பூவுலகை விட்டு மறைந்தாலும் நினைவுகளில் வாழும் எங்கள் அம்மா பற்றி எழுத நினைக்கிறேன்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சென்னையில் இருந்து அண்ணனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அம்மா நம்மை விட்டுப் பிரிந்தார் என்கிற செய்தியோடு.
உடனே அவசரமாக அடுத்த விமானத்திலேயே அட்லாண்டாவில் இருந்து கிளம்பி சென்னை வந்து, சுவாமிமலைக்குச் சென்றோம். அடுத்த விமானத்திலேயே வந்தாலும், இரண்டாவது நாள் ஆகிவிடுகிறது இந்தியாவில்.
வந்து, பார்த்து, அழுது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்குகளை நிறைவேற்றினோம்.
இந்த புகைப்படம் சென்ற வருடம் (ஜூன் 2022), ஏழாண்டுகளுக்குப் பிறகு அம்மாவைப் பார்த்த முதல் நாளில் எடுத்தது.
அம்மா என்றாலே அன்பு பாசம் நேசம் கருணை எல்லாமே தான்.
உலகத்தின் எல்லா அம்மாக்களையும் போல.
எனக்கு அம்மா ஒரு தோழனும்.
அதிலும் எங்கள் அப்பாவை 2006-இல் இழந்த பிறகு, தோளுக்கு மிஞ்சிய தோழனாய் நடத்தி இருக்கிறார்.
எதையும் பகிர்ந்துகொள்வேன்.
அயல் நாட்டில் வாழ்வதில் உள்ள சவால்களையும், அவதிகளையும், அலுவலகத்தில் நடக்கும் அரசியல் என அனைத்தும் அம்மாவிடம் பேசும் அந்த அரைமணி நேரத்தில் பேசப்பேச நம்மை அறியாமல் நமக்கே இவற்றை சமாளிக்கும் வழிகளும் உத்வேகமும் தோன்றிவிடும்.
என் மகள்களைக் கடிந்துகொண்ட நேரங்களில் அம்மாவிடம் தான் அதற்கு பாவ மன்னிப்பு கேட்பதே. “கோவத்துல சத்தம் போட்டேன் மா”.
கோவிட் காலத்தில், நானே ஒரு பாடகன் என அறிவித்துக்கொண்டு Singer Sadish என முகநூலில் பக்கம் திறந்து, பாட்டுக்களைப் பாட , இந்த தொழில்நுட்ப சவால்களை மீறி , அவர் கைப்பேசியில் ஒரு சில மறுமொழிகளை (“சூப்பர் தம்பி”) தட்டச்சு செய்து அனுப்புவார். இப்பொழுதும் அவற்றைப் பார்க்கும் பொழுது தோன்றும் மகிழ்ச்சியும் உற்சாகமும் என்னவென்று சொல்லுவேன்.
முருக பக்தையான அம்மா எங்கள் இளம் வயதில் பாடிய “கற்பனை என்றாலும்” பாடல். முதன் முதலில் tape recorder வீட்டுக்கு வந்த நாட்களில் அம்மாவைப் பாட வைத்து ஒலிப்பதிவும் செய்து இருக்கிறோம். அம்மாவிற்குப் பிடித்த பாடல்கள் “ஒரு பொய்யாவது சொல் கண்ணே”, “பொய் சொல்ல கூடாது காதலி” என்பதெல்லாம் இனி அவற்றை எங்கேயும் கேட்டாலும் பாடினாலும் நினைவலைகளில் ஒரு புன்னகையை ஏந்துமே.
எனக்கும் என் அண்ணன், தம்பி தங்கைக்கும் பாலமாய் இருந்ததும் அம்மா தான். அம்மாவுடன் பேசும் தொலைபேசி உரையாடலில், இவர்கள் அனைவரையும் கொண்டுவந்துவிடுவார். “ஏன்டா , தம்பி அங்கே தான் இருக்கிறான், ஒரு போன் போட்டு பேசினியா? இல்லை ஒரு எட்டு, போய் பார்த்துட்டு வாயேன்”, “அடுத்த வாரம் இவங்க பர்த்டே வருது அப்போ கால் பண்ணி வாழ்த்து சொல்லிடு.” “அத்தைக்கு உடம்பு முடியலை, நீ ஒரு தடவை போன்ல விசாரிச்சுக்கோ”. “எனக்கு போன தடவை ஹாஸ்பிடல் பில் எக்கச்சக்கமா போச்சு, உங்க அண்ணன் கூட பேசி, நீ எப்படி ஹெல்ப் பண்ணணும்னு பாரு.”
இனி நினைவுகளில் வாழும் என் அம்மாவிற்கு, முதன் முறையாக “அன்னையர் தின வாழ்த்துக்களை” எழுத்தில் அனுப்புகிறேன்.
Happy Mother’s Day 2023
Beautiful Write up Sadish!
Thank you Sridevi.