நான் பாடிய பாடல் · பிடித்த பாடல்

பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்…


திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள்.

இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம் ( குறிப்பாக சிவபுராணம்) பாடப்படுகிறது.

தாரை தப்பட்டை ராஜா சாரின் ஆயிரமாவது படம்.
அதன் பின்னணி இசையில் இரு வேறு இடங்களில், ராஜா சார் திருவாசகத்தில் இருந்து இரண்டு பாடல்களுக்கு இசை சேர்த்து உலவ விடுகிறார்.

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602

Project Madurai என்கிற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

ஒன்றிரண்டு முறை கேட்டாலே பாடலின் பொருள் ஓரளவுக்குப் புரிந்துவிடும்.

நான் படித்துப் புரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.
“செங்கமல மலர் போன்ற அழகான சிவபெருமானே, நான் உன் அடியவர்களைப் பார்க்கிறேன்.
உன் காலடியில் சேர்த்துக் கொள் என உன் மீது பைத்தியமாய் ஆகி, பிதற்றி உழல்கிறார்கள்.
நான் அந்த அளவுக்கு இன்னும் பண்படவில்லை;பற்றில்லாதவனாய் ஆகவில்லை; பணிவு என்னிடம் இல்லை.
ஆனாலும் நானும் உன் அடியார்கள் கூட்டமாய் நிற்கின்ற இந்த இடத்திலே, அவர்களுள் ஒருவன் போல ஒட்டிக் கொண்டு நின்று கொள்கிறேன். நீ அவர்களுக்கெல்லாம் அருளும் வேளையில் அப்படியே எனக்கும் முக்தியைக் கொடுத்துவிடேன். முத்து போன்றவன் நீ, நல்ல மணி போன்றவன் அல்லவா, தயவு செய்து எனக்கும் சேர்த்து அருள் செய்துவிடேன்…”

இசைஞானியின் இசைக்கு, என் புகழாரம் தேவையில்லை. சத்யபிரகாஷ் மற்றும் சுர்முகிக்கு நம் பாராட்டுகளைப் பகிர வேண்டும். இசைக்கும், பாடலின் பொருளுக்கும் சிறிதும் குறையில்லாது பாடி இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நண்பர் (அவர் பெயரே சிவக்குமார், சிவ பக்தர் தாம்) இந்தப் பாடலை என் குரலில் பதிவு செய்ய உதவினார். கீழே இருப்பது அதே பாடல் என் குரலில்.

கேளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். நன்றி.

 

பிடித்த பாடல்

இது தந்தையின் தாலாட்டு (A Father’s Lullaby)

சில நாட்களுக்கு முன், இசைஞானி இளையராஜா, நியூ ஜெர்ஸிக் கச்சேரியின் இறுதியில் பாடிய பாடலை, யூடியூபில் காணக் கிடைத்தது.
மீண்டும் மீண்டும் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேன்.

கடல்கடந்து வாழ்ந்தாலும், அவர் இசை கடந்து வாழ முடியாத என் போன்ற பல ரசிகர்களின் இதயம் தொட்டு வருடிய பாடலாக அது ஒலித்தது.

“தென்பாண்டிச் சீமையிலே” – பாடலின் மெட்டில், அவரே வேறு வரிகளை அமைத்துப் பாடியிருந்தார்.

ஏழேழு கடல் கடந்து
இங்கு வந்து வாழ்பவரே
என்றென்றும் உனக்கெனவே
இசை கொடுப்பேனே – இசை கொடுப்பேனே…

எங்கோ மண்ணில் பிறந்தாலும்
ஏதோ மண்ணில் வாழ்ந்தாலும்
உனையும் என்னையும் இணைப்பதெல்லாம்
உயிரின் மேலாம் – இசை தானே…

உன் வாழ்வில் சில நொடிகள்
என் வாழ்வில் சில நொடிகள்
என்றென்றும் நினைவில் நிற்கும்
இந்நொடி தானே இந்நொடி தானே…

மீளாத சோகமென்ன
தாளாத துயரமென்ன
சொல்லாமல் துடைப்பதெது
என்னிசை தானே என்னிசை தானே…

ஆ..ஆ…(ஆலாபனை)

தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே – இனியும்
அழுது தேப்பாதே…
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே…
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

நம்மையறியாமல்
நம் கண்களின் ஓரத்தில் கண்ணீரைத் துளிர்க்க வைப்பதும் அவரே
அதைத் துடைப்பதுவும் அவரே!

எனக்குத் தெரிந்தவரை இதுதான் ஒரு தந்தையின் தாலாட்டு.
தன் இசை பலருக்குத் தாலாட்டாய் இருக்கிறது என்பதை அவரும் உணர்ந்தே தான் கொடுத்து வருகிறார்.

மீளாத சோகமென்ன
தாளாத துயரமென்ன
சொல்லாமல் துடைப்பதெது
என்னிசை தானே என்னிசை தானே…

நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

அஞ்சலி

குரலாய் வாழும் ஸ்வர்ணலதா

swarnalatha

ஸ்வர்ணலதாவின் திடீர் மறைவு, தமிழ் சினிமா இசைக்கும், என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு…
சொல்வனத்தில் மிக அழகாக அவரின் பல பாடல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

அவரின் “என்னுள்ளே என்னுள்ளே”, “மாலையில் யாரோ”, “போறாளே பொன்னுத்தாயி”, “எவனோ ஒருவன்” என எத்தனையோ பாடல்கள் எப்படியும் உங்கள் காதுகளை எட்டிவிடும்.
ஆனால் அவ்வளவாகக் கேட்கப்படாத அவரின் சில பாடல்களை இங்கே தருகிறேன்.

பாடல்: பாரடி குயிலே
இசை: இசைஞானி
படம்: நாங்கள்

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/Naangal-PaaradiKuyile.mp3″ title=”பாரடி குயிலே”]

பாடல்: அந்திக் கருக்கையிலே
இசை: வித்யாசாகர்
படம்: அள்ளித் தந்த வானம்

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/anthi-karukkaiyile.mp3″ title=”அந்திக் கருக்கையிலே”]

இதே படத்தில் இருந்து “தட்டான் கிடைக்கலையோ” என்று இன்னும் உருக்கமான பாடலும் ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார். அதைத் தேடல் உள்ளவர்கள் கேட்கட்டும்.

பாடல்: புதிய பறவை பறந்ததே
இசை: இசைஞானி
படம்: தென்றல் வரும் தெரு

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/puthiya-paravai-paranthathe.mp3″ title=”புதிய பறவை பறந்ததே”]

ஸ்வர்ணலதா,
குரலாய் என்றென்றும் வாழ்வாய் நீ!

நாட்டு நடப்பு

இசைஞானி இளையராஜாவிற்கு இந்திய அரசு, பத்மபூஷண் விருதினை வழங்கி, விருதிற்குப் …

Ilayaraaja -at a Press Meet
இசைஞானி இளையராஜாவிற்கு இந்திய அரசு, பத்மபூஷண் விருதினை வழங்கி, விருதிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
அது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர் கொடுத்தது நிருபர்களுடனான ஒரு சந்திப்பு. நான் கொடுப்பது இந்தப் பதிவு.

வாழ்த்துக்கள் ராஜா சார்!

[Ilayaraaja -at a Press Meet – படம் நன்றி: IndiaGlitz.com]

சினிமா விமர்சனம்

நான் கடவுள் – என் எண்ணங்கள்

நான் கடவுள் ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது.
நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள்.
இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்,
குறிப்பாக

  1. விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் சொல்லிய பாலாவின் நேர்த்தி
  2. மெல்லிய நகைச்சுவை இழையோடும் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை
  3. படம் முழுக்க வியாபித்திருக்கும் ராஜாவின் பொருத்தமான பின்னணியிசை
  4. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு
  5. கதாபாத்திரங்களாகவே மாறிவிட்ட நடிகர்கள் பூஜா, கோவை கிருஷ்ணமூர்த்தி[‘முருகன்’ கதாபாத்திரம்], அறிமுக நடிகர் ராஜேந்திரன் [வில்லன் கதாபாத்திரம்]

என சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம்.

நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.
Continue reading “நான் கடவுள் – என் எண்ணங்கள்”

என்னவென்று சொல்வது

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் …

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதில் ஒரு கதை இப்படிப் போகிறது.

ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி இருக்கிறார்.
பேராசிரியர் பதட்டமாக “கோப்பை நிறைந்து இருக்கிறது. இதற்கு மேல் எவ்வளவு ஊற்றினாலும் அது தங்காது. வழிந்து வெளியேறிவிடும்.” என்கிறார்.
துறவி நிதானமாக “நீயும் இந்தக் கோப்பை போல தான் இருக்கிறாய்; முதலில் உன் கோப்பையைக் காலியாக்கு, அதற்குப் பின் நாம் ஜென் பற்றிப் பேசுவோம்” என்கிறார்.

இதைப் படித்துக் கொஞ்ச நேரத்தில், யதேச்சையாய், ராஜா சார், கல்கி இதழுக்கு, 1997-இல் கொடுத்த ஒரு பேட்டியின் PDF வடிவத்தைப் படிக்க நேர்ந்தது.
அதில் ராஜா சார் இந்தக் கதையின் சாரத்தையே குறிப்பிடுகிறார்.

இளையராஜாசினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப் போன விஷயம்.இதற்குத் தான் மக்கள் தலையாட்டுவார்கள்.
என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால் தானே நான் அதில் ஏதாவது போட முடியும்?
நீங்கள் கொண்டுவருகிற போதே, அதில் எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டுவருகிறீர்கள். அதற்கு மேலும் அதில் நான் எதைப் போட முடியும்?

முழுப் பேட்டியையும் படிக்கக் கீழே கிளிக்குங்கள்.
கல்கியில் வெளிவந்த இளையராஜாவின் பேட்டி – PDF வடிவில்.

பிடித்த பாடல்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் …

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை.

“எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” – நந்தா
“நம்ம காட்டுல மழ பெய்யுது” – பட்டியல்
“அறியாத வயசு, புரியாத மனசு” – பருத்திவீரன்
“பறவையே எங்கு இருக்கிறாய்?” – கற்றது தமிழ்

எல்லாப் பாடல்களையும் தனித் தனியாய் அலசலாம், ஆனால் இந்தப் பதிவில் நான் பேச விரும்புவது சமீபத்தில் எனது ஐஃபோனில் அதிகமாக கேட்கப்பட்ட பாடலில் சேர்ந்து கொண்ட, கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய, “பறவையே எங்கு இருக்கிறாய்?” பாடல் பற்றி.

பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…
பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே!!
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே!!!
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே,
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ?
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ?

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக,
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக….
(பறவேயே…)

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே!
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்.
இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

(பறவையே)

ஏழை…காதல்….
மலைகளில் தனில் தோன்றுகின்ற ஒரு நதியாமோ……
மண்ணில்..விழுந்தும் ஒரு காயமின்றி…
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ….

இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி,
வேறென்ன நானும் கேட்பேன்?
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…!

இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா?…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?…

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

ராஜா சாரின் தன் குரலில் ஒவ்வொரு வரிக்குள்ளும் எத்தனை உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கிறார், அதுவும் அந்த “முதல் முறை” வரிகள் ஒவ்வொன்றும், எவ்வளவு மெருகுடன் வெளிவருகிறது பாருங்கள். Wow…What an awesome rendition!

முழுப்பாடலையும் கேட்க கீழே கிளிக்குங்கள்.
பறவையே எங்கு இருக்கிறாய்?
[audio:paravaiye-engu-irukkiraai.mp3]

என்னவென்று சொல்வது · பிடித்த பாடல்

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் …

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”.

இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான்.
எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும்.

சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் பாராட்டி, ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்து இருந்தது. அதனால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக, தேடிப் பிடித்து, எக்மோரில் ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்ததாய் ஞாபகம்.
இடைவேளையைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. பச்சை நிற உடையில், மன நோயாளிகள் நிறைந்த அந்த மடத்தினுள்ளே நம்மை நடத்திச் செல்லும் காமரா. அப்போது ஆரம்பிக்கும் தலைவர் குரலில் அந்தப் பாடல், “எங்கே செல்லும் இந்தப் பாதை..யாரோ யாரோ அறிவார்….”
நெஞ்சைப் பிசையும் பாடல்-னு சொல்லுவாங்களே, அந்த வகைல நம்பர் ஒன் அது.
எங்கே செல்லும் இந்தப் பாதை
[audio:enge-sellum.mp3]

அதே மாதிரி பிதாமகன் படத்தில், பின்னணி இசையில் சேர்க்கப்பட்ட பாடல் தான் “யாரது யாரது மனசத் திறந்தது..திறந்தது…” உருக்கிவிடும் கேட்பவரை. கேட்டுப் பாருங்கள்.
பிதாமகன் பின்னணி இசைப் பாடல்
[audio:yaarathu.mp3]

இது போல ஏதாச்சும் ஒன்று கட்டாயம் இருக்கும் “நான் கடவுள்” ல. சரியா?

பிடித்த திரைப்படம்

குணா திரைப்படப் பின்னணி இசை

குணா – திரைப்படமும், தளபதி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இரண்டு திரைப்படங்கள்.
இரண்டுமே ராஜா சாரின் இசையில், மிகச் சிறந்த பாடல்கள் மட்டுமன்றி, அருமையான பின்னணி இசையும் உள்ள திரைப்படங்கள்.
புதிதாக வரும் ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவசியம் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த படங்களின் பின்னணி இசையில் பொதிந்து உள்ளன.

சமீபத்தில் ரேடியோஸ்பதியின் வலைப்பதிவில், இந்த பதிவைப் படித்து, கேட்டு ரசித்தேன். நீங்களும் கேளுங்கள்.
குணா பின்னணி இசைத் தொகுப்பு.

பிடித்த பாடல்

கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம்.
பாடல் : கண்கள் இரண்டால்.
ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம்.
எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை”

பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ்.
பின்வரும் பாடல்களில் ஏதாவது ஒன்றை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டால், உங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – இளையராஜா
சின்னக் கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில் – இளையராஜா
அழகான ராட்சசியே – முதல்வன் – ஏ.ஆர்.ரகுமான்
சுடும் நிலவு சுடாத சூரியன் – தம்பி – வித்யாசாகர்

“இதுவா, இது ரீதிகௌளை” என்று சொல்லிவிட்டீர்களோ, உங்கள் முதுகில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.

பாடலைப் பார்க்க கீழே சொடுக்குங்கள்
Continue reading “கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்”