2

சுஜாதா – வி மிஸ் யூ!

பாடப் புத்தகங்கள் தவிர்த்து, மற்ற புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த போது ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ஆரம்ப காலத்தில் படித்தது முக்கால் வாசி கதைகளும் நாவல்களும்.

சுவாமிமலை அரசு நூலகத்தில் அப்போது நான் உறுப்பினராவதற்காய், தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கி வந்தது ஞாபகம் இருக்கிறது.
அரசு நூலகத்தில் அதிகம் கிடைத்தது சிவசங்கரி, லக்ஷ்மி, ஜெயகாந்தன் மற்றும் தி.ஜானகிராமன்.
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுபா போன்றவர்களின் கிரைம் நாவல்கள் அங்கே கிடைக்காது. அதெல்லாம் தின வாடகைக்கு [ஒரு நாளைக்கு 25 காசு] செட்டியார் கடையில் வாங்கிப் படித்தது.

இப்படி ஏதோ ஒரு நாளில், எங்கேயோ என் கண்ணில் சிக்கியது ஒரு சுஜாதாவின் நாவல்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

இது சொல்லுக்கு மட்டுமல்ல, நல்ல எழுத்துக்கும் அஃதே இலக்கணம்.
முதல் நாவலிலேயே படித்தவரை பிணைத்துவிடக் கூடிய எழுத்து.
மிக முக்கியமாகக் கவர்ந்தது, கதையைப் படிப்பவருடன் நேரடியாகப் பேசுவது போன்ற த்வனியில் எழுதும் சுஜாதாவின் நடை.
எடுத்த எடுப்பிலேயே “நீங்கள் குப்புசாமியோ, ராமசாமியோ, இப்ராஹிமோ, பீட்டரோ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்” என்பது போல தொடங்குவார்.

அவரது எழுத்து நடை, படிப்பவர் ஒவ்வொருவருடனும் சொல்லப் படாத ஓர் அன்னியோன்னியத்தை தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கதைகளை இப்போது படித்தாலும் அது வெளிப்படுகிறது.

அதெல்லாம் சரி, இந்தப் பதிவு எழுத என்ன காரணம்?

சுஜாதாவைப் போல எழுதக் கூடியவர்கள் வரலாம். சுஜாதா போல, கற்றதும் பெற்றதும் தருவதற்கு இப்போதைக்கு யாரும் இல்லை.
நல்ல கவிதைகளை, ஹைக்கூக்களை, வெண்பாக்களை அவர் போல தெரிந்தெடுத்துப் பகிர்ந்து கொள்ள யாருமில்லை. ‘கற்றதும் பெற்றதுமி’ல் அவர் சுட்டிக்காட்டிய சில நல்ல கவிதைகளைக் கீழே பதிக்கிறேன். நீங்கள் படியுங்கள்.

கண்ணீரைப் படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
நீலமணி

புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை.
நா.முத்துக்குமார்

சுஜாதா – வி மிஸ் யூ.

sadish

2 Comments

  1. அதேபோல வருட இறுதியில், அந்த வருடத்தில் வெளிவந்த சிறந்த படங்கள், சிறந்த பாடல்கள், சிறந்த சின்னத் திரை சீரியல்கள்-ன்னு அவர் கணிக்கறதும் சிறப்பா இருக்கும். நமக்குப் பிடிச்ச பாட்டு, படம் எல்லாம் சுஜாதா-க்கு பிடிச்ச லிஸ்ட்ல இருக்கான்னு பார்க்கறதுல ஒரு சந்தோஷம் இருக்கும்.
    இனி?? 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *