லோரையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினது. அவங்களாலே தானே நாம எல்லாரும் இன்னைக்கு நல்ல நிலமைல இருக்கோம். அதான் அவங்க பிறந்த நாளைக் கொண்டாடுறோம்.”
“தேசத் தந்தை காந்தியோட பிறந்த நாளைக் கொண்டாடுறோம் இல்லை. அது மாதிரி நம்ம வீட்டுத் தந்தை அவங்க தானே.”

இப்படி சொல்லிக் கொடுப்பதை நாம் இந்த வருடத்தில் இருந்தே செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
நம் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை என்றால் கூட.

4. இப்படி ஒரு நாள் இல்லையென்றால் நாம் சொல்லிக் கொடுக்கப் போவது இல்லையா என்ன?
இருக்கலாம். ஆனால் இந்த நாளில் கொண்டாடும் போது, கட்டாயம் அந்த கேள்வி குழந்தைகளிடம் வரும். கட்டாயம் அதற்கு பதிலும் கிடைக்கும்.


பாலகுமாரன் எழுதிய “அப்பம் வடை தயிர்சாதம்” என்கிற நாவலின் கதையை நினைவு படுத்துகிறேன்.
இப்பொழுது வாடும் ஓர் இளைஞனுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அமெரிக்கா போவதற்கு முன், மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் “அப்பம் வடை தயிர்சாதம்” னு கூவிக் கூவி விற்க வேண்டும் என அவன் குடும்பமே அவனை அழைத்துச் செல்கிறது. ஏதோ ஒரு வேண்டுதலை நிறைவேற்றப் போவது போல எல்லோரும் கிளம்பிச் செல்கிறார்கள்.
அந்த இளைஞனின் அப்பா இன்று ஒரு பெரும் பணக்காரர். அவருக்குக் கீழே பல பேர் இன்று வேலை பார்க்கிறார்கள். இருந்தாலும் எல்லா பந்தாக்களையும் விட்டு விட்டு, ஒரு சாதாரண வியாபாரி போல “அப்பம் வடை தயிர்சாதம்” னு பொட்டலம் போட்டு விக்கிறாங்க.
அப்போ அந்தப் பையன் கேட்கிறான் “எதற்கு நாம் இப்படி செய்கிறோம்?” என்று.
அப்போ அவனுக்கு அந்த குடும்பத்தின் கதை சொல்லப் படுகிறது.
அவனுடைய தாத்தாவிற்கு தாத்தா, பிரிட்டிஷ் காலத்தில், வைதீகம் செய்து பிழைக்க முடியாத நேரத்தில், தன் குடும்பத்தைக் காப்பாற்ற, எவ்வளவு கஷ்டப்பட்டு, “அப்பம், வடை தயிர்சாதம்” சமைத்துப் பொட்டலம் கட்டி, ரயில்வே ஸ்டேஷனில் கூவிக் கூவி விற்றார் என்பது அவனுக்கு விளக்கப் படுகிறது.

அஞ்சலி

அப்பா யு ஆர் கிரேட்

அப்பா யு ஆர் கிரேட்…
உங்களுடைய அப்பா உங்களுக்கு கொடுத்தது பெயருக்கு முன்னால் ஒரு இனிஷியல்…
எங்களுக்கு நீங்கள் கொடுத்தது, பெயருக்கு பின்னாலும் இரண்டு எழுத்து…B.E பட்டம்
அப்பா யு ஆர் கிரேட்…

உங்களைப் பள்ளியில் சேர்க்கவோ, படிக்க வைக்கவோ ஒருவரும் உதவியதில்லை…
ஒவ்வொரு நிலையிலும் எங்கள் படிப்புக்கு நீங்கள் காட்டிய அக்கறை தானே எங்களைப் படிக்க வைத்தது…
அப்பா யு ஆர் கிரேட்…

உங்களுக்கு என்று உதாரண புருஷர்கள் யாரும் ஊரில் இல்லை…
ஆபிஸ் முடிந்ததும் தண்ணியடித்து விட்டு அலம்பல் செய்யும் கும்பல் தான் உங்கள் உடன் பணிபுரிந்தவர்கள்.
ஆனால் ஒருநாளும் தீய பழக்கங்களை நீங்கள் அண்ட விட்டதில்லை…
அப்பா யு ஆர் கிரேட்…

அப்போது நான் பிளஸ் 1 சேர்ந்து இருந்த நேரம்…
முதன் முதலாக ஆங்கில வழிக் கல்வி…
என்னை டியூஷனில் சேர்க்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி நான் அறிவேன்.
பிளஸ் 1 , பிளஸ் 2 விற்கு கல்லூரிப் பேராசிரியரிடம் டியூஷன்…
அந்த வருடம் டியூஷனே எடுப்பதில்லை என்று சொல்லி இருந்த அவர்,
பின்னாளில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ட்யூஷன் எடுக்க சம்மதித்தார்…
அதில் என்னையும் சேர்த்துக் கொண்டது, எனக்காக அல்ல…
அன்று அவரைப் பார்த்துப் பேசிய உங்கள் முகத்துக்காக…அதில் தெரிந்த அக்கறைக்காக…
அப்பா யு ஆர் கிரேட்…

திண்டுக்கல்லில் கல்லூரி விடுதியில் நாங்கள் தங்கி இருக்க,
சபரி மலை சென்று திரும்பும் வழியில் எங்களை வந்து பார்த்து விட்டு,
பிரசாதம் கொடுத்து விட்டுக் கிளம்பினீர்கள்.
பேருந்து நிறுத்தம் வந்து வழியனுப்ப வந்து இருக்கிறேன்..
செலவுக்குப் பணம் கொடுத்து விட்டு, கிளம்பும்போது என் கை குலுக்கி விட்டு
என்னைத் தோளோடு அணைத்து விடை பெற்றீர்கள்…
அதைப் பார்த்து இருந்த, அங்கே மெஸ் வைத்திருக்கும் அம்மா சொன்னார்…
“கொடுத்து வைச்சிருக்கனும் பா இப்படி ஒரு அப்பா கிடைக்க…”
அப்பா யு ஆர் கிரேட்…

தம்பியின் கல்யாணம் நடக்கிறது…
நம் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள்…
நான் மட்டும் வர முடியாமல் இங்கே அமெரிக்காவில் இருக்க வேண்டிய சூழ்நிலை…
திருமண நேரத்தில் தொலைபேசியில் அழைக்கிறேன்…
“ஹல்லோ அப்பா நான் சதீஷ் பேசுறேன்…”
என் குரலைக் கேட்ட உடன், நானும் அங்கு இருக்க முடியவில்லையே என்கிற துக்கத்தில்
உங்களால் பேசவே முடியவில்லை. நா தழுதழுக்க இரண்டு வார்த்தை பேசிவிட்டு
ஃபோனைத் தங்கையிடம் கொடுத்து விடுகிறீர்கள்…
இப்போது நினைத்தாலும் என் தொண்டை அடைக்கிறது…
அப்பா யு ஆர் கிரேட்…

எதை நான் சொல்வேன், எதை நான் விடுவேன்…
இந்த பூமியில் நீங்கள் தங்க இடம் கொடுக்கவில்லை ஆண்டவன்…
போனால் போகிறான்…
எங்கள் நெஞ்சத்தில் உள்ளதப்பா அத்தனை இடம்…
அதை எவராலும் அசைக்க முடியாது…
அப்பா யு ஆர் கிரேட்…
[சின்ன வயதில் நானும் அண்ணனும், அப்பாவுடன்]
[சின்ன வயதில் நானும் அண்ணனும், அப்பாவுடன்]