சினிமா விமர்சனம்

சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, “அச்சமுண்டு அச்சமுண்டு” …

சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தை, திரையரங்கில் சென்று பார்த்தேன்.
வெளியான முதல் நாளிலேயே பார்த்திருக்க வேண்டியது, எப்படியோ தள்ளித் தள்ளிப் போய், “இன்று இப்படம் கடைசி” என்று தெரிந்தபிறகு கடைசி நாளில், குடும்பத்துடன் சென்று அமர்ந்தேன்.

இயக்குநர் எனக்குத் தெரிந்தவர் என்றாலும்,சமநிலையில் இருந்து இந்தத் திரைப்படத்தைக் குறித்த என் பார்வையைப் பதிகிறேன்.

aa1 சமூகத்திற்குத் தேவையான ஒரு செய்தியை, ஒரு சினிமாவுக்குள், சினிமாத்தனங்கள் இல்லாமல் பதிவு செய்து இருக்கும் ஒரு நல்ல முயற்சி. உங்களுக்கு அருகாமையில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தால், கட்டாயம் சென்று பாருங்கள்.
இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

படத்தின் திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும்,
1. சினேஹா, ப்ரசன்னா மற்றும் ஜான் ஷேயின் நடிப்பு
2. திறமையான இயக்கம்
3. கொடூரமான வில்லத்தனத்தையும் சொல்லாமல் சொல்லிப் புரியவைக்கும் காட்சியமைப்புகள்
4. படத்தின் மையக் கருத்து
போன்ற பல நல்ல விஷயங்களுக்காக அவசியம் பார்க்கவேண்டிய படம்.
படத்திற்கு கிறுக்கல்ஸ்.காம் வழங்கும் மதிப்பெண் : 55

சினிமா விமர்சனம்

நான் கடவுள் – என் எண்ணங்கள்

நான் கடவுள் ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது.
நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள்.
இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்,
குறிப்பாக

  1. விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் சொல்லிய பாலாவின் நேர்த்தி
  2. மெல்லிய நகைச்சுவை இழையோடும் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை
  3. படம் முழுக்க வியாபித்திருக்கும் ராஜாவின் பொருத்தமான பின்னணியிசை
  4. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு
  5. கதாபாத்திரங்களாகவே மாறிவிட்ட நடிகர்கள் பூஜா, கோவை கிருஷ்ணமூர்த்தி[‘முருகன்’ கதாபாத்திரம்], அறிமுக நடிகர் ராஜேந்திரன் [வில்லன் கதாபாத்திரம்]

என சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம்.

நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.
Continue reading “நான் கடவுள் – என் எண்ணங்கள்”

சினிமா விமர்சனம்

நான் கடவுள் – இன்னும் சில தினங்களில்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, “நான் கடவுள்” திரைப்படம் இன்னும் சில தினங்களில் [ஃபிப்ரவரி 6 – வெள்ளியன்று] வெளியாகிறது.
மற்றவர்களின் விமர்சனம் எதுவும் வெளிவருவதற்கு முன் பார்த்துவிட ஆசை. பார்ப்போம்.

இப்போதைக்கு இதைப் படியுங்கள். பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

சினிமா விமர்சனம்

அலிபாபா – திருப்பங்கள் நிறைந்த பாதை

Alibaba சமீப காலத்திய தமிழ் சினிமா சில வித்யாசமான படங்களைத் தருகிறது.
புதிய இயக்குனர்கள் மிகவும் சிரத்தையுடன் கதை சொல்ல வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு புதிய இயக்குனர் ‘நீலன் கே சேகர்’ என்பவரின் படம் தான் “அலிபாபா”.
திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, படத்தின் விறுவிறுப்பு, பிரகாஷ்ராஜின் நடிப்பு, புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நாயகன் கிருஷ்ணாவின் நடிப்பு [ஏற்கெனவே அஞ்சலி படத்தில் வரும் குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர்] என படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாய் உள்ளது.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவரிடன் இன்னும் எதிர்பார்க்கிறோம்.

இன்னும் நன்றாக ஓடியிருக்கவேண்டிய படம். ஒருவேளை “அலிபாபா” என்று சம்பந்தமே இல்லாமல் பெயர் வைத்ததால் தான் ஓட வில்லையோ?

சினிமா விமர்சனம் · பிடித்த திரைப்படம்

நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, …

Subramaniapuram Movie
நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, படம் வந்த சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. அதுதான் படத்திற்கான மொத்த விளம்பரமும் என்று நினைக்கிறேன்.
தற்போதெல்லாம் தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
“சித்திரம் பேசுதடி” -யில் மிஷ்கின், “பொல்லாதவன்” – வெற்றிமாறன், என மிரட்டிய இயக்குனர்களின் வரிசையில் தானும் இடம் பிடிக்கிறார் “சுப்ரமணியபுரம்” – சசிகுமார்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிய முகங்கள், படத்தின் எதார்த்தமான பின்னணிக்கு மிகவும் உதவுகிறார்கள். இயக்குனர் சசிகுமார், “பரமன்” என்கிற ஒரு கேரக்டராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளார்.
காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்தக் காலத்திய சினிமா போஸ்டர், அந்தக் காலத்து ஃபோன் என 1980-களை நம் கண் முன் நிறுத்தும் நேர்த்தியான கலை அமைப்பு [Art Direction] பாராட்டுக்குரியது.

வசனங்களில், மதுரைத் தமிழுடன் எதார்த்தமும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

இந்தப் படத்தின் “கண்கள் இரண்டால்” பாடல் மிக அருமை, அதுபற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். பின்னணியில் ரேடியோவில் ஒலிக்கும் “சிறு பொன் மணி அசையும்” பாடல், சரோஜ் நாராயணசுவாமி வாசிக்கும் செய்திகள் எனப் படத்தின் பின்னணி இசையிலும் கவனத்துடன் செயல் பட்டு இருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

படத்தில் நடிப்பு என்று பிரித்து அறியும்படி எதுவும் தெரியாததால், நடித்தவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம், எதார்த்தமான மனிதர்களைப் பற்றிய நல்லதொரு திரைப்படம் (சற்றே அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும்).
கிறுக்கல்ஸ்.காம் மதிப்பெண் : 65%

சில சுட்டிகள்.

சினிமா விமர்சனம்

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம். அதற்குப் …

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம்.
அதற்குப் பிறகு இன்று தான், கணினியின் முன் அமரும் வாய்ப்பு வந்தது. அதற்குள் படம் ஒரு குப்பை என்கிற விமர்சனம் இணையம் முழுக்க எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது.

குசேலன்

  • படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி.
    “அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர் குரல் கொடுக்கிறார். தியேட்டரே கை தட்டி ஆமோதிக்கிறது.
  • படம் முழுக்க காமெடி நடிகர்கள் [வடிவேல், சந்தானம், லிவிங்ஸ்டன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்] என அனைவரும் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.
    அதற்கெல்லாம் சிரிக்காத மக்களும், பசுபதி ஓடி வந்து கொடுக்கும் கடலை மிட்டாயில் சிரித்து விடுகிறார்கள்.
  • அதே போல திரையில் தோன்றியவுடனே சிரிப்பை ஏற்படுத்திய மற்றொரு நடிகர் பிரபு. அது என்னவோ தெரியவில்லை, அவர் பேசுவதற்கு முன்பே மக்கள் சிரித்துவிடுகிறார்கள். “என்ன கொடுமை சரவணன் இது”.
    இவர்கள் எல்லோரையும் விட சந்தான பாரதியின் காமெடி பரவாயில்லை.
  • வடிவேல் காமெடி என்கிற பெயரில் அடிக்கும் சில கூத்துக்களைப் பார்த்தும் “U” சர்டிபிகேட் கொடுத்த சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது எனப் புரியவில்லை.

படம் எடுப்பதற்கு முன் நடந்திருக்கக் கூடிய ஓர் உரையாடல்.
பசுபதி : “டைரக்டர் சார், இந்தப் படத்தில என்னொட ரோல் என்ன சார்?”
பி.வாசு: “அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லைய்யா…சும்மா வந்துட்டுப் போ, போதும்”
பசுபதி : “அது எப்படி சார், சும்மா வந்துட்டுப் போனா, ஒரே விளக்கெண்ணை மூஞ்சியா இருக்குமே சார்…”
பி.வாசு: “அதுக்காகத் தானேய்யா உன்னை செலக்ட் பண்ணினதே…சும்மா தொணதொணக்காம இருய்யா…”
பசுபதி : “சார், மக்களைப் பத்தி உங்களுக்கு கவலையே இல்லையா?”
பி.வாசு: “மக்களைப் பத்தியெல்லாம் உனக்கென்னைய்யா கவலை…பிரபுவுக்குத் தாலின்னா என்னன்னே தெரியாதுன்னு ‘சின்னதம்பி’ யில ஒரு கதை விட்டேன், அதையே இந்த மக்கள் ஒரு வருஷத்துக்கு ஓட வைக்கலையா?…”

புகைப்படம் நன்றி:Flickr.

Disclaimer:
பசுபதி-யின் நடிப்புத் திறமையைக் குறை கூற முடியாது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ முதல் ‘வெயில்’ வரை, பல்வேறு திரைப்படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து வியந்தவன் தான் நான். இந்த குசேலனில் அவரின் பங்கு மிகக் குறைவு என்பதே இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல விழைவது.

சினிமா விமர்சனம்

அறை எண் 305-ல் கடவுள்

அறை எண் 305-ல் கடவுள்
இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் வழங்கும் இரண்டாவது படைப்பு.
முதல் படைப்பான “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”யின் வெற்றி, இந்தப் படத்தின் மீது சற்றே எதிர்பார்ப்பைத் தூண்டி இருந்தது.
படத்தின் தலைப்பு, கஞ்சா கருப்பு, சந்தானம் எல்லாம் சேர்ந்து இது ஒரு முழு நீள காமெடிப் படம் என்று தோன்ற வைத்தது. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

இயக்குனருக்குப் பல விதமான விஷயங்களில், கருத்து கூறும் ஆர்வம் இருக்கிறது என்பது ஒன்று மட்டுமே தெரிகிறது. படம் முழுக்க அவரின் போதனைகளுக்குத் தான் நேரம் சரியாக இருக்கிறது.
கஞ்சா கருப்போ, சந்தானமோ அவர்களது இயல்பாய் நடித்திருந்தால் கூட, நகைச்சுவை மிளிர்ந்து இருக்கும். இயக்குனர் அதையும் விடவில்லை.

வித்யாசாகரின் இசையும் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை, “காதல் செய்” பாடல் சற்றே பரவாயில்லை.

கிறுக்கல்ஸ்.காம் மதிப்பெண் : 39 %
மொத்தத்தில் அறை எண் 305-ல் கடவுளின் போதனை.

சினிமா விமர்சனம்

நேபாளி – திரை விமர்சனம் [Nepali – Movie Review]

நேபாளி படம்
சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில், சற்றே கனமான திரைப்படம்.
இத்தனைக்கும், இயக்குனர் V.Z.துரை, கசப்பான மருந்தை இனிப்பு கலந்து கொடுப்பது போல, ஒரு சீரியஸ் விஷயத்தை, காதல் கலாட்டா, துப்பறியும் போலீஸ் என dilute செய்து தான் கொடுத்து இருக்கிறார்

படத்தின் பலம்:

தொய்வில்லாத திரைக்கதை
படத்தின் தொடக்கத்திலேயே மூன்று ‘பரத்’ களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள்.
அதிகக் குழப்பமில்லாமல், காட்சிகள் விரிகின்றன. சில காட்சிகள் [Original நேபாளி சிறைப் படுத்தப் படுவதற்கான காரணம், “அன்னையா” யார் என்பது போன்ற], ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் போகப் போகப் பிடிபடுகிறது. பரத், மீரா ஜாஸ்மின் இடையே நடக்கும் ஆரம்ப கால கலாட்டாக்களில் குறும்பு, ரசிக்க முடிகிறது.
பரத்
கமல், விக்ரம் வரிசையில் இடம் பிடிக்க, பரத் முயற்சி செய்கிறார். மூன்று வேடங்களிலும் தன் உடலை வருத்தி உழைத்திருக்கிறார்.
பின்னணி இசை
கதையை, சிச்சுவேஷனை [இதற்குத் தமிழில் என்னப்பா?] உணர்ந்து இசை அமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

பலவீனங்கள்

பாடல்கள்
இயக்குனர் கொஞ்சம் பாடல்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். இவரது முந்தைய படங்களான முகவரி, தொட்டி ஜெயா போன்ற படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட். இந்தப் படத்தில் catchy ஆக எந்த பாடலும் இல்லை.

மற்றவை

படம் வயது வந்தவர்களுக்கானது. சில காட்சிகள் நெஞ்சை உலுக்குவது போல் உள்ளது. பலவீனமான இதயத்தினர், பக்கத்து தியேட்டரில் “சந்தோஷ் சுப்ரமணியம்” பார்க்கலாம்.

மதிப்பெண்

கிறுக்கல்ஸ்.காம் வழங்கும் மதிப்பெண் : 55% [45 எடுத்தால் Pass]


திரை விமர்சனம் எழுதுவதில் இது என் முதல் முயற்சி. உங்கள் கருத்துக்களைக் கீழே கமெண்ட்டுங்கள்.