நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது.
சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும்.
நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993 அல்லது 1994ஆம் வருடம்.
அப்பொழுதுதான் முதன்முறை இந்தப் பாடலைக் கேட்டோம். கேட்டவுடனே மனதை மயக்கும் ஒரு தெய்வீகத் தன்மை அதில் இருந்தது. இது சினிமாப் பாடல் என நினைக்கவே இல்லை. பாம்பே ஜெயஸ்ரீயின் ஏதோ ஓர் ஆல்பம் என்று தான் நினைத்து இருந்தோம். அங்கே உள்ள சர்வரைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டோம் இது “வியட்னாம் காலனி” படப் பாடல் என்பதை.
அப்போதும் எங்களுக்குத் தெரியாது, இது தலைவரின் (இளையராஜா) மற்றுமொரு படைப்பு என்று.
என்ன ஒரு குழைவு. என்ன ஒரு பிர்க்கா… மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி செல்லும் ஒரு நதியின் லாவகம்.
அதில் ஒரு வரி. அதை எழுத்தில் சொன்னால்,
“உன் கோயில் எங்கும் நாதஸ்வரங்கள் கேட்கும்” என்று எழுதலாம், ஆனால் அது முழுமையாகச் சொல்வதாகாது.
பாடலைக் கேட்டால் உங்களுக்கே புரியும்.
[audio:https://kirukkals.com/wp-content/uploads/2007/05/kaiveenaiyai-yendhum-viyatnamcolony.mp3]