சமீப காலத்தில் வந்த நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் என்னை பாதித்த திரைப்படங்களில் ஒன்று ‘கல்லூரி’.

சேவியர் தன்னுடைய வலைப்பதிவில், பாலு மகேந்திரா கூறியதாக எழுதி இருந்தார்.

பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இத்தகைய துயரமான நிகழ்வு ஒரு கனமான ஆவணப் படமாக எடுக்கப்பட வேண்டியதேயன்றி ஆடல் பாடல்களுக்கு இடையே காட்டப்பட வேண்டியதல்ல. என்னை பல நாள் தூக்கமிழக்கச் செய்த அந்த மாணவிகளின் ஓலத்தை இப்படி வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது சரியல்ல என்று குறிப்பிட்டார்.

இது சுத்த அபத்தமாய்ப் படுகிறது எனக்கு. கல்லூரி திரைப்படம் என்னவோ ஒரு மசாலா படம் என்கிற மாதிரியான பேச்சில் ஒரு துளியும் உண்மையில்லை. படம் பார்த்தவர்களுக்கு நிச்சயமாய் அது புரியும்.
ஒரு கொடூர சம்பவத்திற்குப் பின்னால் எத்தனை விதமான கனவுகள், லட்சியங்கள், உணர்வுகள் அழிந்து போயிருக்கும் என்பதையும், அதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆற்றாமையையும் மிக நுட்பமாய்ச் சொல்லும் படம் “கல்லூரி”.
ஆடல் பாடல் எல்லாம் இருக்கிறது படத்தில், ஆனால் அது எதுவும் மலிவான உணர்வுகளைத் தூண்டும் பாடல்கள் அல்ல.

வியாபார நோக்கத்தில் ஆடல், பாடலா ? பார்க்க “அழகிய தமிழ் மகன்”.

பாலாஜி சக்திவேலைக் கொஞ்சம் விடுங்கப்பா, இன்னும் பல நல்ல படங்கள் வர வேண்டி இருக்கு !