பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்…


திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள்.

இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம் ( குறிப்பாக சிவபுராணம்) பாடப்படுகிறது.

தாரை தப்பட்டை ராஜா சாரின் ஆயிரமாவது படம்.
அதன் பின்னணி இசையில் இரு வேறு இடங்களில், ராஜா சார் திருவாசகத்தில் இருந்து இரண்டு பாடல்களுக்கு இசை சேர்த்து உலவ விடுகிறார்.

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602

Project Madurai என்கிற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

ஒன்றிரண்டு முறை கேட்டாலே பாடலின் பொருள் ஓரளவுக்குப் புரிந்துவிடும்.

நான் படித்துப் புரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.
“செங்கமல மலர் போன்ற அழகான சிவபெருமானே, நான் உன் அடியவர்களைப் பார்க்கிறேன்.
உன் காலடியில் சேர்த்துக் கொள் என உன் மீது பைத்தியமாய் ஆகி, பிதற்றி உழல்கிறார்கள்.
நான் அந்த அளவுக்கு இன்னும் பண்படவில்லை;பற்றில்லாதவனாய் ஆகவில்லை; பணிவு என்னிடம் இல்லை.
ஆனாலும் நானும் உன் அடியார்கள் கூட்டமாய் நிற்கின்ற இந்த இடத்திலே, அவர்களுள் ஒருவன் போல ஒட்டிக் கொண்டு நின்று கொள்கிறேன். நீ அவர்களுக்கெல்லாம் அருளும் வேளையில் அப்படியே எனக்கும் முக்தியைக் கொடுத்துவிடேன். முத்து போன்றவன் நீ, நல்ல மணி போன்றவன் அல்லவா, தயவு செய்து எனக்கும் சேர்த்து அருள் செய்துவிடேன்…”

இசைஞானியின் இசைக்கு, என் புகழாரம் தேவையில்லை. சத்யபிரகாஷ் மற்றும் சுர்முகிக்கு நம் பாராட்டுகளைப் பகிர வேண்டும். இசைக்கும், பாடலின் பொருளுக்கும் சிறிதும் குறையில்லாது பாடி இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நண்பர் (அவர் பெயரே சிவக்குமார், சிவ பக்தர் தாம்) இந்தப் பாடலை என் குரலில் பதிவு செய்ய உதவினார். கீழே இருப்பது அதே பாடல் என் குரலில்.

கேளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். நன்றி.

 

மறுமொழி இல்லை இதுவரை

ஜர்கண்டி ஜர்கண்டி – கூச்சண்டி கூச்சண்டி

ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கி, அடுத்து அட்லாண்டா விமானம் பிடிக்க ஒன்றரை மணி நேரம் தான் இருந்தது.
இதற்கிடையில் ஒரு பஸ், ரெண்டு எஸ்கலேட்டர்கள், ஒரு ட்ரெயின் இவற்றைக் கடக்க ஓடிக் கொண்டிருந்தேன்.
அப்போது பக்கத்தில் வந்த ஒரு நபர் “நான் சிகாகோ போறேன், நீங்க அட்லாண்டா தானே போறீங்க, இவங்களை அந்த கேட் வரை கொண்டு போய் விட்டுடுங்களேன் ப்ளீஸ்’ என்று தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த ஒரு தம்பதியரைக் காட்டினார்.
“அடடா எனக்கு சுத்தமா தெலுங்கு தெரியாது பாஸ்” என சொல்ல எத்தனிக்கும் முன்
“ஜஸ்ட் கேட் வரைக்கும் கொண்டு போய் விடுங்க போதும்” என்று சொல்லி நழுவி விட்டார்.
சரி என்று அவர்களையும் கூட்டிக் கொண்டு சற்றே விரைவாக நடக்க ஆரம்பித்தேன்.
indian-couple-old
A sample Picture found at www.caricaturist.sg/, provided here as it fits the story well.
தெலுங்கு அம்மாவிற்கு கொஞ்சமே கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது. இல்லாவிட்டால் சில சமயம் தமிழையே கொஞ்சம் உடைத்து உடைத்து பேசினால் புரிந்து கொள்கிறார். ஏற்கெனவே ஒருமுறை அவர் அமெரிக்கா விஜயம் செய்து இருக்கிறாராம்.
அப்பா கேரக்டர்க்குத் தெலுங்கு மட்டுமே பரிச்சயம். காவி நிறத்தில் குர்த்தாவும் வேஷ்டியும் அணிந்து இருந்தார்.
“வேகமா நடக்கணும்” என்பதை எனக்குத் தெரிந்த தெலுங்கில் “ஜர்கண்டி ஜர்கண்டி” என்றேன் .
உடனே அந்த அம்மா ஏதோ சொல்ல, அவர் வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு “என் ராசாவின் மனசிலே” ராஜ்கிரண் போல தொடையைக் காட்டி நடக்க ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் வந்த ஒரு ஜெர்மானிய ஏர்போர்ட் தொழிலாளி “என்ன உங்க அப்பா இப்படி வேஷ்டியைத் தூக்கிக்கிட்டு நடக்கிறார்” என்பது போல என்னைப் பார்த்தார். (ஒருவேளை எனக்குத்தான் அப்படி தோனுச்சோ ?)
இருந்தாலும் திரும்ப வேஷ்டியை இறக்கி விடுங்க என்று தெலுங்கில் சொல்லத் தெரியாததால் சைகையில் நான் நடித்துக் காட்டி….
“ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா…இப்பவே கண்ணைக் கட்டுதே”…

அடுத்து செக்குரிட்டி செக் பாயிண்டில் இலவசமாக “ஃபுல் பாடி எக்ஸ் ரே” எடுத்துக் கொண்டிருந்தார்கள். airport-security ஒவ்வொருவராக கண்ணாடிக் கூண்டொன்றில், இரண்டு கையையும் தூக்கிக் கொண்டு நிற்க, அந்த மெசின் ஒரு முழு எக்ஸ் ரேயை எடுத்துக் கொள்ளும். இதை நான் அவர்களுக்கு விளக்குமுன், அந்த ஏர்போர்ட் பணியாளர், தெலுங்கு அப்பாவை முதலில் அழைத்து விட்டார்.
இவருக்கு “எப்படி நிற்க வேண்டும், எப்படி கையைத் தூக்கிக் கொள்ள வேண்டும்” என்பதெல்லாம் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் சொல்லி முடித்துப் பிறகு அவரே நடித்து காண்பிக்க….
“அப்ப்ப்பாபாடா !”

எல்லாம் முடிந்து, கேட் அருகே வந்து சேர்ந்த போது, அம்மா தான் ஆரம்பித்தார். “டாய்லட்… டாய்லட், ரெஸ்ட்ரூம்” என்றார்.
“அம்மா, ஒன்லி ஃபைவ் மினிட்ஸ், குயிக், சீக்கிரம்” என்றேன். “குயிக் ஒன்லி” என்றவர் அவரிடம் திரும்பி ஏதோ தெலுங்கில் சொல்ல, அவர் எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல தலையசைத்து அவசரமா ஒரு ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து மூன்றே நிமிடத்தில் வெளியே வந்து விட்டார். அடுத்த சில நொடிகளில் உள்ளே சென்ற துப்புரவுத் தொழிலாளி ஏதோ முனகிக் கொண்டே வெளியே வந்து “Restroom not in Service” என்று போர்டை மாட்டிவிட்டு உள்ளே சென்றார்.
இதெல்லாம் அப்பாவோட தப்பு இல்லை. இது தான் வாழ்க்கைல அவர் பார்த்த முதல் வெஸ்டர்ன் டாய்லட். அவர் என்ன பண்ணுவார் பாவம். கொஞ்சம் அதிகமா டிஸ்ஸு பேப்பரை ஒரே நேரத்தில் ஃப்ளஷ் செய்து விட்டார் போல. அதுக்குப் போய்ட்டு…

அடுத்து “ஃப்ராங்க்ஃபர்ட் டு அட்லாண்டா” ஃப்ளைட்டில் ஏறி அவர்கள் இருக்கைகளில் அமர வைத்து, அதற்கு இன்னும் மூன்று வரிசைக்குப் பின்னால் என்னுடைய இடம் தேடி அமர்ந்தேன். “அப்பாடா, இன்னும் 10 மணி நேரம் இருக்கிறது. கொஞ்சம் நல்லா தூங்கலாம்” என்று அவர்கள் கொடுத்த போர்வையைக் கழுத்து வரை போர்த்திக் கொண்டு, சீட்டைப் பின்னால் முடிந்த வரை சாய்த்துக் கொண்டு, கண்ணை மூடி, நிம்மதியாய்…
“எக்ஸ்கியூஸ் மி, திஸ் லேடி வான்ட்ஸ் டு டாக் டு யூ” என்று பக்கத்து சீட்காரர் என்னை எழுப்ப, யார் என்று பார்த்தால் நம்ம தெலுங்கம்மா.
சுங்க வரித்துறையின் படிவத்துடன் (Customs Form). மணி என்ன என்று பார்த்தேன். கிளம்பி ரெண்டு மணி நேரம் தான் ஆகியிருக்கு. இறங்குறதுக்கு இன்னும் ஆறு ஏழு மணி நேரம் இருக்கு.
“நீங்க போய் உட்கார்ந்துக்கோங்க, நானே இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க சீட்டுக்கு வர்றேன்” அப்படின்றதை எனக்குத் தெரிந்த தெலுங்கில் “கூச்சண்டி, கூச்சண்டி, நேனே வஸ்தாவு” என்றேன். இதுவரை நான் பேசியதிலேயே இது தான் அவருக்கு நன்றாகப் புரிந்தது போல, கொஞ்சம் அதிகமாகவே சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.

இப்படி எழுந்ததில், தூக்கம் கலைந்து போனதால், முன்னால் இருந்த ஒளித்திரையில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடினேன். ‘பேசாம ஏதாச்சும் தெலுங்கு படத்தை சப்-டைட்டிலோடு பார்த்து, இறங்குறதுக்குள்ளே தெலுங்கு கத்துக்கலாமா’ என்ற எண்ணத்தைப் புறந்தள்ளி ‘Happy New Year’ என ஆங்கிலத்திலேயே பெயரிடப்பட்ட ஹிந்தி படத்தை ஓடவிட்டேன். ஷாருக்கான் நடிப்பில் ஒரு ‘Oceans 11’.

படம் முடியும் நேரத்தில் நம் தெலுங்கம்மா பாஸ்போர்ட், கஸ்டம்ஸ் ஃபார்முடன் வந்துவிட்டார் .
கஸ்டம்ஸ் ஃபார்ம் ஒரு குடும்பத்திற்கு ஒன்றே போதும். சரி என்று அவர் கணவரின் பாஸ்போர்ட்டில் இருந்து விவரங்களை எடுத்து படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன் .
“அமெரிக்கா வில் எந்த அட்ரஸ்” என்றேன்.
“மேங்கோ மேரி ” என்றார் .
“மேங்கோ மேரி யா? புல் அட்ரஸ் வேணும் ” என்றேன்.
அம்மணி தன் கைப்பையில் இருந்து ஒரு குட்டி போன் புக்கைக் கையில் எடுத்து ஒரு பக்கத்தைத் திருப்பி நீட்டினார் . (ஓ இந்த மாதிரி புக்கெல்லாம் இன்னும் புழக்கத்திலே தான் இருக்கா?)
அதில் நல்ல வேளையாக அட்ரஸை யாரோ ஆங்கிலத்திலேயே எழுதி இருந்தார்கள்.
“ஓ அது மாண்ட்கோ மரி , அலபாமா வா ” Montgomery Alabama. சரியா போச்சு போ !

எல்லாம் முடித்து, நிரப்பிய படிவத்தில் அவர் கணவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ள சொன்னேன்.
“அவரா? அவரு கைநாட்டு தாங்க” என்பதைக் கட்டை விரலை ஸ்டாம்ப் பேடில் உருட்டுவது போல காற்றிலேயே உருட்டிக் காட்டினார். (அட அட என்ன ஓர் அபிநயம்!)
“ஓ .. சரி பரவால்ல, நீங்களே உங்க கையெழுத்தைப் போடுங்க” என்றேன்.
“ஆனா மேலே அவர் பேர் போட்டு இருக்கே? பரவால்லையா?” என்று அவர் தெலுங்கிலேயே கேட்டாலும் எனக்குப் புரிந்தது.
“ஆங்…இதெல்லாம் மட்டும் விவரமா கேளுங்க, முதல்லயே சொல்லி இருக்கலாம்ல ஐயா கைநாட்டு ன்னு” என்பதை மனதுக்குள் சொல்லிக் கொண்டு
“ஓக்கே தான். சரி எதுக்கு வம்பு .. வேற ஃபார்ம் ஃபில் பண்ணிடுறேன்” என்று வெளியில் சொல்லிவிட்டு, இன்னொரு ஃபார்மில் அவரது விவரங்களை உள்ளிட்டேன்.
அதன் கீழே நிறுத்தி நிதானமாக அவர் கையெழுத்தைப் போட்டார். சுந்தரத் தெலுங்கில் ஒவ்வோர் எழுத்திலும் ஒரு ஜாங்கிரி.

அட்லாண்டாவில் இறங்கியதும், அவரவர் தன் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு , கடகடவென நகர்ந்து கொண்டிருந்தனர். நம் தெலுங்கம்மாவும் அப்பாவும் மட்டும் இறங்கி ஓர் ஓரமாய் நின்று என்னைத் தேடிக் கொண்டிருந்தனர். சரியென்று அவர்களை அழைத்து வெளியே வரும் வேளையில், வீல் சேர் (Wheel Chair) சேவை செய்ய விமான நிலையப் பணியாளர்கள் தயாராக நின்றனர். நான் அவர்களிடம் பேசி, இவர்கள் இருவரையும் வீல் சேரில் உட்கார வைத்துவிட்டு, எஸ்கலேட்டரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நான் இமிக்ரேஷன் கியூவில் (Immigration Queue) நின்று கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் இமிக்ரேஷன் முடிந்து, வீல்சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த அம்மா மட்டும் திரும்பி இந்த கியூவில் நான் எங்கே இருக்கிறேன் என்று கண்ணாலேயே தேடினார். (இல்லை நான் தான் அப்படி நினைச்சுக்கிட்டேனோ என்னவோ ! :) )

மறுமொழி இல்லை இதுவரை

மேலும் சில பாடல்கள் – என் குரலில்

பாடும் திறமையுள்ள நண்பர்கள் சேர்ந்து மாதமொரு முறை சந்திப்போம்.
அதுபோன்ற சந்திப்புகளில் நான் பாடிய பாடல்களில் இருந்து சில, உங்கள் பார்வைக்கு.
பார்த்து கமெண்ட்டுங்கள்.

பாடும் வானம்பாடி ஹா… நான் பாடும் பாடல்…

அடியே என்ன ராகம்… ரம்மி

பட்டு வண்ண சேலைக்காரி… எங்கேயோ கேட்ட குரல்

இளஞ்சோலை பூத்ததா… பாடும் வானம்பாடி

மறுமொழி இல்லை இதுவரை

கடிதம் எழுதி இருக்கிறீர்களா?

நீங்க எப்பவாச்சும் யாருக்காச்சும் கடிதம் எழுதி இருக்கிறீர்களா?
விடுமுறை விண்ணப்பக் கடிதங்கள் [As I am suffering from fever] போன்றவை இதில் சேர்த்தி இல்லை.
பர்சனல் லெட்டர்ஸ். தமிழ்ல எப்படி சொல்லலாம்? தனிப்பட்ட கடிதங்கள்?
Inland Letter

இந்தக் காலத்துலயும் இது வழக்கத்துல இருக்கா?

நான் காலேஜ் படிச்ச காலத்துல (1993 – 97) ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்குப் போவோம். ஊர் சுவாமிமலை. படிச்சதெல்லாம் திண்டுக்கல்ல.
இந்த ரெண்டு வார இடைவெளில, அப்பா கிட்டே இருந்து ஒரு கடிதமாச்சும் வந்திடும். நானும் ஒரு கடிதமாவது எழுதுவேன். செல்ஃபோன்லாம் அப்போ இல்லை. வீட்டு ஃபோனே கூட ஆரம்பத்திலே இல்லை. ஃபோன் பண்றதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை. காலேஜ்ல இருந்து திண்டுக்கல் நகருக்குள்ள வந்து, STD (STD ன்னா அது இல்லைபா, இது… :)) Booth வந்துதான் பண்ணனும். அதுக்கெல்லாம் செலவும் அதிகமாகும். ஒவ்வொரு செகண்டும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டு பார்த்துக்கிட்டே பேசுவோம். இதெல்லாம் விட கடிதம் தான் வசதி…

“அன்புள்ள அப்பாவிற்கு, நலம். நலம் தொடர மணியார்டர் அனுப்புக” என்பது போன்ற வழக்கமான கடிதங்கள் அல்ல.
“அன்புள்ள அப்பா அம்மாவிற்கு” எனத் தொடங்கி, வீட்டில் உள்ள ஓவ்வொருவரையும் குறித்த நல விசாரிப்புகளைக் கொண்ட பாசக் கவிதைகள். எனக்குத் தெரிந்து நான் தமிழில் தானாகவே எழுதத் தொடங்கியது இந்த மாதிரி கடிதத்தில் தான்.
என் அப்பாவின் கடிதங்கள் “அன்புச் செல்வன் சதீஷிற்கு” என்று தொடங்கும்.
நேரில் சொல்லிக் கொள்ளாத தன் அன்பையும் எழுத்தில் காட்டுவதாக இருக்கும்.
இதில் எப்போதுமே “நல்லா படிக்கிறியாப்பா” என்று ஒருமுறை கூட வராது.
“மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, குடிப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும்” போன்ற சட்டபூர்வமான எச்சரிக்கைகளுக்கும் இடமில்லை. அந்த விஷயத்தில் நாங்களே பொறுப்பாய் இருப்போம் என்கிற நம்பிக்கை.
ஒரு முறை ரோல் நம்பர் குளறுபடியில் எனக்கு அடுத்துள்ள மாணவனின் மதிப்பெண் பட்டியலை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க, அதில் எனக்கு இரண்டு அரியர்ஸ் என்று இருக்க, அப்பாவின் அடுத்த கடிதத்தில் ஒரே ஆறுதல் மழை. அதற்கு பதிலாய் நான் எழுதிய கடிதத்தில் “அதை எப்படி நீங்கள் நம்பினீர்கள்” எனக் கேட்டு வைக்க, அடுத்து ஒரு கடிதம் அப்பாவிடம் இருந்து வந்தது. “நான் சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. என் பிள்ளைகளாகிய நீங்கள் தான் என் சொத்து” என அப்பா உருகி எழுதி இருந்த வரிகள், கொண்டு வந்த நெகிழ்ச்சியை வேறு எது கொண்டு வந்திடும்?

இப்போதெல்லாம், எஸ்.டி.டி பூத் இல்லை. கடிதங்கள் எழுதுவதற்கு தேவையும் இல்லை. அப்பாவும் இல்லை.
appa

2 மறுமொழிகள் இதுவரை

மரமண்டைக்கு ஓர் அறிவுரை

எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை.
ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை, கொஞ்சம் வார்த்தைகளை மடிச்சு மடிச்சு போட்டு,
கவிதை மாதிரி செஞ்சு இங்கே பதிஞ்சு வைச்சிட்டு, பக்கத்துலயே உட்கார்ந்து காத்திருக்கிறேன்.
வருங்காலத்துல இதைக் கவிதைன்னு யாராச்சும் ஒத்துகிட்டாலும் ஒத்துக்கலாம் :)

(கவிதைக்காக படத்தை சுட்ட இடம்…Photo Credit.)

maramandai-kku oor arivurai

தினந்தோறும் இந்த மரத்தடியில்
களைப்பாறும் மனிதன் நான்.
நேற்று மரத்தோடு பேசிய
என் உரையாடல் கேளுங்கள்…

“மரமே ஏ மரமே
பறந்து வரும் பறவைக்கூட்டம்
உன் பழத்தை உண்டுவிட்டு
உன் கிளையிலேயே எச்சமிடும்

நாடி வரும் விலங்குகளும்
உன் இலையைத் தின்றுவிட்டு
உன் காலடியில் சாணமிடும்…

தேடி வரும் மனித இனம்
உன்னை அழித்தேனும்
தன் வீடு கட்டி விடும்.

மரமே ஏ மரமே
ஒன்றுமே சொல்லாமல் ஏன்
ஒதுங்கி நிற்கிறாய்?

உன் வலிமை யாதென்று
ஊருக்கு நீ காட்டு…
கனி கொடுப்பதை
ஒரு வாரம் நிப்பாட்டு…
நிழல் கொடுக்கும் உன் கிளையை
உனக்குள்ளே நீ பூட்டு…
வெட்ட வரும் மனிதனையும்
ஓட ஓட நீ விரட்டு…
இப்படியெல்லாம் செய்தால் தான்
இவர்களுக்கெல்லாம் புத்தி வரும்”

சொல்லிவிட்டு சில நொடிகள்
அமைதியாய்ப் பார்த்திருந்தேன்.
சத்தமில்லா அந்நேரம்
அம்மரமும் பேசியது…
என் வாய்ப்பேச்சு நின்றது.

“பறவைகளோ விலங்குகளோ
தீங்கொன்றும் செய்வதில்லை…
எச்சமிடும் பறவைகளோ
என் விதையைப் பரப்பி விடும்…
இட்டு வைத்த சாணமும்
என் வேருக்கு உரமே ஆகும்..
உங்களுக்குப் புத்தி வர வேண்டும்
என்பதற்காய்
கெட்டவனாய் நான் மாற வேண்டும் என்றுரைத்தால்
அஃதெப்படி நியாயம் ஆகும்?”

மறுமொழி இல்லை இதுவரை

நானும் ஒரு பாடகன் – இந்த முறை (2013)

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “நம்ம ஊரு சிங்கர்ஸ்”-இல், நானும் ஒரு பாடகன் என பங்கு கொண்டேன்.

அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி.

போற்றிப் பாடடி பொண்ணே – தேவர் மகன் – கிராமியப் பாடல்கள் சுற்று Folk Songs Round

விழி மூடி யோசித்தால் – அயன் – மேற்கத்தியப் பாடல்கள் சுற்று Western Songs Round

அம்மா என்றழைக்காத – மன்னன் – பாரம்பரிய இசைப் பாடல்கள் சுற்று Classical Songs Round

தேனே தென்பாண்டி மீனே – உதய கீதம் – காதிற்கினிய கீதங்கள் சுற்று Melody Songs Round

மறுமொழி இல்லை இதுவரை

இது தந்தையின் தாலாட்டு (A Father’s Lullaby)

சில நாட்களுக்கு முன், இசைஞானி இளையராஜா, நியூ ஜெர்ஸிக் கச்சேரியின் இறுதியில் பாடிய பாடலை, யூடியூபில் காணக் கிடைத்தது.
மீண்டும் மீண்டும் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேன்.

கடல்கடந்து வாழ்ந்தாலும், அவர் இசை கடந்து வாழ முடியாத என் போன்ற பல ரசிகர்களின் இதயம் தொட்டு வருடிய பாடலாக அது ஒலித்தது.

“தென்பாண்டிச் சீமையிலே” – பாடலின் மெட்டில், அவரே வேறு வரிகளை அமைத்துப் பாடியிருந்தார்.

ஏழேழு கடல் கடந்து
இங்கு வந்து வாழ்பவரே
என்றென்றும் உனக்கெனவே
இசை கொடுப்பேனே – இசை கொடுப்பேனே…

எங்கோ மண்ணில் பிறந்தாலும்
ஏதோ மண்ணில் வாழ்ந்தாலும்
உனையும் என்னையும் இணைப்பதெல்லாம்
உயிரின் மேலாம் – இசை தானே…

உன் வாழ்வில் சில நொடிகள்
என் வாழ்வில் சில நொடிகள்
என்றென்றும் நினைவில் நிற்கும்
இந்நொடி தானே இந்நொடி தானே…

மீளாத சோகமென்ன
தாளாத துயரமென்ன
சொல்லாமல் துடைப்பதெது
என்னிசை தானே என்னிசை தானே…

ஆ..ஆ…(ஆலாபனை)

தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே – இனியும்
அழுது தேப்பாதே…
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே…
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

நம்மையறியாமல்
நம் கண்களின் ஓரத்தில் கண்ணீரைத் துளிர்க்க வைப்பதும் அவரே
அதைத் துடைப்பதுவும் அவரே!

எனக்குத் தெரிந்தவரை இதுதான் ஒரு தந்தையின் தாலாட்டு.
தன் இசை பலருக்குத் தாலாட்டாய் இருக்கிறது என்பதை அவரும் உணர்ந்தே தான் கொடுத்து வருகிறார்.

மீளாத சோகமென்ன
தாளாத துயரமென்ன
சொல்லாமல் துடைப்பதெது
என்னிசை தானே என்னிசை தானே…

நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

மறுமொழி இல்லை இதுவரை

உதவியும் நன்றியும்

thirukuralஇந்த இரண்டு திருக்குறள்களைப் பற்றி எங்கேயோ யாரோ சொல்லிக் கேட்ட சில விஷயங்களைப் பகிர வேண்டுமென ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது முயற்சிக்கிறேன்.
இரண்டுமே அறத்துப்பாலில், இல்லறவியல் துறையில், புதல்வரைப் பெறுதல் என்கிற அதிகாரத்திலிருந்து.
குறள் 67:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

கலைஞர் உரை:

தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

குறள் 70:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

கலைஞர் உரை:

ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

கலைஞர் மட்டுமல்லாது எல்லா உரையாசிரியர்களும், தந்தை மகனுக்கு செய்வதை உதவி என்றும், மகன் தந்தைக்கு செய்வதை நன்றி என்றும் எழுதி இருக்கின்றனர்.

ஆனால் திருவள்ளுவர் பயன்படுத்திய வார்த்தைகளை மீண்டும் கவனியுங்கள்.

அவர் கூறும்போது தந்தை மகனுக்குச் செய்வதை நன்றி என்கிறார். மகன் தந்தைக்கு செய்வதை உதவி என்கிறார்.

தந்தை மகற்காற்றும் நன்றி:

எதற்காக ஒரு தந்தை மகனுக்கு நன்றி செய்ய வேண்டும்?

1. அவருக்கு மகனாக வந்து பிறந்ததற்கு – அப்படிப் பிறக்கவில்லையென்றால், தந்தையை மலடு என்று ஊரார் பழித்திருப்பர்.

2. தந்தையின் பரம்பரை குணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு.

3. ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்தவனுக்கு, சமுதாயத்தில் கிடைக்கிற கூடுதல் மரியாதைக்கு.

ஒரு தந்தை, தன் மகனை அவையத்தில் முந்தியிருப்பச் செய்வது, அவர் ஆற்றும் நன்றிக்கடன்.

யாராவது நன்றிக்கடன் செய்துவிட்டு அதற்கு கைம்மாறு எதிர்பார்ப்பார்களா?

“நான் உன்னைப் படிக்க வைத்தேனே, நல்ல வேலை வாங்கிக் கொடுத்தேனே, நீ எனக்கு என்ன செய்தாய்?” என்று ஒரு தந்தை எதிர்பார்க்கவே கூடாது.

அதுதான் வள்ளுவனின் செய்தி.

மகன் தந்தைக்காற்றும் உதவி:

அப்படி என்றால் “இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்து இருக்க வேண்டும்?” என சமூகம் சொல்லும்படி நடந்து கொள்வது ஒரு மகனின் கடமை இல்லையா? கைம்மாறு இல்லையா?

உம் ஹூம்.

அது ஓர் உதவி. மகன் தந்தைக்கு அந்த உதவியை செய்யலாம், செய்யாமலும் போகலாம்.

இப்படி சொல்வதால், பிள்ளைகள் உருப்படாமல் போய்விடாதா?

ஆகாது.

பிள்ளை வளர்ப்பதை எந்த மனநிலையில் இருந்து கொண்டு நாம் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதே வள்ளுவனின் எண்ணம்.

நாம் நம்முடைய நன்றிக் கடனை செலுத்துவதற்காக நம் பிள்ளைகளை அவையத்து முந்தியிருப்பச் செய்வோம். வேறு எந்தக் கைம்மாறும் எதிர் பாராமல்.

இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் தானாகவே “இவன் தந்தை எந்நோற்றான் கொல்” எனச் செய்துவிடுவார்கள்.

—–

இங்கே தந்தை எனக் குறிப்பிட்டு இருந்தாலும், அது தாய் தந்தை இருவரையுமே குறிக்கும்.

மகன் எனக் குறிப்பிட்டு இருந்தாலும், மகன் மகள் இருவரையும் குறிக்கும்.

—–

எங்கேயோ, யாரோ சொன்னதை என்னால் முடிந்த அளவில் நினைவிலுருந்து பதிந்திருக்கிறேன்.

உங்கள் கருத்துகளைக் கமெண்டுங்கள். நன்றி.

ஒரே ஒரு மறுமொழி இதுவரை

நானும் ஒரு பாடகன்

சின்ன வயதில், குளியலறைப் பாடகனாய்த் தொடங்கி, கல்லூரி நாட்களில் ஓரிரு முறை மேடையேறிய அனுபவம் உண்டு.
என்னை மிகவும் நெருக்கமாய் அறிந்தவர்களுக்கு நான் பாடுவேன் என்று தெரியும்.
ஒரு சில நாட்களில், நண்பர்களின் சந்திப்புகளில் பாடியிருக்கிறேன்.

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “சூப்பர் சிங்கர் 2012”-இல், நானும் ஒரு பாடகன் என என் பெயரைக் கொடுத்தேன்.
குரல் தேர்வுச் சுற்றைத்(Audition) தாண்டி, கிராமியப் பாடல்கள் சுற்றையும்(Folk Songs) தாண்டி, காதிற்கினிய கானங்கள்(Melody Songs) சுற்று வரை வந்தேன்.
அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி.
குரல் தேர்வுச் சுற்று.

கிராமியப் பாடல்கள் சுற்று.

காதிற்கினிய கானங்கள் சுற்று

ஒரே ஒரு மறுமொழி இதுவரை

சர சர சாரக் காத்து…sara sara saara kaathu

சமீபத்தில் வரப்போகும் ‘வாகை சூட வா” திரைப்படத்திற்காக, வைரமுத்துவின் வரிகள், அறிமுக இசையமைப்பாளர் எம்.கிப்ரனின் இசையில், சின்மயியின் இனிய குரலில் வந்திருக்கும் சிறப்பான பாடல்.

கதாநாயகியிடம் இருக்கும் ஒரு குறும்பு மற்றும் காதலை, கிராமிய மணத்துடன் வெளிக்கொணர்ந்த வைரமுத்துவின் வரிகள் சிறப்பானவை. இந்தப் பாடல் குறித்து சின்மயி அவரது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் பல இடங்களில் இதன் தங்கிலீஷ் லிரிக்ஸ் காணப்பட்டது. அதைத் தமிழில் கொடுக்கலாம் என்ற ஆர்வத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆனாலும் சில வார்த்தைகள் சரியாகப் புரியவில்லை. தெரிந்தவர்கள் கமெண்டுங்கள்.

சர சர சாரக் காத்து வீசும்போது
சாரப் பாத்து பேசும்போது
சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே…(2)

இத்து…இத்து இத்துப் போன நெஞ்சைத் தைக்க
ஒத்தப் பார்வ பாத்துச் செல்லு
மொத்த சொத்தும் எழுதித் தாரேன்
மூச்சு உட்பட…(2)

டீ…. போல நீ என்னை ஏன் ஆத்துறே…
(சர சர)
எங்க ஊரு பிடிக்குதா…எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல…சுட்ட ஈரல் மணக்குதா
முட்ட கோழி பிடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புகள் கடிக்கையில் என்னைக் கொஞ்சம் நினைக்கவா?

கம்பஞ்சோறு ருசிக்க வா…சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடைக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோச சுட்டு வச்சி காவ காக்குறேன்..
முக்கண்ணு நுங்கு நான் விக்குறேன்
மண்டு நீ கங்கே(kangu) ஏன் கேக்குறே?

(சர சர)
புல்லுக்கட்டு வாசமா புத்திக்குள்ளே வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுறே கையளவு மனசுலே
கையெழுத்துப் போடுற கன்னிப் பொண்ணு மார்புல

மூனு நாளாப் பாக்கல…ஊரில் எந்தப் பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போவும் பூனைய்யா…
வந்து வந்து பாத்து தான் கிறங்கிப் போறேன்யா…

மீனுக்கு ஏங்குற கொக்கு நீ…
கொத்தவே தெரியல மக்கு நீ…
(சர சர)

காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காச்சலா…

மறுமொழி இல்லை இதுவரை

Pages:12345678»