எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை.
ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை, கொஞ்சம் வார்த்தைகளை மடிச்சு மடிச்சு போட்டு,
கவிதை மாதிரி செஞ்சு இங்கே பதிஞ்சு வைச்சிட்டு, பக்கத்துலயே உட்கார்ந்து காத்திருக்கிறேன்.
வருங்காலத்துல இதைக் கவிதைன்னு யாராச்சும் ஒத்துகிட்டாலும் ஒத்துக்கலாம் 🙂
—
(கவிதைக்காக படத்தை சுட்ட இடம்…Photo Credit.)
—
தினந்தோறும் இந்த மரத்தடியில்
களைப்பாறும் மனிதன் நான்.
நேற்று மரத்தோடு பேசிய
என் உரையாடல் கேளுங்கள்…
“மரமே ஏ மரமே
பறந்து வரும் பறவைக்கூட்டம்
உன் பழத்தை உண்டுவிட்டு
உன் கிளையிலேயே எச்சமிடும்
நாடி வரும் விலங்குகளும்
உன் இலையைத் தின்றுவிட்டு
உன் காலடியில் சாணமிடும்…
தேடி வரும் மனித இனம்
உன்னை அழித்தேனும்
தன் வீடு கட்டி விடும்.
மரமே ஏ மரமே
ஒன்றுமே சொல்லாமல் ஏன்
ஒதுங்கி நிற்கிறாய்?
உன் வலிமை யாதென்று
ஊருக்கு நீ காட்டு…
கனி கொடுப்பதை
ஒரு வாரம் நிப்பாட்டு…
நிழல் கொடுக்கும் உன் கிளையை
உனக்குள்ளே நீ பூட்டு…
வெட்ட வரும் மனிதனையும்
ஓட ஓட நீ விரட்டு…
இப்படியெல்லாம் செய்தால் தான்
இவர்களுக்கெல்லாம் புத்தி வரும்”
சொல்லிவிட்டு சில நொடிகள்
அமைதியாய்ப் பார்த்திருந்தேன்.
சத்தமில்லா அந்நேரம்
அம்மரமும் பேசியது…
என் வாய்ப்பேச்சு நின்றது.
“பறவைகளோ விலங்குகளோ
தீங்கொன்றும் செய்வதில்லை…
எச்சமிடும் பறவைகளோ
என் விதையைப் பரப்பி விடும்…
இட்டு வைத்த சாணமும்
என் வேருக்கு உரமே ஆகும்..
உங்களுக்குப் புத்தி வர வேண்டும்
என்பதற்காய்
கெட்டவனாய் நான் மாற வேண்டும் என்றுரைத்தால்
அஃதெப்படி நியாயம் ஆகும்?”