கல்லூரி திரைப்படம் – பாலு மகேந்திரா கருத்து – என் பார்வை

சமீப காலத்தில் வந்த நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் என்னை பாதித்த திரைப்படங்களில் ஒன்று ‘கல்லூரி’.

சேவியர் தன்னுடைய வலைப்பதிவில், பாலு மகேந்திரா கூறியதாக எழுதி இருந்தார்.

பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இத்தகைய துயரமான நிகழ்வு ஒரு கனமான ஆவணப் படமாக எடுக்கப்பட வேண்டியதேயன்றி ஆடல் பாடல்களுக்கு இடையே காட்டப்பட வேண்டியதல்ல. என்னை பல நாள் தூக்கமிழக்கச் செய்த அந்த மாணவிகளின் ஓலத்தை இப்படி வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது சரியல்ல என்று குறிப்பிட்டார்.

இது சுத்த அபத்தமாய்ப் படுகிறது எனக்கு. கல்லூரி திரைப்படம் என்னவோ ஒரு மசாலா படம் என்கிற மாதிரியான பேச்சில் ஒரு துளியும் உண்மையில்லை. படம் பார்த்தவர்களுக்கு நிச்சயமாய் அது புரியும்.
ஒரு கொடூர சம்பவத்திற்குப் பின்னால் எத்தனை விதமான கனவுகள், லட்சியங்கள், உணர்வுகள் அழிந்து போயிருக்கும் என்பதையும், அதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆற்றாமையையும் மிக நுட்பமாய்ச் சொல்லும் படம் “கல்லூரி”.
ஆடல் பாடல் எல்லாம் இருக்கிறது படத்தில், ஆனால் அது எதுவும் மலிவான உணர்வுகளைத் தூண்டும் பாடல்கள் அல்ல.

வியாபார நோக்கத்தில் ஆடல், பாடலா ? பார்க்க “அழகிய தமிழ் மகன்”.

பாலாஜி சக்திவேலைக் கொஞ்சம் விடுங்கப்பா, இன்னும் பல நல்ல படங்கள் வர வேண்டி இருக்கு !

8 மறுமொழிகள் இதுவரை

வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா

தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது.

இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அது இப்போது இங்கே உங்களுக்காக !

7 மறுமொழிகள் இதுவரை

Jun 12, 2007 - அஞ்சலிComments Off on Protected: தந்தையர் தினம்

Protected: தந்தையர் தினம்

தந்தையர் தினம் – Father’s Day உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

இந்த வருடம் ஜூன் 17 ஆம் தேதி வருகிறது.

நம் வீட்டிற்கு ஒரு தந்தையர் தினத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அது நம் அப்பா பிறந்த ஜூன் 15 ஆம் தேதியை வைத்துக் கொள்ளலாமே ?

1. எதற்காகக் கொண்டாட வேண்டும்?

நாம் நம் அப்பாவின் மீது கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் நம் சந்ததிகள் உணர்ந்து கொள்ள.

2. எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இது மகிழ்ச்சியாய்க் கொண்டாட வேண்டியது. நம் அப்பா நம் கூட இருப்பார்கள். ஒரு காந்தி ஜெயந்தி, ஒரு ராம நவமி, ஒரு வினாயகர் சதுர்த்தி போல, நம் வீட்டிற்கு இனி ஒவ்வொரு வருடமும் ஜூன் 15 தான் தந்தையர் தினம்.

நம் ஒவ்வொருவரும் சந்தோஷமான மனநிலையில் இந்த நாளை எதிர்கொள்ள வேண்டும்.
புத்தாடைகள், இனிப்புகள் எல்லாம் இருக்கலாம்.
இது நம் அப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.

3. முக்கியமான நோக்கம் என்ன ?

அடுத்த தலைமுறைக்கு நாம் நம் அப்பாவைப் பற்றிச் சொல்வது.
இந்த நாளில், நாம் ஒவ்வொருவரும் இந்த நாளைக் கொண்டாடும்போது, பிள்ளைகள் நிச்சயமாய்க் கேட்கும் “எதற்கு இந்த விழா?” என்று.
அப்போது சொல்ல வேண்டும் “எங்கள் அப்பா தானே எங்களை எல்லோரையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினது. அவங்களாலே தானே நாம எல்லாரும் இன்னைக்கு நல்ல நிலமைல இருக்கோம். அதான் அவங்க பிறந்த நாளைக் கொண்டாடுறோம்.”
“தேசத் தந்தை காந்தியோட பிறந்த நாளைக் கொண்டாடுறோம் இல்லை. அது மாதிரி நம்ம வீட்டுத் தந்தை அவங்க தானே.”

இப்படி சொல்லிக் கொடுப்பதை நாம் இந்த வருடத்தில் இருந்தே செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
நம் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை என்றால் கூட.

4. இப்படி ஒரு நாள் இல்லையென்றால் நாம் சொல்லிக் கொடுக்கப் போவது இல்லையா என்ன?
இருக்கலாம். ஆனால் இந்த நாளில் கொண்டாடும் போது, கட்டாயம் அந்த கேள்வி குழந்தைகளிடம் வரும். கட்டாயம் அதற்கு பதிலும் கிடைக்கும்.


பாலகுமாரன் எழுதிய “அப்பம் வடை தயிர்சாதம்” என்கிற நாவலின் கதையை நினைவு படுத்துகிறேன்.
இப்பொழுது வாடும் ஓர் இளைஞனுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அமெரிக்கா போவதற்கு முன், மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் “அப்பம் வடை தயிர்சாதம்” னு கூவிக் கூவி விற்க வேண்டும் என அவன் குடும்பமே அவனை அழைத்துச் செல்கிறது. ஏதோ ஒரு வேண்டுதலை நிறைவேற்றப் போவது போல எல்லோரும் கிளம்பிச் செல்கிறார்கள்.
அந்த இளைஞனின் அப்பா இன்று ஒரு பெரும் பணக்காரர். அவருக்குக் கீழே பல பேர் இன்று வேலை பார்க்கிறார்கள். இருந்தாலும் எல்லா பந்தாக்களையும் விட்டு விட்டு, ஒரு சாதாரண வியாபாரி போல “அப்பம் வடை தயிர்சாதம்” னு பொட்டலம் போட்டு விக்கிறாங்க.
அப்போ அந்தப் பையன் கேட்கிறான் “எதற்கு நாம் இப்படி செய்கிறோம்?” என்று.
அப்போ அவனுக்கு அந்த குடும்பத்தின் கதை சொல்லப் படுகிறது.
அவனுடைய தாத்தாவிற்கு தாத்தா, பிரிட்டிஷ் காலத்தில், வைதீகம் செய்து பிழைக்க முடியாத நேரத்தில், தன் குடும்பத்தைக் காப்பாற்ற, எவ்வளவு கஷ்டப்பட்டு, “அப்பம், வடை தயிர்சாதம்” சமைத்துப் பொட்டலம் கட்டி, ரயில்வே ஸ்டேஷனில் கூவிக் கூவி விற்றார் என்பது அவனுக்கு விளக்கப் படுகிறது.

Comments Off on Protected: தந்தையர் தினம் இதுவரை

சமீபத்தில் ரசித்த பாடல்கள்

“ஏம்பா லேட்டஸ்ட்டா எத்தனையோ பாட்டு வந்துகிட்டு இருக்கே, அதுல உனக்கு பிடிச்ச பாட்டு பத்தி எழுதலாமுல்ல ?”
என்று நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட பல பேருக்காக என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், லிஸ்ட்டுக்குப் போயிடுறேன்.

பாடல் – குரல் – இசை – படம் என்ற வரிசையில் படிக்கவும்.

1. காற்றின் மொழி – பலராம் – வித்யாசாகர் – மொழி.
2. சஹானா தூரல் – உதித் நாராயண், சின்மயி. – ஏ.ஆர்.ரகுமான் – சிவாஜி
3. ஆசப் பட்ட எல்லாத்தையும் – ஹரிஹரன் – தேவா – வியாபாரி
4. கொஞ்சம் கொஞ்சம் – கார்த்திக் – தலைவர் இளையராஜா – மாயக்கண்ணாடி
5. பொறந்திருச்சி காலம் – டி.கே.கலா, சைந்தவி – வித்யாசாகர் – சிவப்பதிகாரம்.

இன்னும் சொல்வேன்.

ஒரே ஒரு மறுமொழி இதுவரை

நதி எங்கே வளையும் – கரை ரெண்டும் அறியும்

அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற பாடல்களை அவ்வப்போது இங்கே தரலாம் என்று இருக்கிறேன்.

இன்று நான் எடுத்துக் கொண்டது, “நதி எங்கே வளையும்” என்னும் ஒரு தத்துவப் பாடல். கோபால் என்கிற பாடகரின் குரலில், வித்யாசாகர் இசையில் உயிரோடு உயிராக என்கிற அஜித் நடித்த ஒரு படத்தின் பாடல்.

வைரமுத்துவின் வரிகள், கேட்பவரை சிந்திக்க வைப்பதுடன், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

பாடலைக் கேட்க கீழே கிளிக்குங்கள்.
[audio:http://kirukkals.com/wp-content/uploads/2007/05/nathiyengge.mp3]

பாடல் வரிகளைப் பாருங்கள்.

நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
மதி எங்கே அலையும், ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும், அது யாருக்குத் தெரியும் ?

அதை அறிந்து சொல்லவும் மதியில்லை
மதி இருந்தால் அதன் பேர் விதி இல்லை..

[நதி எங்கே]

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை..
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை…

எட்டு நாள் வாழும் பட்டாம்பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை.
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடமும் வாழவும் இல்லை…

கோரஸ்:
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….

புன்னகை அணிந்து போரை நடத்து….

கனவு காண்பது கண்களின் உரிமை.
கனவு களைப்பது காலத்தின் உரிமை.
சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை.

ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை.
நிறைந்த வாழ்வு நேராதிருந்தால்
வந்ததில் நிறைவது வாழ்வின் கடமை..

கோரஸ்:
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….

புன்னகை அணிந்து போரை நடத்து….

3 மறுமொழிகள் இதுவரை

படித்தில் பிடித்தது…

மீண்டும் சில சுட்டிகள். சமீபத்தில் படித்ததில் பிடித்தது.

  1. சேவியர் எழுதிய அறிவியல் புனைகதை ஏலி ஏலி லெமா சபக்தானி
  2. அரைபிளேடு எழுதிய கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி – குறும்பான முழு நீள கதை
  3. சரவ் எழுதிய திருமணம் 1.0

3 மறுமொழிகள் இதுவரை

குறும்பு செய்ய விரும்பு

சிறுகதைப் போட்டிக்காக…

சென்னை எக்மோரில் அந்த ட்ரெயின் வந்து நிற்கும்போது, காலை மணி 6.30.
நகரம் அப்போதே பரபரப்பாகத் தொடங்கி இருந்தது…

ஒரு கையில் சூட்கேசும், தோளில் ஹேண்ட் பேக் ஒன்றும் சுமந்தபடி மெதுவாக பெட்டியில் இருந்து இறங்கினான் கண்ணன். அவன் கண்களைப் பார்த்தால், தூங்கி பல நாட்கள் ஆனது போல் இருந்தது. ஏதோ ஒரு கவலை அவன் கண்ணை சுற்றி இருந்தது.

எக்மோர் ரயில் நிலையக் கட்டிடத்தை நிமிர்ந்து ஏற இறங்கப் பார்த்தான்…
அம்மாடியோவ்….எத்தனை பழைய பில்டிங்…எத்தனை வருடம் ஆகியிருக்குமோ ? பிரிட்டிழ் காலத்தில் கட்டியது தானே ? எத்தனை பேரைப் பார்த்து இருக்கும் இந்த பில்டிங்…? தினம் தினம் பிழைப்பு தேடி இங்கு வந்து இறங்குபவர்கள் தான் எத்தனை பேர் ?
மிரட்சியுடன் ஏதேதோ சிந்தனையில் சுற்றுமுற்றும் பார்த்தபடி மெல்ல நடக்க ஆரம்பித்தான்…

எக்மோர் வாசலில் இருந்த ஒரு வேனில் தன் சகாக்களிடம் பேசிக் கொண்டிருந்த ராதா, இவனைப் பார்த்ததும் அவர்களிடம் கண்ணாலேயே சாடை காட்டிவிட்டு இவனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

எங்கோ பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த கண்ணனுக்குத் திடீர் என்று எல்லோரும் தன்னையே பார்ப்பது போல தோன்றியது…”சே..சே..பிரமையா இருக்கும்” என்று நடக்கும்போது, அந்த இளம் பெண், அவனை நோக்கி வருவதை கவனித்தான்…
அவளைப் பார்த்தும் பார்க்காதது போல நடந்தான்…
அவள் அவனுக்கு முன்னால் வந்து வழிமறித்தாள்….
ரா : “வாங்க சார், வணக்கம்…உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருந்தேன்…”
க : “நீங்க யாருன்னே எனக்குத் தெரியாதுங்க…வேற யாரோனு நினைச்சுக்கிட்டு எங்கிட்ட பேசுறீங்க…”
ரா : “இல்ல சார்…நான் உங்களைப் பார்க்க தான் காலைல இருந்து வெயிட் பண்றேன்.”
க : “சும்மா விளையாடாதீங்க மேடம்…நான் இப்ப தான் முத முதல்ல மெட்ராஸ் வரேன்…”

சொல்லிவிட்டு விடுவிடுவென வலது புறம் திரும்பி நடக்க ஆரம்பித்தான்….

ராதா அங்கேயே நின்று கொண்டு குரல் கொடுத்தாள்…
ரா : “சார்…நான் உங்களுக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோட வந்து இருக்கேன்…MRF ல சேல்ஸ் ரெப் வேலைக்கு.”

கண்ணன் ஒரு நிமிடம் நின்றான்…கண்களில் ஒரு மலர்ச்சி தெரிந்தது…
கண நேரத்தில் அந்த முகத்தில் ஆயிரம் உணர்ச்சி வெள்ளம்…

திரும்பி அவளை நோக்கி நடந்தான். ராதா மெல்லிய புன்னகையுடன் அவனிடம் கொடுப்பதற்காக அவள் பேக்கில் இருந்து அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை எடுத்தாள்.
க : “எனக்கென்னவோ நீங்க விளையாடுறீங்க னு தான் தோனுது…”
ரா : “இதோ பாருங்க, நான் என்ன செஞ்சா நீங்க நம்புவீங்க ?”

ஒரு நிமிடம் யோசித்தான்.
க : “எங்கே, இத்தனை பேருக்கு முன்னாலே எனக்கு ஒரு முத்தம் கொடுங்க பார்ப்போம்…”
(சும்மா விளையாடுற பொண்ணா இருந்தா, முத்தமெல்லாம் கொடுக்குமா என்ன ? )
ராதா அதற்கும் சளைக்கவில்லை…
கொஞ்சம் ஒரு முறை சுற்றிலும் பார்த்தவள், துணிந்து அவன் கன்னத்தில் லேசாக முத்தமிட்டு அவசரமாய் தள்ளி நின்று கொண்டாள்.
கண்ணனுக்கு இந்த உலகமே ஒரு நொடி ஸ்தம்பித்து மீண்டும் உயிர் பெற்றது போல் இருந்தது.
அவனால் நம்பவே முடியவில்லை…
க(கன்னத்தைத் தடவியபடியே) : “என்னங்க இது…ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேங்க….”

ஆசையுடன் அவளை ஓரக் கண்ணால் பார்த்தபடியே அவள் கொடுத்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைப் பிரித்தான்…

க : “என்னங்க இது என் பேரே போடல…”

கலகலவென சிரிப்பொலி எங்கும் கேட்டது…ராதா பின்புறத்தில் வேனில் இருந்த தன் சகாக்களுக்கு சாடை காட்ட, அவர்களும் சிரித்தபடி வேனில் இருந்து இறங்கி இவனை நோக்கி வந்தனர்…எல்லோர் முகத்திலும்சிரிப்பு கரை புரண்டது…
ராதா சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினாள்…

ரா : “ஸாரிங்க . உங்க கிட்ட உண்மையை சொல்லிடுறேன்…நான் Q TV ல இருந்து “குறும்பு செய்ய விரும்பு” ப்ரொகிராமுக்காக ஒரு சின்ன ஐடியா பண்ணினோம்… திடிர்னு எக்மோர் ல இறங்குற ஒரு வேலை தேடுற பையன் கிட்டே இப்படி பேசினா என்ன ஆகும் னு…”
அம்மாடியோ…அப்படியே நம்பிட்டீங்களே சார்…ரொம்ப பாவம் சார் நீங்க…இந்த ஊர்ல எப்படித்தான் பொழைக்கப் போறீங்களோ …”

சிரிப்பை அடக்க பெருமுயற்சி செய்து கொண்டு இருந்தாள்..
அவளின் சகாக்கள் இப்பொழுது சிரித்துக் கொண்டே கண்ணனின் கையைப் பிடித்துக் குலுக்கினர்….
கண்ணனுக்கு முகமெல்லாம் வாடிப் போய் இருந்தது…மெல்ல அவள் முத்தம் கொடுத்த கன்னத்தைத் தடவியபடியே நடந்தான்…

அன்று மாலை…சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், கண்ணனும் அவன் நண்பர்களும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கொஞ்சம் ஒட்டுக் கேட்போம்…

நண்பன் 1 : “கண்ணா, கலக்கிட்டேடா…உங்க அப்பா அம்மா உனக்கு சரியா தான் பேரு வச்சிருக்காங்க…குறும்புன்னா கண்ணன் ல….”
நண்பண் 2 : “என்னா ஆக்டிங் டா மச்சி…சிவாஜி கணேசனே தோத்துடுவார் போ…”
நண்பன் 1 : “தம்பி…”பெட்” வைச்சிருக்க நீ நியாபகம் இருக்குல்ல…நம்ம மச்சி போனான்…ராதா கிட்டேயே முத்தம் வாங்குறேன் னு சொன்னான்….செஞ்சிட்டான்….பேசின படி இந்த மாசம் ஒன்னாம் தேதி ஆயிரம் ரூபா சொளையா வெட்டணும் கண்ணனுக்கு, நியாபகம் வைச்சிக்கோ…நான் தான் இந்த “போட்டி”க்கு ஜட்ஜ் ”
நண்பன் 2 : “ஆமா..மச்சி உனக்கு எப்படிரா தெரியும் இன்னைக்கு அந்த ப்ரொகிராம், அந்த ஐடியா எல்லாம் ?”

கண்ணன் : “சிம்பிள் மேட்டர் மச்சி…நம்ம ‘high 5’ ப்ரோகிராம் ஆர்த்தில்ல, அது கிட்டே கேட்டேன்…ராதாவோட அடுத்த ப்ரொகிராம் என்ன னு…அது புட்டு புட்டு வைச்சிடுச்சு…ஹா…ஹா…முதல்ல இந்த ஆயிரம் ரூபா வந்த உடனே ட்ரீட் தான்…அதுக்கு நம்ம ஆர்த்தியைக் கட்டாயம் மறக்காம கூப்பிடணும்..என்ன.. சரியா!”

10 மறுமொழிகள் இதுவரை

இந்த வீணைக்குத் தெரியாது…

இரயில் சினேகம் என்று ஓர் அருமையான தொலைக்காட்சி தொடர், சிறுவயதில் பார்த்து ரசித்தது.

அதில் வரும் பாடல்களும் மிக அருமை. குறிப்பாக சஹானா ராகத்தில் அமைந்த இந்த பாடல். வி.எஸ்.நரசிம்மன் என்கிற இசை அமைப்பாளர் [ தலைவர் இளையராஜாவிடம் வயலின் வாசித்து இருக்கிறார் ] . மிக நேர்த்தியான இசை இந்த பாடலுக்கு.
வைரமுத்துவின் வரிகளும் சேர்ந்தால், வேறென்ன வேண்டும்.

கேளுங்கள், பாருங்கள்…

5 மறுமொழிகள் இதுவரை

காற்றில் வரும் கீதமே…

ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன்.
அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்….

சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.

பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ…
இசை : தலைவர் இளையராஜா
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, ஹரிஹரனுடன் தலைவரும்.

என்ன ஒரு அற்புதமான பாடல்…கல்யாணி ராகத்தின் சாயலில் இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தைக் கண்ணில் நிறுத்த வேண்டிய காட்சியமைப்பு….

இந்த பாடலின் ராகத்தில், தாராளமாக எந்த கடவுளுக்கும் பாடல் எழுதிப் பாடலாம்…அப்படி ஒரு தெய்வாம்சம் இதில் உணர்கிறேன்…

நீங்களும் கேட்க, கீழே க்ளிக்குங்களேன்…

[audio:Hariharan-SGoshal-Bhava-Katril-Varum.mp3]

14 மறுமொழிகள் இதுவரை