கவிதை

எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை. ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள …

எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை.
ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை, கொஞ்சம் வார்த்தைகளை மடிச்சு மடிச்சு போட்டு,
கவிதை மாதிரி செஞ்சு இங்கே பதிஞ்சு வைச்சிட்டு, பக்கத்துலயே உட்கார்ந்து காத்திருக்கிறேன்.
வருங்காலத்துல இதைக் கவிதைன்னு யாராச்சும் ஒத்துகிட்டாலும் ஒத்துக்கலாம் 🙂

(கவிதைக்காக படத்தை சுட்ட இடம்…Photo Credit.)

maramandai-kku oor arivurai

தினந்தோறும் இந்த மரத்தடியில்
களைப்பாறும் மனிதன் நான்.
நேற்று மரத்தோடு பேசிய
என் உரையாடல் கேளுங்கள்…

“மரமே ஏ மரமே
பறந்து வரும் பறவைக்கூட்டம்
உன் பழத்தை உண்டுவிட்டு
உன் கிளையிலேயே எச்சமிடும்

நாடி வரும் விலங்குகளும்
உன் இலையைத் தின்றுவிட்டு
உன் காலடியில் சாணமிடும்…

தேடி வரும் மனித இனம்
உன்னை அழித்தேனும்
தன் வீடு கட்டி விடும்.

மரமே ஏ மரமே
ஒன்றுமே சொல்லாமல் ஏன்
ஒதுங்கி நிற்கிறாய்?

உன் வலிமை யாதென்று
ஊருக்கு நீ காட்டு…
கனி கொடுப்பதை
ஒரு வாரம் நிப்பாட்டு…
நிழல் கொடுக்கும் உன் கிளையை
உனக்குள்ளே நீ பூட்டு…
வெட்ட வரும் மனிதனையும்
ஓட ஓட நீ விரட்டு…
இப்படியெல்லாம் செய்தால் தான்
இவர்களுக்கெல்லாம் புத்தி வரும்”

சொல்லிவிட்டு சில நொடிகள்
அமைதியாய்ப் பார்த்திருந்தேன்.
சத்தமில்லா அந்நேரம்
அம்மரமும் பேசியது…
என் வாய்ப்பேச்சு நின்றது.

“பறவைகளோ விலங்குகளோ
தீங்கொன்றும் செய்வதில்லை…
எச்சமிடும் பறவைகளோ
என் விதையைப் பரப்பி விடும்…
இட்டு வைத்த சாணமும்
என் வேருக்கு உரமே ஆகும்..
உங்களுக்குப் புத்தி வர வேண்டும்
என்பதற்காய்
கெட்டவனாய் நான் மாற வேண்டும் என்றுரைத்தால்
அஃதெப்படி நியாயம் ஆகும்?”

கவிதை · பிடித்த பாடல்

அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற …

அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற பாடல்களை அவ்வப்போது இங்கே தரலாம் என்று இருக்கிறேன்.

இன்று நான் எடுத்துக் கொண்டது, “நதி எங்கே வளையும்” என்னும் ஒரு தத்துவப் பாடல். கோபால் என்கிற பாடகரின் குரலில், வித்யாசாகர் இசையில் உயிரோடு உயிராக என்கிற அஜித் நடித்த ஒரு படத்தின் பாடல்.

வைரமுத்துவின் வரிகள், கேட்பவரை சிந்திக்க வைப்பதுடன், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

பாடலைக் கேட்க கீழே கிளிக்குங்கள்.
[audio:https://kirukkals.com/wp-content/uploads/2007/05/nathiyengge.mp3%5D

பாடல் வரிகளைப் பாருங்கள்.

நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
மதி எங்கே அலையும், ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும், அது யாருக்குத் தெரியும் ?

அதை அறிந்து சொல்லவும் மதியில்லை
மதி இருந்தால் அதன் பேர் விதி இல்லை..

[நதி எங்கே]

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை..
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை…

எட்டு நாள் வாழும் பட்டாம்பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை.
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடமும் வாழவும் இல்லை…

கோரஸ்:
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….

புன்னகை அணிந்து போரை நடத்து….

கனவு காண்பது கண்களின் உரிமை.
கனவு களைப்பது காலத்தின் உரிமை.
சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை.

ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை.
நிறைந்த வாழ்வு நேராதிருந்தால்
வந்ததில் நிறைவது வாழ்வின் கடமை..

கோரஸ்:
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….

புன்னகை அணிந்து போரை நடத்து….

கவிதை

கல்லெறிதல்

தினம் ஒரு கவிதை என்றொரு யாஹு குழு உண்டு…தற்போது முழு மூச்சாக இயங்கவில்லை எனினும் அதில் நான் ரசித்த கவிதைகள் நிறைய உண்டு…

அதில் சில கவிதைகளை மீண்டும் பதிப்பிக்கிறேன் உங்களுக்காக.

கல்லெறிதல்

சாலையைச் செப்பனிடுவதற்காக
கொட்டப்பட்ட மணலில் தான்
கோவில் கட்டி விளையாடுவோம்

கலசத்திற்கு பதிலாக
ஒரு கொத்து காட்டாமினுக்கை
நட்டுவைப்போம்

நடுவிலொரு குழி பிரித்து
உருண்டையாய் களி மண்ணைப் பிடித்து
கர்ப்பக் கிரகம் அமைப்போம்.

காகிதப் பூவால் அலங்கரித்து
கன்னத்தில் போட்டுக் கொள்வோம்
சப்புக் கொட்டி.

எதன் பொருட்டாவது
கலைய நேரிடும்.,
மீண்டும் வந்து பார்க்க,
கலசத்தில் பட்டிருக்கும் நீரபிஷேகத்தில்
சற்றே கலைந்திருக்கும் அதன் உரு.
சோகத் தூவானமாய்க் கண்கள் அரும்பும்.

கோயிலைச் சிதைத்த நாயின் மீது
கல் விட்டெறிவர்
ஹமீதும் பீட்டரும்.

– எழுதியவர் : யுக பாரதி
– கவிதை வெளியானது : தினம் ஒரு கவிதை
– வெளியான தேதி : 26-02-2004

கவிதை · பயனுள

எனக்கு நானே ஞாபகப் படுத்திக் கொள்ள

அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள் …

இந்த துளியை (பெரும் தமிழ் இணையத்தில் இது ஒரு துளி தானே) இத்துடன் துவக்குகிறேன்…

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ

– மகா கவி சுப்ரமணிய பாரதி