அஞ்சலி

குரலாய் வாழும் ஸ்வர்ணலதா

swarnalatha

ஸ்வர்ணலதாவின் திடீர் மறைவு, தமிழ் சினிமா இசைக்கும், என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு…
சொல்வனத்தில் மிக அழகாக அவரின் பல பாடல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

அவரின் “என்னுள்ளே என்னுள்ளே”, “மாலையில் யாரோ”, “போறாளே பொன்னுத்தாயி”, “எவனோ ஒருவன்” என எத்தனையோ பாடல்கள் எப்படியும் உங்கள் காதுகளை எட்டிவிடும்.
ஆனால் அவ்வளவாகக் கேட்கப்படாத அவரின் சில பாடல்களை இங்கே தருகிறேன்.

பாடல்: பாரடி குயிலே
இசை: இசைஞானி
படம்: நாங்கள்

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/Naangal-PaaradiKuyile.mp3″ title=”பாரடி குயிலே”]

பாடல்: அந்திக் கருக்கையிலே
இசை: வித்யாசாகர்
படம்: அள்ளித் தந்த வானம்

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/anthi-karukkaiyile.mp3″ title=”அந்திக் கருக்கையிலே”]

இதே படத்தில் இருந்து “தட்டான் கிடைக்கலையோ” என்று இன்னும் உருக்கமான பாடலும் ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார். அதைத் தேடல் உள்ளவர்கள் கேட்கட்டும்.

பாடல்: புதிய பறவை பறந்ததே
இசை: இசைஞானி
படம்: தென்றல் வரும் தெரு

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/10/puthiya-paravai-paranthathe.mp3″ title=”புதிய பறவை பறந்ததே”]

ஸ்வர்ணலதா,
குரலாய் என்றென்றும் வாழ்வாய் நீ!

விருத்தம்

சமீபத்திய என் கர்நாடக இசைத் தேடலில் ரஞ்சனி & காயத்ரி …

ரஞ்சனி காயத்ரிசமீபத்திய என் கர்நாடக இசைத் தேடலில் ரஞ்சனி & காயத்ரி சகோதரிகள் பாடிய சில விருத்தங்கள் என் காதில் பட்டது.
கேட்ட பிறகு இந்தப் பாடலை எழுதியது யார் என்று தேடி, இது கம்ப ராமாயணத்தில் இருந்து வருவது என் கண்ணில் பட்டது (நன்றி: R. பிரபு).
நான் கண்டதையும் கேட்டதையும் எழுதத் தானே இந்த கிறுக்கல்கள் தளமே!

நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே

காணொளி இங்கே.

சுருக் அர்த்தம் என்னவென்றால்,
பல அரக்கர்களின் சேனையை அழித்து சாம்பலாக்கி, வெற்றி வாகை சூடிய ராமனின் தோளின் வலிமையைப் பாடுபவர்க்கு, நினைத்த பொருள் கிடைக்கும், ஞானம், புகழ் உண்டாகும். அவரது வீடு நன்றாக இருக்கும். லக்ஷ்மியின் அருள் பார்வை கிடைக்கும்.
கமலை – லக்ஷ்மியை
வாகை – என்பது ஒரு மலர், வெற்றி பெற்றவர்களின் தோள்களில் மாலையாவது.
நீறு – சாம்பல்.

ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், ராகத்தையும் பாவத்தையும் தமிழ் உச்சரிப்பையும் சிதைக்காமல் பாடுவது நம் காதுகள் செய்த புண்ணியம்.
இந்த விருத்தத்தில் சிறிது நேரம் சஞ்சாரித்துவிட்டு, அடுத்த விருத்தத்தைத் தொடங்குகிறார்கள்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…

பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. மிக எளிமையான வரிகள். இதுவும் கம்ப ராமாயணத்தில் இருந்து வருகிறது.
“ராமா” என்ற இரண்டெழுத்தை மட்டும் இவர்கள் பாடுவதைக் கேளுங்கள்.
[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/09/ViruthamFollowedByRamaNamame.mp3″ title=”ரஞ்சனி காயத்ரி விருத்தம் – ராம நாமமே”]

பிடித்த பாடல்

சமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, …

aayiram-aayiram-gopiyargaloduசமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் என் கண்ணில் பட்டது.
பாம்பே ஜெயஸ்ரீயின் ரசிகன் ஆனதால் அவர் பாடிய இந்தப் பாடலைப் பதிவிறக்கம் செய்து கேட்டேன்.
மிக அருமையான பாடல். சமீபத்தில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர்: திரு.எம்.கே.தண்டபாணி பிள்ளை
முதலில் பாடிப் பிரபலமாக்கியது: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: சாருகேசி
தாளம்: ஆதி

ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு நடம்
ஆடி விளையாடி வரும் ஆனந்த கிருஷ்ணன்..(அவன்)

நேயமோடு என்னை அவன் நாடி வந்து நின்றிடுவான்
நீல வர்ணக் கண்ணன் அவன் கோலக் குழல் ஊதி நின்றான்…(ஆயிரம்…)

கொஞ்சும் சலங்கை ஒலிக்க வஞ்சியரின் வீட்டுத்
தயிர்ப் பாலை எல்லாம் உண்டு பசுபோலே ஒளிந்திடுவான்

அஞ்சி நின்று அடியும் பட்டு அன்னையும் வியந்திடவே
அண்ட சராசரம் பவள வாயில் காட்டிடுவான்…(2)
(ஆயிரம் ஆயிரம்)

இது தான் ஓரளவுக்குச் சரியான பாடல் வரிகள், பாம்பே ஜெயஸ்ரீ பாடுவதில் சில வார்த்தைகளைத் தவறாக உச்சரிக்கிறார், இருந்தாலும் அவர் குரலினிமைக்காகவும், ராகானுபவத்திற்காகவும் ரசிக்கலாம். கீழே கிளிக்குங்கள்.

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/08/Aayiram-Aayiram-Charukesi-Adi.mp3″ title=”ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு”]

அனைவருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

நன்றி:
Aayiram Aayiram English Lyrics and Information
சாருகேசியில் அமைந்த பாடல்கள்

குறும்படம் · பிடித்த வீடியோ

நெஞ்சுக்கு நீதி – குறும்படம்

சமீபத்தில் கலைஞர் தொ.காவில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஒரு குறும்படம் ஒளிபரப்பானது.
நளன் என்கிற ஓர் இயக்குனரின் “சீரியஸ் காமெடி”. மிகவும் ரசித்தேன். சமீபத்தில் YouTube இல் தென்பட்டது. முழுப்படமும் பத்து நிமிடங்களுக்கும் குறைவு தான் ஆனால் இரண்டு பாகங்களாக இருக்கிறது..
பார்த்து ரசியுங்கள்.
நெஞ்சுக்கு நீதி பாகம் 1 : 8 ஆவது நிமிடத்தில் தொடங்குங்கள்.

நெஞ்சுக்கு நீதி பாகம் 2

நாட்டு நடப்பு

இசைஞானி இளையராஜாவிற்கு இந்திய அரசு, பத்மபூஷண் விருதினை வழங்கி, விருதிற்குப் …

Ilayaraaja -at a Press Meet
இசைஞானி இளையராஜாவிற்கு இந்திய அரசு, பத்மபூஷண் விருதினை வழங்கி, விருதிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
அது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர் கொடுத்தது நிருபர்களுடனான ஒரு சந்திப்பு. நான் கொடுப்பது இந்தப் பதிவு.

வாழ்த்துக்கள் ராஜா சார்!

[Ilayaraaja -at a Press Meet – படம் நன்றி: IndiaGlitz.com]

பிடித்த பாடல்

கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்

என் அப்பா தொடர்ந்து பல வருடங்கள், சபரிமலைக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, தரிசனம் செய்து வந்து இருக்கிறார்கள்.
பக்தி என்றால் என்ன என்பதை வாழ்க்கையாக நடத்திக் காண்பித்த நாட்கள் அவை.

அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் எழுதி இசையத்து, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள்.
இப்பவும் வரிகள் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்குப் பதிந்தவை.

காலங்கள் உருண்டோட, இப்போது அந்த ஒலிப்பேழைகள் போன இடம் தெரியவில்லை.
கடைகளில் கிடைக்குமா? தெரியவில்லை…

இன்று காலையில் ஏனோ “கார்த்திகை அதிகாலை நீராடி” பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
மதியம் கூகுளாண்டவரிடம் மன்றாடியதில் கடைசியாக அந்தப் பாடல் youtube-ல் தரிசனம்.

இப்போது அது உங்களுக்காக!
Continue reading “கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்”

பயனுள

பயிர் [payir.org] சமூக சேவை அமைப்பு

என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்தவரும், நண்பருமான செந்தில் குமார் இந்தியாவில் நடத்தும் ஒரு சமூக சேவை அமைப்பு தான் “பயிர்”.
அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, அது வரை, பத்து வருடங்களில் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்தியா சென்றார்.
திருச்சி அருகில் உள்ள “தேனூர்” என்கிற கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடமும், ஆரம்ப சுகாதார நிலையமும் ஆரம்பித்து, அந்த ஊர் மக்களுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் இலவசமாய் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது பேட்டி சமீபத்தில் விஜய் டி.வியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பானது. அதன் ஒளி ஒலிப்பதிவை இங்கே பதிவதில் எனக்கொரு பெருமை.

அவருக்கும் அவரது அமைப்புக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்ய, அவரது இணைய தளத்தைப் பாருங்கள்.

சினிமா விமர்சனம்

சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, “அச்சமுண்டு அச்சமுண்டு” …

சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தை, திரையரங்கில் சென்று பார்த்தேன்.
வெளியான முதல் நாளிலேயே பார்த்திருக்க வேண்டியது, எப்படியோ தள்ளித் தள்ளிப் போய், “இன்று இப்படம் கடைசி” என்று தெரிந்தபிறகு கடைசி நாளில், குடும்பத்துடன் சென்று அமர்ந்தேன்.

இயக்குநர் எனக்குத் தெரிந்தவர் என்றாலும்,சமநிலையில் இருந்து இந்தத் திரைப்படத்தைக் குறித்த என் பார்வையைப் பதிகிறேன்.

aa1 சமூகத்திற்குத் தேவையான ஒரு செய்தியை, ஒரு சினிமாவுக்குள், சினிமாத்தனங்கள் இல்லாமல் பதிவு செய்து இருக்கும் ஒரு நல்ல முயற்சி. உங்களுக்கு அருகாமையில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தால், கட்டாயம் சென்று பாருங்கள்.
இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

படத்தின் திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும்,
1. சினேஹா, ப்ரசன்னா மற்றும் ஜான் ஷேயின் நடிப்பு
2. திறமையான இயக்கம்
3. கொடூரமான வில்லத்தனத்தையும் சொல்லாமல் சொல்லிப் புரியவைக்கும் காட்சியமைப்புகள்
4. படத்தின் மையக் கருத்து
போன்ற பல நல்ல விஷயங்களுக்காக அவசியம் பார்க்கவேண்டிய படம்.
படத்திற்கு கிறுக்கல்ஸ்.காம் வழங்கும் மதிப்பெண் : 55