5

நான் கடவுள் – என் எண்ணங்கள்

நான் கடவுள் ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது.
நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள்.
இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்,
குறிப்பாக

  1. விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் சொல்லிய பாலாவின் நேர்த்தி
  2. மெல்லிய நகைச்சுவை இழையோடும் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை
  3. படம் முழுக்க வியாபித்திருக்கும் ராஜாவின் பொருத்தமான பின்னணியிசை
  4. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு
  5. கதாபாத்திரங்களாகவே மாறிவிட்ட நடிகர்கள் பூஜா, கோவை கிருஷ்ணமூர்த்தி[‘முருகன்’ கதாபாத்திரம்], அறிமுக நடிகர் ராஜேந்திரன் [வில்லன் கதாபாத்திரம்]

என சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம்.

நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.

என்ன தான் சொல்ல வருகிறார் பாலா?

ஒரு வரியில் சொல்வதென்றால், “இயலாமையினால் வரும் துக்கம்…”
ஒரு தந்தைக்குத் தன் மகனைக் காசியில் கண்டுபிடிக்க இயலாமல் போய்விடுமோ என்கிற வேதனை. காசியில் ஒருவரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.
ஒரு தாய்க்குத் தன் மகனை, சாதாரண மனிதனாக இருக்கவைக்க முடியாதா என்கிற வேதனை.
கெஞ்சிப் பார்த்துப் பின் தெளிகிறார்.
தன்னால் நிம்மதியாக வாழவே முடியாதோ என்கிற கண்பார்வையற்ற ஒரு பிச்சைக்காரியின் வேதனை.
காசியில் இருந்து வந்த ஒரு சாமியாரிடம் மோட்சம் கேட்கிறார்.

இவற்றை உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேறு திரைப்படங்களில் வேறு கதாபாத்திரங்களில் இதைப் பார்த்தும் இருக்கலாம். ஆனால்…

naan-kadavul_2
தங்கள் குழுவில் பாட்டுப் பாடிக் கொண்டு, ஒரு குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருந்த கண்பார்வையற்ற ஒரு பெண்ணை, போலீஸின் துணையோடு, பிச்சைக்காரர்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒரு கும்பல், கடத்திப் போகும்போது, அந்த கூத்தாடிக் குழு ஒன்றும் செய்ய முடியாமல், போலீஸ் இன்ஸ்பெக்டரின் காலில் விழுந்துக் கதறும்போது, அந்த வலியை நமக்குள் உணரச் செய்தது தான் இந்தப் படத்தின் சிறப்பு.

கண் தெரியாத அந்தப் பெண், தான் எங்கே கொண்டு போகப் படுகிறோம் என்று தெரியாமல் திணற, ஏதோ ஒரு விலங்கைக் கூண்டில் அடைப்பது போல், ஒரு வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போகும்போது, அந்த வலியை வேதனையை நமக்குள் கொண்டுவருவது பாலாவின் உழைப்பு.

தங்களுக்குள் எந்த சொந்தமும் இல்லாவிட்டாலும் ஒரு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிற சில பிச்சைக்காரர்களுள் நிகழும் சந்தோஷங்களும் துக்கங்களும் மிகச் சிறப்பாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வயதான பிச்சைக்காரராக வருபவர் [கவிஞர் விக்ரமாதித்யன்], அதில் ஒரு குழந்தையைத் தன்னுடைய பேரனைப்போல பார்த்துக் கொள்கிறார். எங்கிருந்தோ வருகிற ஒரு நாயர், அந்தக் குடும்பத்தின் குழந்தைகளை விலைபேசி வாங்கிவிட்டு, அவரிடம் இருந்து அந்தக் குழந்தையைக் கதற கதற பிரித்தெடுத்துப் போகிறான். இயலாமையினால் ஏற்படும் வேதனையின் எல்லையில் அந்தக் கதாபாத்திரம் தவிக்கிற தவிப்பை, விக்ரமாதித்யன் திறம்பட வெளிப்படுத்துகிறார்.

படத்தின் உண்மையான ஹீரோக்கள்
நான் கடவுள்வழக்கமான தமிழ் சினிமாவாக இருந்தால், இது “விஜய் படம்”, இது “சூர்யா படம்” என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் இது ஒரு “ஆர்யா படம்” இல்லை.
ஆர்யா மிகச் சிறப்பாய் நடித்திருக்கிறார். மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த திரைப்படத்தின் நிஜமான ஹீரோக்கள், அந்தப் பிச்சைக்கார குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் தான்.

இன்னிசை ராஜா!
நிச்சயமாய் இளையராஜாவின் இசை, படத்திற்கு என்ன தேவையோ அதைவிட பல மடங்கு கொடுத்திருக்கிறது.
ilayaraaja ஆனால் தீவிர ரசிகனான என்னைப் போன்றவர்கள் இன்னமும் அதிகமாய் எதிர்பார்க்கிறார்கள்.
படத்தின் பின்னணி இசையில், ராஜாவின் குரலில் ஒரு பாடலும் ஒலிக்கவில்லை. அது கொஞ்சம் ஏமாற்றமே. ஒரு வேளை, பாலாவின் எல்லாப் படங்களிலும் பாடினால் ஒரு “Monotonous feeling” வந்துவிடுமோ என்று தவிர்த்திருப்பாரோ?.

முடிவாக
“நான் கடவுள்” – வணிகத் திரைப்படத்திற்குள் ஒரு கலைப் படம்.

sadish

5 Comments

  1. //இயலாமையால் வரும் துக்கம்//

    உண்மை தான். வேறு யாரும் நினைத்து எழுதாத ஒன்றை எழுதி உள்ளீர்கள்.

    இளையராசா, படத்தின் இசை வட்டில் ஒரு பாட்டு பாடி இருந்தார். படத்தின் நீளம் கருதி வெட்டி இருக்கலாம், படமாக்கலேயே விட்டிருக்கலாம்.

  2. வந்தமைக்கும், கருத்துப் பதிந்தமைக்கும் நன்றி ரவி.

    “ஒரு காற்றில் அலையும் சிறகு” – நானும் அந்தப் பாடல் இருக்குமென எதிர்பார்த்தேன்.

    நன்றி,
    சதீஷ்.

  3. Sir,
    how can i write in tamil in ur kirukkalkal.Iam tamil lit but a malayali.I like tamil epics and so on.I love ur Way of approch in tamil blog.I want to write my openion in tamil through ur blog.Pls guide me.Iam a PRO in Chennai.Egarly waiting for ur reply.
    Flora

    • Thanks for writing a comment here Flora. Actually You should install a software called ‘e-kalappai’ in order to write in Tamil on this website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *