நீங்க எப்பவாச்சும் யாருக்காச்சும் கடிதம் எழுதி இருக்கிறீர்களா?
விடுமுறை விண்ணப்பக் கடிதங்கள் [As I am suffering from fever] போன்றவை இதில் சேர்த்தி இல்லை.
பர்சனல் லெட்டர்ஸ். தமிழ்ல எப்படி சொல்லலாம்? தனிப்பட்ட கடிதங்கள்?
இந்தக் காலத்துலயும் இது வழக்கத்துல இருக்கா?
நான் காலேஜ் படிச்ச காலத்துல (1993 – 97) ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்குப் போவோம். ஊர் சுவாமிமலை. படிச்சதெல்லாம் திண்டுக்கல்ல.
இந்த ரெண்டு வார இடைவெளில, அப்பா கிட்டே இருந்து ஒரு கடிதமாச்சும் வந்திடும். நானும் ஒரு கடிதமாவது எழுதுவேன். செல்ஃபோன்லாம் அப்போ இல்லை. வீட்டு ஃபோனே கூட ஆரம்பத்திலே இல்லை. ஃபோன் பண்றதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை. காலேஜ்ல இருந்து திண்டுக்கல் நகருக்குள்ள வந்து, STD Booth வந்துதான் பண்ணனும். அதுக்கெல்லாம் செலவும் அதிகமாகும். ஒவ்வொரு செகண்டும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டு பார்த்துக்கிட்டே பேசுவோம். இதெல்லாம் விட கடிதம் தான் வசதி…
“அன்புள்ள அப்பாவிற்கு, நலம். நலம் தொடர மணியார்டர் அனுப்புக” என்பது போன்ற வழக்கமான கடிதங்கள் அல்ல.
“அன்புள்ள அப்பா அம்மாவிற்கு” எனத் தொடங்கி, வீட்டில் உள்ள ஓவ்வொருவரையும் குறித்த நல விசாரிப்புகளைக் கொண்ட பாசக் கவிதைகள். எனக்குத் தெரிந்து நான் தமிழில் தானாகவே எழுதத் தொடங்கியது இந்த மாதிரி கடிதத்தில் தான்.
என் அப்பாவின் கடிதங்கள் “அன்புச் செல்வன் சதீஷிற்கு” என்று தொடங்கும்.
நேரில் சொல்லிக் கொள்ளாத தன் அன்பையும் எழுத்தில் காட்டுவதாக இருக்கும்.
இதில் எப்போதுமே “நல்லா படிக்கிறியாப்பா” என்று ஒருமுறை கூட வராது.
“மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, குடிப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும்” போன்ற சட்டபூர்வமான எச்சரிக்கைகளுக்கும் இடமில்லை. அந்த விஷயத்தில் நாங்களே பொறுப்பாய் இருப்போம் என்கிற நம்பிக்கை.
ஒரு முறை ரோல் நம்பர் குளறுபடியில் எனக்கு அடுத்துள்ள மாணவனின் மதிப்பெண் பட்டியலை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க, அதில் எனக்கு இரண்டு அரியர்ஸ் என்று இருக்க, அப்பாவின் அடுத்த கடிதத்தில் ஒரே ஆறுதல் மழை. அதற்கு பதிலாய் நான் எழுதிய கடிதத்தில் “அதை எப்படி நீங்கள் நம்பினீர்கள்” எனக் கேட்டு வைக்க, அடுத்து ஒரு கடிதம் அப்பாவிடம் இருந்து வந்தது. “நான் சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. என் பிள்ளைகளாகிய நீங்கள் தான் என் சொத்து” என அப்பா உருகி எழுதி இருந்த வரிகள், கொண்டு வந்த நெகிழ்ச்சியை வேறு எது கொண்டு வந்திடும்?
இப்போதெல்லாம், எஸ்.டி.டி பூத் இல்லை. கடிதங்கள் எழுதுவதற்கு தேவையும் இல்லை. அப்பாவும் இல்லை.
sathish,
It is good to read your article on kaditham ezhuthi irukkireergala?
It is nice.
ur friend
K.Manohar
Satish, I accidentally stumbled upon your article and was impressed & touched by it. Why have you stopped writing ?
Sriram
from Muscat
Warm and heart melting . Good writing Sadish
Very touching.