சுஜாதா

பாடப் புத்தகங்கள் தவிர்த்து, மற்ற புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த …

பாடப் புத்தகங்கள் தவிர்த்து, மற்ற புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த போது ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ஆரம்ப காலத்தில் படித்தது முக்கால் வாசி கதைகளும் நாவல்களும்.

சுவாமிமலை அரசு நூலகத்தில் அப்போது நான் உறுப்பினராவதற்காய், தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கி வந்தது ஞாபகம் இருக்கிறது.
அரசு நூலகத்தில் அதிகம் கிடைத்தது சிவசங்கரி, லக்ஷ்மி, ஜெயகாந்தன் மற்றும் தி.ஜானகிராமன்.
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுபா போன்றவர்களின் கிரைம் நாவல்கள் அங்கே கிடைக்காது. அதெல்லாம் தின வாடகைக்கு [ஒரு நாளைக்கு 25 காசு] செட்டியார் கடையில் வாங்கிப் படித்தது.

இப்படி ஏதோ ஒரு நாளில், எங்கேயோ என் கண்ணில் சிக்கியது ஒரு சுஜாதாவின் நாவல்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

இது சொல்லுக்கு மட்டுமல்ல, நல்ல எழுத்துக்கும் அஃதே இலக்கணம்.
முதல் நாவலிலேயே படித்தவரை பிணைத்துவிடக் கூடிய எழுத்து.
மிக முக்கியமாகக் கவர்ந்தது, கதையைப் படிப்பவருடன் நேரடியாகப் பேசுவது போன்ற த்வனியில் எழுதும் சுஜாதாவின் நடை.
எடுத்த எடுப்பிலேயே “நீங்கள் குப்புசாமியோ, ராமசாமியோ, இப்ராஹிமோ, பீட்டரோ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்” என்பது போல தொடங்குவார்.

அவரது எழுத்து நடை, படிப்பவர் ஒவ்வொருவருடனும் சொல்லப் படாத ஓர் அன்னியோன்னியத்தை தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கதைகளை இப்போது படித்தாலும் அது வெளிப்படுகிறது.

அதெல்லாம் சரி, இந்தப் பதிவு எழுத என்ன காரணம்?

சுஜாதாவைப் போல எழுதக் கூடியவர்கள் வரலாம். சுஜாதா போல, கற்றதும் பெற்றதும் தருவதற்கு இப்போதைக்கு யாரும் இல்லை.
நல்ல கவிதைகளை, ஹைக்கூக்களை, வெண்பாக்களை அவர் போல தெரிந்தெடுத்துப் பகிர்ந்து கொள்ள யாருமில்லை. ‘கற்றதும் பெற்றதுமி’ல் அவர் சுட்டிக்காட்டிய சில நல்ல கவிதைகளைக் கீழே பதிக்கிறேன். நீங்கள் படியுங்கள்.

கண்ணீரைப் படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
நீலமணி

புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை.
நா.முத்துக்குமார்

சுஜாதா – வி மிஸ் யூ.

சிறுகதை · சுஜாதா

சுஜாதா எழுதிய “சிறுகதை பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” …

சுஜாதா எழுதிய “சிறுகதை பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்கிற கட்டுரையைப் படித்தேன். அதில் இருந்து ஒரு துளித் தேன் இங்கே. இனி அவ்வபோது இது போன்ற விஷயங்களைப் பதிய முனைகிறேன்.

சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதி தான் அதற்கு.
சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. A short fictional narrative in prose. வேறு எந்த வரையறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது.


கதையை எப்படி சொல்ல வேண்டும்?
கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர, படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவும் இருக்காதே?
இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம் தான் எனக்குத் தெரிந்து. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையல்ல. பஸ் டிக்கட்.
ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருஷம் கழித்தோ, ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.

முழுவதுமாய்ப் படிக்க, இந்த PDF -ஐப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

அஞ்சலி · சுஜாதா

சுஜாதா- ஒரு சகாப்தம்

சுஜாதா – என்கிற ரங்கராஜன் என்கிற, தமிழின் முக்கியமான எழுத்தாளர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் தூவிய எழுத்துக்கள் இன்றும் காற்றில் கலந்து இருக்கிறது.

வாசகனோடு இயல்பாய்ப் பேசும் எழுத்து நடை அவருடையது. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகங்கள், இன்றும் பல மறு பதிப்புகளைக் காண்கிறது.

இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி வணங்கும், அவரை மதிக்கும் கோடிக் கணக்கான வாசகர்களில் ஒருவனான அடியேன்.