அஞ்சலி

பூவுலகை விட்டு மறைந்தாலும் நினைவுகளில் வாழும் எங்கள் அம்மா பற்றி …

பூவுலகை விட்டு மறைந்தாலும் நினைவுகளில் வாழும் எங்கள் அம்மா பற்றி எழுத நினைக்கிறேன்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சென்னையில் இருந்து அண்ணனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அம்மா நம்மை விட்டுப் பிரிந்தார் என்கிற செய்தியோடு.
உடனே அவசரமாக அடுத்த விமானத்திலேயே அட்லாண்டாவில் இருந்து கிளம்பி சென்னை வந்து, சுவாமிமலைக்குச் சென்றோம். அடுத்த விமானத்திலேயே வந்தாலும், இரண்டாவது நாள் ஆகிவிடுகிறது இந்தியாவில்.
வந்து, பார்த்து, அழுது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்குகளை நிறைவேற்றினோம்.

Amma and me on June 2022

இந்த புகைப்படம் சென்ற வருடம் (ஜூன் 2022), ஏழாண்டுகளுக்குப் பிறகு அம்மாவைப் பார்த்த முதல் நாளில் எடுத்தது.

அம்மா என்றாலே அன்பு பாசம் நேசம் கருணை எல்லாமே தான்.
உலகத்தின் எல்லா அம்மாக்களையும் போல.
எனக்கு அம்மா ஒரு தோழனும்.
அதிலும் எங்கள் அப்பாவை 2006-இல் இழந்த பிறகு, தோளுக்கு மிஞ்சிய தோழனாய் நடத்தி இருக்கிறார்.
எதையும் பகிர்ந்துகொள்வேன்.
அயல் நாட்டில் வாழ்வதில் உள்ள சவால்களையும், அவதிகளையும், அலுவலகத்தில் நடக்கும் அரசியல் என அனைத்தும் அம்மாவிடம் பேசும் அந்த அரைமணி நேரத்தில் பேசப்பேச நம்மை அறியாமல் நமக்கே இவற்றை சமாளிக்கும் வழிகளும் உத்வேகமும் தோன்றிவிடும்.

என் மகள்களைக் கடிந்துகொண்ட நேரங்களில் அம்மாவிடம் தான் அதற்கு பாவ மன்னிப்பு கேட்பதே. “கோவத்துல சத்தம் போட்டேன் மா”.

கோவிட் காலத்தில், நானே ஒரு பாடகன் என அறிவித்துக்கொண்டு Singer Sadish என முகநூலில் பக்கம் திறந்து, பாட்டுக்களைப் பாட , இந்த தொழில்நுட்ப சவால்களை மீறி , அவர் கைப்பேசியில் ஒரு சில மறுமொழிகளை (“சூப்பர் தம்பி”) தட்டச்சு செய்து அனுப்புவார். இப்பொழுதும் அவற்றைப் பார்க்கும் பொழுது தோன்றும் மகிழ்ச்சியும் உற்சாகமும் என்னவென்று சொல்லுவேன்.

முருக பக்தையான அம்மா எங்கள் இளம் வயதில் பாடிய “கற்பனை என்றாலும்” பாடல். முதன் முதலில் tape recorder வீட்டுக்கு வந்த நாட்களில் அம்மாவைப் பாட வைத்து ஒலிப்பதிவும் செய்து இருக்கிறோம். அம்மாவிற்குப் பிடித்த பாடல்கள் “ஒரு பொய்யாவது சொல் கண்ணே”, “பொய் சொல்ல கூடாது காதலி” என்பதெல்லாம் இனி அவற்றை எங்கேயும் கேட்டாலும் பாடினாலும் நினைவலைகளில் ஒரு புன்னகையை ஏந்துமே.

எனக்கும் என் அண்ணன், தம்பி தங்கைக்கும் பாலமாய் இருந்ததும் அம்மா தான். அம்மாவுடன் பேசும் தொலைபேசி உரையாடலில், இவர்கள் அனைவரையும் கொண்டுவந்துவிடுவார். “ஏன்டா , தம்பி அங்கே தான் இருக்கிறான், ஒரு போன் போட்டு பேசினியா? இல்லை ஒரு எட்டு, போய் பார்த்துட்டு வாயேன்”, “அடுத்த வாரம் இவங்க பர்த்டே வருது அப்போ கால் பண்ணி வாழ்த்து சொல்லிடு.” “அத்தைக்கு உடம்பு முடியலை, நீ ஒரு தடவை போன்ல விசாரிச்சுக்கோ”. “எனக்கு போன தடவை ஹாஸ்பிடல் பில் எக்கச்சக்கமா போச்சு, உங்க அண்ணன் கூட பேசி, நீ எப்படி ஹெல்ப் பண்ணணும்னு பாரு.”

இனி நினைவுகளில் வாழும் என் அம்மாவிற்கு, முதன் முறையாக “அன்னையர் தின வாழ்த்துக்களை” எழுத்தில் அனுப்புகிறேன்.

Happy Mother’s Day 2023

அஞ்சலி

மூன்றாம் ஆண்டாய் நினைவில் வாழும் அப்பா

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்
பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்
நேற்று நடந்தது போல் இருக்கிறது
இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது அந்த தினம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும் கூட
உள்ளத்தின் உள்ளே பீறிடும் உணர்வுகளை
எழுத்தில் சொல்ல ஏதுவாயில்லை.

எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படியொரு தந்தை.
இருந்த 59 வயதிற்குள் வார்த்தைகளால் சொல்லாமல்
வாழ்ந்து காட்டி நீங்கள் சொல்லிக் கொடுத்தது
இன்னமும் நெஞ்சில் ஈரமாய்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

திருக்குறளில் [நன்றி திருக்குறள் Browser] சொன்னது போல், எங்கள் அனைவரையும் அவையத்தில் முந்தியிருக்க நீங்கள் பாடுபட்டீர்கள்.
இனி நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

நிச்சயம் செய்வோம். நினைவில் எங்களுடன் நீங்கள் வாழும்போது ஏன் முடியாது?
——–
அப்பாவிற்குப் பிடித்த பாடல் ஒன்று, அவர்களின் நினைவாக.
“எனக்கொரு அன்னை” பாடல் – இளையராஜா அவர்களின் கீதாஞ்சலி என்கிற இசைத்தொகுப்பில் இருந்து…
[audio:enakkoru-annai.mp3]

அஞ்சலி

அப்பா யு ஆர் கிரேட்

அப்பா யு ஆர் கிரேட்…
உங்களுடைய அப்பா உங்களுக்கு கொடுத்தது பெயருக்கு முன்னால் ஒரு இனிஷியல்…
எங்களுக்கு நீங்கள் கொடுத்தது, பெயருக்கு பின்னாலும் இரண்டு எழுத்து…B.E பட்டம்
அப்பா யு ஆர் கிரேட்…

உங்களைப் பள்ளியில் சேர்க்கவோ, படிக்க வைக்கவோ ஒருவரும் உதவியதில்லை…
ஒவ்வொரு நிலையிலும் எங்கள் படிப்புக்கு நீங்கள் காட்டிய அக்கறை தானே எங்களைப் படிக்க வைத்தது…
அப்பா யு ஆர் கிரேட்…

உங்களுக்கு என்று உதாரண புருஷர்கள் யாரும் ஊரில் இல்லை…
ஆபிஸ் முடிந்ததும் தண்ணியடித்து விட்டு அலம்பல் செய்யும் கும்பல் தான் உங்கள் உடன் பணிபுரிந்தவர்கள்.
ஆனால் ஒருநாளும் தீய பழக்கங்களை நீங்கள் அண்ட விட்டதில்லை…
அப்பா யு ஆர் கிரேட்…

அப்போது நான் பிளஸ் 1 சேர்ந்து இருந்த நேரம்…
முதன் முதலாக ஆங்கில வழிக் கல்வி…
என்னை டியூஷனில் சேர்க்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி நான் அறிவேன்.
பிளஸ் 1 , பிளஸ் 2 விற்கு கல்லூரிப் பேராசிரியரிடம் டியூஷன்…
அந்த வருடம் டியூஷனே எடுப்பதில்லை என்று சொல்லி இருந்த அவர்,
பின்னாளில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ட்யூஷன் எடுக்க சம்மதித்தார்…
அதில் என்னையும் சேர்த்துக் கொண்டது, எனக்காக அல்ல…
அன்று அவரைப் பார்த்துப் பேசிய உங்கள் முகத்துக்காக…அதில் தெரிந்த அக்கறைக்காக…
அப்பா யு ஆர் கிரேட்…

திண்டுக்கல்லில் கல்லூரி விடுதியில் நாங்கள் தங்கி இருக்க,
சபரி மலை சென்று திரும்பும் வழியில் எங்களை வந்து பார்த்து விட்டு,
பிரசாதம் கொடுத்து விட்டுக் கிளம்பினீர்கள்.
பேருந்து நிறுத்தம் வந்து வழியனுப்ப வந்து இருக்கிறேன்..
செலவுக்குப் பணம் கொடுத்து விட்டு, கிளம்பும்போது என் கை குலுக்கி விட்டு
என்னைத் தோளோடு அணைத்து விடை பெற்றீர்கள்…
அதைப் பார்த்து இருந்த, அங்கே மெஸ் வைத்திருக்கும் அம்மா சொன்னார்…
“கொடுத்து வைச்சிருக்கனும் பா இப்படி ஒரு அப்பா கிடைக்க…”
அப்பா யு ஆர் கிரேட்…

தம்பியின் கல்யாணம் நடக்கிறது…
நம் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள்…
நான் மட்டும் வர முடியாமல் இங்கே அமெரிக்காவில் இருக்க வேண்டிய சூழ்நிலை…
திருமண நேரத்தில் தொலைபேசியில் அழைக்கிறேன்…
“ஹல்லோ அப்பா நான் சதீஷ் பேசுறேன்…”
என் குரலைக் கேட்ட உடன், நானும் அங்கு இருக்க முடியவில்லையே என்கிற துக்கத்தில்
உங்களால் பேசவே முடியவில்லை. நா தழுதழுக்க இரண்டு வார்த்தை பேசிவிட்டு
ஃபோனைத் தங்கையிடம் கொடுத்து விடுகிறீர்கள்…
இப்போது நினைத்தாலும் என் தொண்டை அடைக்கிறது…
அப்பா யு ஆர் கிரேட்…

எதை நான் சொல்வேன், எதை நான் விடுவேன்…
இந்த பூமியில் நீங்கள் தங்க இடம் கொடுக்கவில்லை ஆண்டவன்…
போனால் போகிறான்…
எங்கள் நெஞ்சத்தில் உள்ளதப்பா அத்தனை இடம்…
அதை எவராலும் அசைக்க முடியாது…
அப்பா யு ஆர் கிரேட்…
[சின்ன வயதில் நானும் அண்ணனும், அப்பாவுடன்]
[சின்ன வயதில் நானும் அண்ணனும், அப்பாவுடன்]